`377-வது பிரிவு செல்லாது'- தன் பாலின சேர்க்கைக்கு அங்கீகாரம் அளித்தது உச்ச நீதிமன்றம்!



Sponsored



`தன் பாலின உறவு' குற்றம் என்று வரையறுக்கப்படும் சட்டப் பிரிவு 377 ஐ நீக்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

தன் பாலின உறவை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அதைக் குற்றச் செயல்களின் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்றும் இந்தியாவில் பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்துவருகிறது. தன் பாலின உறவை அங்கீகரிக்க வேண்டும் என்று எல்.ஜி.பி.டி குழுவைச் சேர்ந்த ஐந்து பேர் 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கைத் தொடர்ந்த ஐவரும் சமூக அந்தஸ்தில் உயரிடத்திலுள்ளவர்கள். அவர்கள் குறிப்பிட்டுள்ள மனுவில், `சட்டத்தின் முன்னால், மதம், இனம், மொழி, பாலினம், பிறப்பின் அடிப்படையில் பேதம் இருக்கக் கூடாது. ஆனால், சட்டப் பிரிவு 377, அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. தன் பாலின சேர்க்கையாளர்கள் அச்சத்துடனேயே வாழ வேண்டிய சூழல் உள்ளது. நிறைய மிரட்டல்களைச் சந்திக்கவேண்டி உள்ளது' என்று குறிப்பிட்டிருந்தனர்.

Sponsored


அந்த வழக்கில் இன்று தீர்ப்பை வாசித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, `ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும். யாரும் அவர்களுடைய தனிப்பட்ட தன்மைகளிலிருந்து விடுபட முடியாது. தனிப்பட்ட தன்மைகளை ஏற்பதற்கான சூழல் சமூகத்தில் உள்ளது. இந்த வழக்கில் எல்லாக் கோணங்களிலும் ஆராய்ந்துள்ளோம். எல்லாக் குடிமகன்களைப் போலவும், தன் பாலினச் சேர்கையாளர்களுக்கு வாழ்வதற்கான உரிமை உள்ளது. ஒவ்வொருவருடைய தனிப்பட்ட உரிமையை மதிப்பதுதான் உச்சபட்ச மனிதநேயம். ஓரினச் சேர்க்கையைக் குற்றமாக்குவது பகுத்தறிவற்றது மற்றும் சகித்துக்கொள்ள முடியாதது. தன் பாலினச் சேர்க்கையைக் குற்றமாக வரையறுக்கும் 377-வது பிரிவு செல்லாது' என்று தெரிவித்தார். 

Sponsored




Trending Articles

Sponsored