ஆட்சியைக் கலைத்த கையோடு வேட்பாளர்களை அறிவித்த சந்திரசேகர ராவ்...!



ஆட்சியைக் கலைத்த கையோடு 105 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.

Sponsored


கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதுடன் அங்கு, சந்திரசேகர ராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் சந்திரசேகர ராவின் ஐந்தாண்டு ஆட்சிக்காலம் முடிவடைகிறது. இதே நேரத்தில், தெலங்கானா மாநில சட்டசபைத் தேர்தலுடன் மக்களவை பொதுத்தேர்தலும் நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், இந்த ஆண்டே சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள நினைத்த முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவை சட்டசபையைக் கலைக்க ஒருமனதாக முடிவு எடுத்து அதற்கான பரிந்துரைக் கடிதத்தை ஆளுநர் நரசிம்மனிடம் நேற்று வழங்கியது. அவர்களின் வேண்டுகோளை ஏற்று ஆட்சியைக் கலைக்க ஆளுநர் உத்தரவிட்டார். தற்போது காபந்து முதல்வராகச் சந்திரசேகர ராவே நீடிக்க ஆளுநர் நரசிம்மன் கேட்டுக்கொண்டார். 

Sponsored


இதற்கிடையே, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு, இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களுக்குத் தேர்தல் நடக்கும் அதே நேரத்தில், தெலங்கானா மாநிலத்துக்கும் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இதை எதிர்கொள்ளும் வகையில் தற்போதே தேர்தலுக்குத் தயாராகி வருகிறது தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சி. தேர்தல் வேலைகளை முடுக்கி விட்டுள்ள சந்திரசேகர ராவ் ஆட்சி கலைக்கப்பட்ட கையுடன் 105 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்துள்ளார். மொத்தம் 119 தொகுதிகளில் உள்ள நிலையில் மீதம் உள்ள தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வேட்பாளர் பட்டியலில் சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் இருவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 

Sponsored


மேலும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளனர். எனினும் சந்திரசேகர ராவ் போட்டியிடும் தொகுதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. வேட்பாளர்கள் அறிவித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரசேகர ராவ், ``காங்கிரஸ்தான் தெலங்கானாவின் முதல் எதிரி. அதில் மாற்றம் கிடையாது. பிரதமர் மோடியைக் கட்டியணைத்து கண்ணடித்த ராகுல் காந்தி நாட்டின் மிகப்பெரிய கோமாளி. அரசியல் நோக்கத்துடன் சட்டசபை கலைக்கப்படவில்லை. வரும் நவம்பர் மாதத்துக்குள் தேர்தல் வரும் என எதிர்பார்க்கிறேன். தேர்தலுக்குத் தயாராகும் விதமாக நாளை முதல் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளோம்" என்றார்.



Trending Articles

Sponsored