`ராஜ்நாத் சிங்கை சந்தியுங்கள்; பிரதமரை சந்திக்க முடியாது என்கிறார்கள்'- கேரள எம்.பி-க்கள் வேதனை



வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி பிரதமரைச் சந்திக்க அனுமதி கேட்ட கேரள எம்.பி-க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் பிரதமர் மோடி கேரள மக்களை அவமதித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. 

Sponsored


கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் கேரளா பெரிதும் பாதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. பெரும் பொருள் சேதமும் உயிர்ச்சேதமும் ஏற்பட்டது. நாடுமுழுவதும் இருந்து கேரள மக்களுக்கு உதவிகள் குவிந்தன. இதனால் வெள்ளப் பாதிப்பிலிருந்து கேரள மக்கள் மெதுவாக மீண்டு வருகிறார்கள். இருப்பினும் கேரளாவில் இன்னும் இயல்பு வாழ்க்கை முழுமையாகத் திரும்பவில்லை. 

Sponsored


இந்த நிலையில், கேரளாவுக்கு பெரும் பொருள் சேதம் ஏற்பட்டிருப்பதால் மத்திய அரசு கூடுதல் நிதியுதவி அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி-க்கள் குழுவினர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கேரள முன்னாள் முதல்வருமான ஏ.கே.அந்தோணி தலைமையில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி-க்கள் குழுவினர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தபோதிலும் அவர்களைச் சந்திக்க பிரதமர் மறுத்துவிட்டார். இந்த விவகாரம் கேரளாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளான ஆலப்புழா நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி-யும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான கே.சி.வேணுகோபால் இது குறித்து கூறுகையில், ``வெள்ளத்தால் கேரளா பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அதனால் இதுவரையிலும் மத்திய அரசு அளித்த உதவி போதுமானதாக இருக்கவில்லை. அதனால் கூடுதல் நிதியுதவி அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவும் வெளிநாட்டு உதவியைப் பெறுவதில்லை என்கிற கொள்கையை தளர்த்தக் கோரியும் பிரதமரை சந்திக்க அனுமதி கோரினோம். அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த எம்.பி-க்கள் சார்பாக பிரதமருக்கு கடந்த மாதம் 27-ம் தேதியே அனுமதி கேட்டு கடிதம் கொடுத்திருந்தோம். ஆனால், எங்களை அழைத்த பிரதமர் அலுவலக அதிகாரிகள், ’நீங்கள் பிரதமரைச் சந்திக்க முடியாது. அதனால் உள்துறை அமைச்சரைச் சந்தித்து உங்களுடைய கோரிக்கைகளை அவரிடம் தெரியப்படுத்துங்கள். அவர் உங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வார்’ எனத் தெரிவித்தனர்.

Sponsored


நாங்கள் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டால் அவர்கள் உள்துறை அமைச்சரைச் சந்திக்கச் சொல்கிறார்கள். நாங்கள் ஏற்கெனவே உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் கிராமப் புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தாமோரையும் சந்தித்து விட்டோம். அதனால் மீண்டும் அவரைச் சந்திப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. கேரள மக்களின் கோரிக்கைகளை பிரதமரிடம் தெரிவிக்க விரும்பினோம். அவர் மறுத்து விட்டார். இது எங்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கேரள மக்களையும் அவர் அவமானப்படுத்தியதாகவே நாங்கள் கருதுகிறோம்’’ என்றார்.



Trending Articles

Sponsored