ரூபாய் மதிப்பு சரிவு: என்.ஆர்.ஐ-க்கள்  உதவியை நாட அரசு முடிவு! Sponsoredரூபாய் மதிப்பு சரிவைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதோடு, வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் உதவியையும் நாடத் திட்டமிட்டுள்ளது

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில், ரூபாய் மதிப்பில் மேலும் ஒரு பின்னடைவாக நேற்று திங்கள்கிழமை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 72.32 ஆகச் சரிந்தது. இதன்மூலம் 2018-ம் ஆண்டில் மட்டும் இதுவரை ரூபாய் மதிப்பு 13 சதவிகிதம் சரிந்துள்ளது. 

Sponsored


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, வர்த்தக போர் உள்ளிட்ட சில உலகளாவிய பிரச்னைகளே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. கச்சா எண்ணெய்யைப் பொறுத்தமட்டில் உலக அளவில் இந்தியா மிக அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில், 2018 ஜூலை வரை கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலுத்திய தொகை, முந்தைய ஆண்டின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 76 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

Sponsored


இதன் காரணமாக இந்திய இறக்குமதி நிறுவனங்களுக்கு, இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்குக் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த நிறுவனங்களுக்கு, அவர்களது வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதிலும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. இது மத்திய அரசுக்குக் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது.  

இதனிடையே ரூபாய் மதிப்பைச் சரிவை ஈடுகட்டுவதற்காக ரிசர்வ் வங்கி, தனது கையிருப்பில் உள்ள டாலர்களை பணச் சந்தையில் விற்று வருகிறது. இதனால், அந்நியச் செலாவணியின் புழக்கம் அதிகரிக்கும். அதே சமயம் ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி கையிருப்பு 400 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத மத்தியில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 426 பில்லியன் டாலராகக் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், ரூபாய் மதிப்பு சரிவைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக்கொண்டுள்ள மத்திய அரசு, தனது தரப்பு நடவடிக்கையாக வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் உதவியை நாடத் திட்டமிட்டுள்ளது. அவர்கள் தங்களது சேமிப்புகள் மற்றும் முதலீடுகளை டாலரில் இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்வதோடு, அரசு பாண்டுகளும் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது. 2013-ம் ஆண்டு இதேபோன்ற நிலை ஏற்பட்டபோதும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு அனுப்பும் டாலர்களுக்காகச் சில சலுகைகளை அறிவித்தது. இதனால், அப்போது சுமார் 34 பில்லியன் டாலர்கள் இந்தியாவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே ரூபாய் மதிப்புச் சரிவைத் தொடர்ந்து, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்,  தங்கள் குடும்பத்துக்குப் பணம் அனுப்புவது அதிகரித்துள்ளது. பலர் தாங்கள் பணிபுரியும் நாடுகளில் உள்ள வங்கிகளில், தனிநபர் கடன் வாங்கியும் அனுப்பி வருகின்றனர். Trending Articles

Sponsored