தூக்கத்தை இழக்க செய்த பேருந்து பயணம் - ஒரு கேரள பெண்ணின் குமுறல்Sponsoredபேருந்தில் பயணம் செய்யும் பெண்கள், அன்றாடம் பல பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். அதுவும் கூட்டமான பேருந்து என்றால் சொல்லவே வேண்டியதில்லை. நெரிசலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சில ஆண்கள், பெண்களுக்கு கொடுக்கும் தொல்லைகளுக்கு எல்லையே இல்லை. பேருந்து பயணங்களில் இதுபோன்ற பிரச்னைகளை பள்ளி மாணவிகள் முதல் வயதான பெண்கள் வரை அனைத்துப் பெண்களுக்குமே ஏற்படுகிறது. பெரும்பாலான பெண்கள் வெளியில் சொல்லத் தயங்கிக் கொண்டு சொல்லாமல் இருந்து விடுகிறார்கள். தங்களை மற்ற பயணிகள் தவறாக நினைக்கக் கூடும் என்பது அவர்களின் அச்சம். ஆனால், இப்போதெல்லாம் பெண்கள், தைரியமாக இதுபோன்ற தொல்லைகளை எதிர்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள். பகல் நேர பயணத்தில் தான் இப்படிபட்ட தொல்லைகள் என்றால், முன்பதிவு செய்து ஸ்லீப்பர் பேருந்துகளில் இரவு நேரத்தில் பயணம் செய்யும்போது, நடக்கும் பாலியல் தொல்லைகள் அதைவிட அதிகம். 

அன்னி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 29 வயது பெண். திருவனந்தபுரத்தில் தன்னுடைய மூன்று நாள் பயிற்சி வகுப்புகளை முடித்துவிட்டு மாலாபுரத்தில் உள்ள தன் சொந்த ஊருக்கு பேருந்தில் பயணம் செய்யக் காத்திருந்தார். தனியார் பேருந்தான கேலக்ஸி டிராவல்ஸில்  இரவு 9 மணிக்கு ஏறினார். அன்னியின் பக்கத்து இருக்கையில், கொல்லத்தில் ஒரு பெண் பயணி இரண்டு மணி நேரத்துக்கு பிறகு ஏறுவார் என பேருந்து நடத்துனர் கூறியுள்ளார். அதைக் கேட்ட அன்னி, எட்டு மணி நேரம் நிம்மதியாக உறங்க முடியும் என நினைத்தார்.

Sponsored


அன்னி ஒரு பிரபல நாளிதழுக்கு கொடுத்த பேட்டியில், “யாரோ ஒருவர் என்னுடைய பக்கத்தில் இருந்து தொடுவது போல இருந்தது. பதற்றத்தில் அலறி அடித்து எழுந்தேன். பேருந்தில் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்ததால் என்னால் அவரின் முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை. நான் அலறிய சத்தத்தில் நடத்துநர் விளக்கை ஆன் செய்தார். அதற்குள் அந்த நபர் முன்னாடி இருக்கும் கதவின் அருகே சென்று விட்டார். நான் தூங்கிக் கொண்டு இருந்ததால், என் பக்கத்தில் ஒரு ஆண் இருப்பதை நான் கவனிக்கவில்லை. மேலும், பேருந்தில் இருக்கும் அலாரத்தை நான் அழுத்தினேன். பேருந்து நடத்துநரோ தனக்கு அந்த நபர் எப்படி உள்ளே வந்தார் என்று தெரியவில்லை என பதிலளித்தார்” என்று கூறியுள்ளார்.

Sponsored


அன்னி இந்த சம்பவம் பற்றி நடத்துநரிடம் கேட்டபோது அவர் தெளிவான பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் ஏற்பட்டு, மாலாபுரம் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டுள்ளார். அதைப் பார்த்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும், ‘அந்த நபர் யார் என்று தங்களுக்கு தெரியாது. அவர் லிப்ட் கேட்டதால் கொடுத்தோம்’ என்று கூறியுள்ளனர். ஆனால், அன்னிக்கு அவர்கள் இருவரும் இந்த சம்பவம் நடக்க உதவி இருப்பார்கள் என்ற சந்தேகம் இருந்தது. 

“முதலில் ஒரு பெண்தான் என் பக்கத்து இருக்கையில் பயணிக்கும் நபர் என்று கூறினார். பின்பு, இரண்டு இருக்கைகளும் காலியாக இருந்த பட்சத்தில், நான் முதலில் இருக்கும் இருக்கையில் தான் அமர்ந்தேன். பேருந்து ஓட்டுநரின் அனுமதியின்றி யாரும் உள்ளே வருவதற்கான வாய்ப்புகள் இல்லை” என்று அன்னி கூறினார். 

பேருந்தில் இருக்கும் மற்ற பெண்களும், தங்களுக்கும் இதேபோன்ற சம்பவம் முன்பு ஏற்பட்டுள்ளது என கூறியது அன்னிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பேருந்தில் பயணம் செய்த ஒரு மாணவி, தான் இந்த பேருந்தில் நிறைய தடவை பயணம் செய்துள்ளதாகவும், அவருக்கும் இதேபோல அனுபவம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். "மேலும், பெண்களை தன் பக்கத்து இருக்கையில் அமர வைப்பதாகக் கூறி, பின்னர் ஆண்களை அமர வைப்பார்கள்” என்று அன்னி கூறினார்.

மாலாபுரம் வந்த பின்னர் அன்னி திருவனந்தபுரம் டி.ஜி.பி மற்றும் கமிஷனரிடம் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், இரண்டு நாட்கள் கழித்து, புகாரை கேரள முதலைமைச்சருக்கு அனுப்பினர். 

“பெண்கள் தங்களுக்கு நடக்கும் பிரச்னைகளைப் பற்றி வெளியே சொல்ல பயப்படுகிறார்கள் என எனக்கு தோன்றுகின்றது. பயணம் செய்த ஒரு பயணி, இதுபோன்ற தொல்லைகளை வெளியே சொன்னால் தனக்கு பாதுகாப்பு இருக்காது என்று கருதுகிறார். மேலும், பேருந்தில் கண்காணிப்பு கேமராவும் பொறுத்தப்படவில்லை”என்றார் அன்னி.

பெண்கள் சுதந்திரமாக சென்று பழக வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்கிறது இந்த சமூகம். ஆனால், இன்று பல பேர் பயணம் செய்யும் பேருந்தில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை உள்ளது. இதுபோன்ற செயல்களுக்கு, நாம் என்ன மாதிரியான மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறோம்?

 - நந்தினி சுப்பிரமணிTrending Articles

Sponsored