"நம்புங்க ப்ரோ... எல்ஜி மொபைல் கொசு விரட்டும்!" - சர்டிஃபிகேட் தந்த சென்னை அமைப்புSponsoredஒரு மொபைல் வெளியானால் அதுவரை நாம் கேள்விப்படாத  ஏதாவது ஒரு வசதி இடம்பெற்று விடுகின்றது.  டூயல் கேமரா , AI , விர்ச்சுவல் ரியாலிட்டி என  புதுப்புது வசதிகளை கொடுத்துக்கொண்டே இருக்கின்றன மொபைல் நிறுவனங்கள்.  உலகில் வேறு எந்த  மொபைல் நிறுவனமும் நினைத்து கூட பார்க்காத  வசதியை ஒரு மொபைலில் கொடுத்திருக்கிறது  எல்ஜி. அப்படி என்ன வசதி என்று நீங்கள் கேட்டால், இந்த மொபைல் கொசு விரட்டும். உண்மைதான். "உலகின் முதல் கொசு விரட்டும் மொபைல்" என்ற அடைமொழியோடு  அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது எல்ஜி நிறுவனத்தின் LG K7i ஸ்மார்ட்போன்.

Sponsored


Sponsored


LG K7i சிறப்பம்சங்கள்

  • 5 இன்ச்   திரை
  • 1.1 GHz குவாட்கோர் ப்ராசஸர்.
  • 2  ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரி.
  • 8 மெகாபிக்சல் பின்புற கேமரா.
  •  5 மெகாபிக்சல் முன்புற கேமரா.
  •  2500 mAh பேட்டரி திறன்.
  • 6.0 மார்ஷ்மெல்லோ  இயங்குதளம்.

டெல்லியில் நடந்த மொபைல் கண்காட்சியில் இந்த மொபைலை அறிமுகப்படுத்தியிருக்கிறது எல்ஜி நிறுவனம். 5 இன்ச்  திரை கொண்ட இந்த மொபைலின் சிறப்பாக எல்ஜி குறிப்பிடுவது இது கொசுவை உங்கள் அருகில் வராமல் தடுக்கும் என்பதுதான். இந்த மொபைலின் பின்புற கவரில் அல்ட்ராசோனிக் சாதனம் ஒன்று இருக்கிறது. அதன் மூலமாக கொசுக்களை தடுக்க  முடியும் என்று தெரிவித்திருக்கிறது எல்ஜி.

எப்படி செயல்படுகிறது இந்த தொழில்நுட்பம்?


கொசுக்கள் மற்றும் இதர பூச்சிகளை  விரட்டுவதற்காக இது போன்ற அல்ட்ராசோனிக்  தொழில்நுட்பங்கள் ஏற்கனவே உலகம் எங்கும் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால், ஒரு மொபைலில் பயன்படுத்தப்படுவது இதுதான் முதல் முறை . இதில் இருக்கும் அல்ட்ராசோனிக் சாதனம் 30 kHz அளவிற்கு ஒலி அலைகளை உருவாக்கும். மனிதர்களால் அதிக பட்சமாக 20 kHz அளவிற்கு மட்டுமே ஒலிகளை மட்டுமே உணர முடியும் என்பதால் இதை  மனிதர்களால் கேட்க முடியாது. ஆனால் இந்த அல்ட்ராசோனிக்  ஒலியை பூச்சிகளால் உணர முடியும். இந்த ஒலி அவற்றை எரிச்சலூட்டலாம்  என்பதால் ஒலி வெளியாகும் இடத்தின் அருகே அவை வருவதில்லை. இதை மையமாக வைத்தே இந்த தொழில்நுட்பம் செயல்படுகிறது. இந்த மொபைலும் அதே  தொழில்நுட்பத்தில்தான்  இயங்குகிறது. இதை இயக்குவதன் மூலமாக மொபைலை சுற்றி ஒரு மீட்டர் அளவிற்கு கொசு வராமல் தடுக்க முடியுமாம். ஆய்வகத்தில் நடைபெற்ற  பரிசோதனையில் 72.32% அளவிற்கு கொசுக்களை  தடுப்பதாக சான்றிழ் அளித்திருக்கிறது சென்னை படப்பையில்  இருக்கும் IIBAT நிறுவனம். இந்தத் தொழில்நுட்பம் பாதுகாப்பானது, இதில் இருந்து எந்த விதமான  கதிர்வீச்சோ ஏற்படாது.இதன் மூலமாக கொசுக்களை தடுப்பதற்கு பயன்படுத்தும் ரசாயனங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்  என தெரிவித்திருக்கிறது எல்ஜி.


அல்ட்ராசோனிக்  தொழில்நுட்பம் இந்த  மொபைலின் மீது கவனத்தை ஈர்த்தாலும் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தவில்லை எல்ஜி . 1.1 GHz குவாட்கோர் ப்ராசஸர், 2500 mAh பேட்டரி 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளம் என  இதில் இருப்பது எல்லாமே பழைய வசதிகள் என்பதால் இதை வாங்குவதற்கு பலரும் யோசிப்பார்கள். 7,990 ரூபாயாக  விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது LG K7i. இதே விலையில் வேறு பல நிறுவங்களின் ஸ்மார்ட்போன்கள் அதிக வசதியை கொண்டிருக்கின்றன. 

பலருக்கு இது போன்ற கொசு விரட்டும் ஆப்கள் சிம்பியான் காலத்தில் இருந்தே இருப்பது ஞாபகத்திற்கு  வரலாம். அந்த ஆப் செயல்படுகிறதா என்பது  தெரியாமல் அதை இன்ஸ்டால் செய்து  கொசுக்களை விரட்டியவர்கள்(?) பலர் உண்டு. அதே போல இந்த மொபைலும் இல்லாமல் இருந்தால் சரி. "உலகின் முதல் கொசு விரட்டும் மொபைல்" என்ற பெயர் ஒரு பக்கம் இருந்தாலும் ஸ்மார்ட்போன்கள் கொசு விரட்ட பயன்படுத்தப்படுவதில்லை என்ற உண்மை எல்ஜி நிறுவனத்திற்கு கூடிய விரைவில் தெரியவரலாம்.


 Trending Articles

Sponsored