“ஆமாம்ப்பா... ஸ்மார்ட்போன் இளைஞர்களைத் தற்கொலைக்குத் தூண்டுவது உண்மைதான்..!” - எச்சரிக்கும் ஆய்வு முடிவுSponsoredஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை நம்மை அறியாமலே மொபைலை தேடுகின்றன கைகள். (அஞ்செல்லாம் இல்லப்பா மூணுதான் என்பவர்கள் இன்னும் பாவம்). பெரியவர்களைவிட மொபைலைப் பற்றி அதிகமாக தெரிந்துவைத்திருக்கின்றன குழந்தைகள். இப்படி அனைத்து வயதினரும் ஸ்மார்ட்போனுடன் எப்போதும் இணைப்பில் இருக்கிறார்கள். 46 சதவிகித அமெரிக்கர்கள் ஸ்மார்ட்போன் இல்லாமல் தாங்களால் வாழ முடியாது என்று ஓர் ஆய்வில் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக இளம்வயதினர். சமீபகாலமாக இளம் வயதினரிடையே தற்கொலைகள் அதிகமாக நிகழ்வதற்கு அவர்கள் ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துவதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அதிர்ச்சியளிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மூளையைக் குழப்பும் ஸ்மார்ட்போன்கள்

Sponsored


 

Sponsored


இளம்வயதினர் ஸ்மார்ட்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் பதற்றம், தூக்கமின்மை, மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் அவர்களிடத்தில் அதிகம் ஏற்படலாம். ரேடியோலாஜிக்கல் சொஸைட்டி ஆப் நார்த் அமெரிக்காவின் வருடாந்திர மாநாட்டில் தான் இதுதொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தென் கொரியாவின் சியோல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹுவாங் சுக்சியோ மற்றும் அவரது குழுவினர் இந்த அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார்கள்.

15 முதல் 16 வயதுடைய 19 இளைஞர்களிடத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 12 இளைஞர்களிடம் இணையத்துக்கு அடிமையான காரணத்தால் அவர்களின் அன்றாட வாழ்க்கை முறை, தூங்கும்நேரம், செயல்திறன், சுற்றி இருப்பவர்களிடம் பழகும் தன்மை போன்றவற்றில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன போன்றவை தொடர்பாகவும்  ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும்பொழுது மூளையில் ஏற்படும் பாதிப்புகளை அறிந்துகொள்வதற்காக Magnetic Resonance Spectroscopy என்ற கருவி இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவி மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களை கண்டுணரும். இதில் இரண்டு விதமான நியூரோட்ரான்ஸ்மீட்டர் அளவீடுகள் கணக்கிடப்பட்டன. ஒன்று GABA எனப்படும் காமா அமினோபியூட்ரிக் அமிலம். இது சிக்னல்கள் அதிகமாக இருந்தால் அதைக் குறைக்கும், மற்றொன்று Glx எனப்படும் குளுட்டோமேட்- குளுட்டேன். இது மூளையின் சிக்னல்கள் வேகம் குறைவாக இருந்தால் அதை அதிகப்படுத்தும் வேலையை செய்யும். மூளையின் பல்வேறு செயல்பாடுகளிலும் GABA முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதை  பல்வேறு ஆய்வு முடிவுகள் ஏற்கெனவே உணர்த்தியிருக்கின்றன.

சாதாரணமான நேரத்தில் இயல்பான அளவில் இருக்கும் GABA மற்றும் Glx அளவீடுகள் ஸ்மார்ட்போன் உபயோகிக்கும்பொழுது குறிப்பிடத்தக்க அளவில் வேறுபட்டு உயர்ந்தன. GABA அளவு அதிகமாகும்பொழுது அதன் பக்கவிளைவாக பதற்றம் மற்றும் சோர்வு ஏற்படுகிறது. ஸ்மார்ட்போன் மற்றும் இணையத்துக்கு அடிமையாகும்பொழுது மூளை செயற்கையாக உணர்ச்சிகளை உணர்வதும், குழம்புவதுமே நியூரோட்ரான்ஸ்மீட்டர்களின் வேறுபட்ட அளவீடுகளுக்கு காரணமாக இருக்கிறது. இப்படி குழப்பமான மனநிலையிலேயே அதிக காலம் நீடிப்பது தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தை அதிகரிக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

"GABA மற்றும் Glx நியூரோட்ரான்ஸ்மீட்டர்கள் வேறுபட்டு செயல்படுவதால் சிக்கல்கள் மேலும் அதிகரிக்கும். அதே வேளையில் அவற்றை முறைப்படுத்துவதன் மூலமாக அடிமையானவர்களை மீட்க முடியும்" என்கிறார் பேராசிரியர் ஹுவாங் சுக்சியோ.

மகிழ்ச்சியோ, துக்கமோ, அவற்றை ஸ்மார்ட்போன்கள் மூலமாக பெற நினைக்கும் இளம்வயதினர் அவற்றை இசை, தியானம் போன்ற இதர விஷயங்களில் இருந்தும் பெற முயல வேண்டும். குழந்தைகள் கையில் மொபைலை அதிக நேரம் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.Trending Articles

Sponsored