13 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபேஸ்புக்... குழந்தைகளுக்கு நல்லதா? #FacebookForKids



Sponsored




சில ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவை உணவு, உடை மற்றும் இருப்பிடம். ஆனால், இன்று அதோடு ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற விஷயங்கள் நான்காவது அத்தியாவசியத் தேவையாக இணைந்துகொண்டிருக்கிறது. இந்த சமூக வலைதளங்களை சிறியவர் முதல் பெரியவர் வரை இன்று பாகுபாடில்லாமல் பயன்படுத்தி வந்தாலும், அதில் எந்த அளவுக்கு நன்மை இருக்கிறதோ அதை மிஞ்சிய ஆபத்துகளும் உண்டு. குறிப்பாக குழந்தைகளுக்கு.

இதற்காகதான் ஃபேஸ்புக் நிறுவனம் குழந்தைகளுக்கான பிரத்யோக ஃபேஸ்புக் மெஸெஞ்சர் ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளது. சென்ற வாரம் நியூயார்க் நகரில் வெளியிடப்பட்ட இந்த ஆப் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Sponsored


13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஆப் மூலம் குழந்தைகள் குறுஞ்செய்திகள், வீடியோ, புகைப்படங்கள், ஸ்டிக்கர்கள் போன்றவற்றை அனுப்பவும், தங்கள் விரும்பும் படங்களை வரைந்து அனுப்பும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் குழந்தைகள் வரையறுக்கப்பட்ட தகவல்களை மட்டும்தான் பெறமுடியும். பெற்றோர்களுடைய அனுமதியோடு மட்டும்தான் குழந்தைகள் கணக்கைத் தொடங்க முடியும்.

Sponsored


”இந்தக் கணக்கைத் தொடங்க பிள்ளைகள் பெயரை மட்டும் தந்தால் போதும், பெற்றோரின் ஃபேஸ்புக் மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை கொண்டே தங்கள் குழந்தைகளுக்கான ஃபேஸ்புக் கணக்கைத் தொடங்க முடியும். மேலும், தங்கள் குழந்தைகள் வேறொரு குழந்தை கூட நட்புக்கணக்கை தொடங்கவும் பெற்றோரின் அனுமதியை கேட்கும்படி செய்துள்ளோம்” என்கிறார் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தேசிய பாதுகாப்புத் தலைமை அதிகாரியான ஆன்டிகோன் டேவிஸ்.

குழந்தைகளுக்கான பாதிப்புகளை குறைக்கும் வகையில் இதில் எவ்வித விளம்பரங்களும் வெளியிடப்போவதில்லை என்கிறது ஃபேஸ்புக் நிறுவனம். 13 வயது முடிந்ததும் இந்தக் கணக்கு தாமாகவே எல்லோரும் பயன்படுத்தும் ஃபேஸ்புக் கணக்காக இதை நிறுவனமே மாற்றிவிடும். ஒருவேளை இடையிலே பெற்றோர் இந்தக் கணக்கை விட்டு வெளியேற விரும்பினாலும் அதற்கும் வழிவகை செய்து தந்திருக்கிறது இந்த ஆப்.

இந்தச் செயலியை வடிவமைக்கும் முன் ஃபேஸ்புக் நிறுவனம் இதுகுறித்த கருத்தை 100 க்கும் மேற்பட்ட பெற்றோர்களிடமும், பல நிறுவனங்களைச் சார்ந்த குழந்தைகள் நல வழக்கறிஞர்களிடமும் கேட்டிருக்கிறது. மேலும் ஃபேஸ்புக்கின்  தனியுரிமை கொள்கையின் படி இந்த ஆப் மூலம் அனுப்பப்படும் தகவல்களையும் சேகரித்து, தேவைப்படும் சமயத்தில் அதை பகிர்ந்துகொள்ளும் உரிமையும் இந்நிறுவனத்துக்கு உள்ளது என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.

மார்க் ஸுக்கர்பர்க் கடந்த 2011-ம் ஆண்டே இந்த ஆப் குறித்த தகவலை வெளியிட்டிருந்தார். முதலில் இது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியிடப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து வரும் வருடத்தில் ஆண்ட்ராய்டு மற்றும் பிற மொபைல் இயங்குதளத்துக்கு வெளியிடப்படும்.

தனது இன்னொரு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இதுபோன்ற குழந்தைகளுக்கான ஆப் உருவாக்கும் நோக்கம் தற்போது இல்லை என்று ஃபேஸ்புக் கூறியுள்ளது.

பல அளப்பரிய நன்மைகளை இந்த சமூக வலைத்தளங்கள் தந்தாலும் அது உருவாக்கும் சமூக பிரச்னைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இதுபோன்ற சமூக வலைத்தளங்கள் குழந்தைகளுக்குத் தேவை இல்லாத ஒன்று என்னும் கருத்தைப் பெற்றோர்கள் முன்வைப்பதும் மறுக்கமுடியாத ஒன்று.

நீங்கள் என்ன நினைக்கறீர்கள்? இந்த கேட்ஜெட் உலகில் குழந்தைகள் 13 வயதுவரை சமூக வலைதள அறிமுகம் இல்லாமல் இருப்பதில் நன்மைகள் அதிகமா? அல்லது இழப்புகள் அதிகமா? கமெண்ட் பாக்ஸில் உங்கள் கருத்துகளை பகிரலாம்.



Trending Articles

Sponsored