மீனவர்களைப் பாதுகாக்கும் தொழில்நுட்பம்... ‘டிஜிட்டல் இந்திய அரசின்’ கவனத்துக்கு..!Sponsored
தமிழக மீனவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கடலுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் கரைக்குத் திரும்பவில்லை. ஒகி புயலால் அவர்கள் எங்கெங்கோ அடித்துச் செல்லப்பட்டனர். “ஒரே நாடு” என கோஷமிட்டுக்கொண்டிருக்கும் வேளையில், சில கி.மீ மட்டுமே தள்ளியுள்ள கேரள மீனவர்கள்மீது காட்டப்படும் அக்கறை தமிழக மீனவர்கள்மீது காட்ட ஆளில்லை. பாதுகாப்பு கிடைக்காத நிலையில், இப்போது நிவாரணமும் கிடைக்காமல், ஆறுதல் சொல்லவும் ஆளில்லாமல் தெருவுக்கு வந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். 

கடல் எப்போதும் ஆபத்தானதுதான். ஆனால், மனிதன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அதை தன் கைக்கு கொண்டுவந்துவிட்டான். அவ்வப்போது இயற்கை தனது பலத்தைக் காட்டினாலும், அதையும் சமாளிக்க கற்பதே மனிதனின் வளர்ச்சி. மீனவர்களின் வாழ்க்கையை பாதுகாப்பானதாய் மாற்ற இந்திய அரசு நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும். அதுவும், டிஜிட்டல் இந்தியா அதை செய்தே ஆக வேண்டும். ஏனெனில், இந்தியாவின் ஒரு பங்கை மட்டும் டிஜிட்டலாக மாற்றிவிட்டு நாம் ‘டிஜிட்டல் இந்தியா’ என மார்த்தட்டிக் கொள்ளமுடியாது. 
என்ன செய்யலாம்?

Sponsored


சாலையில் ஓடும் ஒவ்வொரு வாகனத்துக்கும் பதிவு எண் உண்டு. போலவே, படகுகளுக்கும். அதை முறைப்படுத்த வேண்டும். படகுகளுக்குப் பதிவு எண் கொடுப்பதைப் போல, ஒவ்வொரு படகுக்கும் வாக்கி டாக்கி போன்ற ஒரு தொலைத்தொடர்பு கருவி கட்டாயமாக்கப்பட வேண்டும். கடற்படைக்கு என இருக்கும் சாட்டிலைட்டுடன் அவை இணைக்கப்பட வேண்டும். கடலுக்குச் சென்றபின் ஏதேனும் அவசரம் என்றால், அதன் மூலம் அவர்களுக்குத் தகவல் தரலாம். மேலும், திக்குத்தெரியாத கடலில் அந்தப் படகு எங்கிருக்கிறது என்பதையும் கண்டறியலாம். 

Sponsored


உண்மையில் கடலில் சர்வதேச எல்லைகளைக் கண்டுபிடிப்பது இயலாத காரியம். படகுகளை டிஜிட்டல் ஆக்குவதன் மூலம் அவை இந்திய எல்லைகளைத் தாண்டாமல் செய்யலாம். எல்லைக்கு கொஞ்சம் தூரம் முன்பு சென்றாலே அலாரம் அடிக்கும்படி செய்யலாம். அதையும் மீறி படகு பயணித்தால், கடற்படைக்கு மெஸெஜ் சென்றுவிடும். எல்லைக்கு மிக அருகில் சென்றால் படகு நின்றுவிடவேண்டும். பின், கடற்படை ரிலிஸ் செய்தால் மட்டுமே படகு பயணிக்கும். இவையெல்லாம் சில ஆயிரங்களிலே சாத்தியமாக கூடிய தொழில்நுட்பங்கள்தான். லட்சக்கணக்கில் செலவு செய்துதான் அவ்வளவு தூரம் செல்லும் படகுகள் கட்டப்படுகின்றன. அதனுடன் இந்த ஆயிரங்களையும் கட்டாயமாக்குவது மீனவர்களின் பாதுகாப்புக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் நல்லதுதானே? எல்லையைத் தாண்ட முடியாவிட்டால் ”இலங்கை ராணுவம் மீனவர்களைச் சுட்டது” என்ற செய்தியைத் தவிர்க்கலாம். அல்லது “எல்லையைத் தாண்டாதவர்களை ஏன் சுட்ட” என்று அவர்களிடம் கேட்கலாம்.

இதை முறைப்படுத்துவதன் மூலம், கடலுக்குள் கடற்படைக்குத் தெரியாத படகுகள் எதுவும் போகாது. கட்டுமரம் போன்ற சிறிய படகுகள் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை மட்டுமே பயணிக்கலாம். அந்த எல்லைக்குள்ளாக மொபைல் அல்லது தகவல் பரிமாற்றுக் கருவிகளுக்கான டவர்களை அமைக்கலாம்.

இப்போது கடலுக்குள் செல்லும் மீனவர்களைக் கணக்கெடுக்க டோக்கன் சிஸ்டம் நடைமுறையில் உள்ளது. மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தங்கள் படகுக்கு அதிகாரிகளிடம் டோக்கன் வாங்கிக்கொள்ள வேண்டும்.கரைக்குத் திரும்பியதும் டோக்கனைத் திருப்பித்தர வேண்டும். இதை வைத்துதான் கடலுக்குள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை அரசு கணக்கிடும். இந்த முறையும், மேலே சொன்ன ஐடியாவால் நிறைவேறிடும். 

நம் இளைஞர்களைக் கேட்டால் இன்னும் எளிமையான, குறைந்த விலையில் சாத்தியமாகக் கூடிய ஆயிரம் தீர்வுகளைச் சொல்வார்கள். பிரச்னை, தொழில்நுட்பத்தில் இல்லை. அதைச் செய்ய வேண்டிய ஆட்சியாளர்களிடம்தான். புயல் வருகிறது என வானிலை மையம் எச்சரித்தப் பின்னும் செயல்படாத அரசு இது. அவர்கள் சரியான நேரத்தில் எச்சரிக்கை விட்டிருந்தால் இன்று இத்தனை தாய்மார்கள் தெருவுக்கு வந்திருக்க மாட்டார்கள்.

ஒரே அறிவிப்பில் அத்தனை 1000, 500 ரூபாய்களை ஒழித்த நாடு இது. ஒரே இரவில் டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கொண்டுவந்து விட்டோமென காலரைத் தூக்கி விட்டுக்கொண்ட ஆட்சி இது. இந்த விஷயங்கள் எல்லாம் அதற்கு முன் மிகவும் சிறியவை. ஆனால், குடிமக்களின் நலனுக்கானவை. அதனால்தான், அவற்றை செய்யாமல் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

கடல் விஷயத்தில் வேறு எந்தத் தொழில்நுட்பங்கள் பாதுகாப்பைப் பலப்படுத்தும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.Trending Articles

Sponsored