'In-screen fingerprint sensor'... இனி ஈரக் கையோடும் மொபைலை அன்லாக் செய்யலாம்!



Sponsored



போன் X அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னால் அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகிக்கொண்டிருந்தன. அந்தப் புகைப்படங்களில் அனைவரும் கவனித்த ஒரு விஷயம் மொபைலின் முன்புறத்தில் இருக்கும் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் அந்த இடத்தில் இல்லை. அப்பொழுதே ஆப்பிள் திரைக்கு அடியில் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனரை பயன்படுத்தியிருக்க வாய்ப்பிருப்பதாகப் பலரும் நினைத்தனர். ஆனால் ஐபோன் X வெளியான பொழுது அதில் ஃபிங்கர்பிரின்ட் சென்சாரே இல்லை. அதற்கு பதிலாக ஃபேஸ் ஐடியைக் கொடுத்திருந்தது ஆப்பிள். அதற்கு முன்னர் சாம்சங்கின் S8 ஸ்மார்ட்போன் வெளியாகும் பொழுதும் இந்த விஷயம் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மொபைலின் பின்புறத்திற்கு ஸ்கேனர் இடம் மாறியிருந்தது.

இப்படி இந்த வருடம் எதிர்பார்க்கப்பட்ட தொழில்நுட்பங்களில் ஒன்று திரைக்கு அடியில் இருக்கும் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர். பெரும்பாலான மொபைல்களில் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் இருக்கிறது. இதில் இருக்கும் பிரச்னை என்னவென்றால் இந்த ஸ்கேனருக்கு மொபைலில் வெளிப்புறத்தில் ஓரிடம் தேவைப்படுகிறது. தற்சமயம் அனைத்து மொபைல்களும் ஃபுல் வியூ டிஸ்ப்ளேவுக்கு மாறிக்கொண்டிருப்பதால் முன்புறம் வைப்பதற்கு இடம் போதாது, பின்புறத்தில் வைத்தால் பயன்படுத்த கடினமாக இருக்கும். இதற்கு ஒரே தீர்வு திரைக்கு அடியில் சென்சாரை அமைப்பதுதான். அதைத்தான் கண்டுபிடித்திருக்கிறது சினாப்டிக்ஸ் என்னும் நிறுவனம். செமிகண்டக்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான இது தற்பொழுது திரைக்கு அடியில் பயன்படுத்தக்கூடிய ஃபிங்கர்பிரின்ட் சென்சாரை உற்பத்திசெய்ய ஆரம்பித்துவிட்டதாகவும், இதற்காக முன்னணி மொபைல் தயாரிப்பாளர்களுடன் கைகோத்துள்ளதாகவும் அறிவித்திருக்கிறது.

Sponsored


Sponsored


பல வகையான கைரேகை ஸ்கேனர்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதில் ஸ்மார்ட்போன்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவது கெப்பாசிடிவ் வகையிலான ஸ்கேனர்கள்தாம். இதிலிருக்கும் சென்சார்கள் ஒன்று அல்லது இரண்டிற்கு மேற்பட்ட செமிகண்டக்டர்களால் ஆனது. மின்னூட்டம் பெற்ற சென்சார்கள் மேல் விரலை வைத்தால் அவை விரல் ரேகையின் நுண்ணிய மேடு பள்ளங்களை உணர்ந்து அவற்றை பதிவு செய்துகொள்கின்றன. பின்னர் அந்தத் தகவல்கள் நினைவகத்தில் பதியப்படுகின்றன. அடுத்த முறை விரலை வைக்கும்பொழுது முன்னர் பதியப்பட்ட தகவல்கள் சரிபார்க்கப்படுகின்றன. இதுபோன்ற சென்சாரில் இருக்கும் பிரச்னை என்னவென்றால் விரலில் ஈரம், வியர்வை இருந்தாலோ சரியாகச் செயல்படாது. தூசி நிறைந்த இடங்களிலும் பயன்படுத்துவது கடினம்.


இதுபோன்ற குறைகள் இல்லாத ஒரு ஃபிங்கர்பிரின்ட் சென்சாரை உருவாக்கும் முயற்சியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுவந்தன. கடந்த 2015ம் வருடம் மொபைல் பிரசஸர்கள் தயாரிப்பு நிறுவனமான குவால்காம் அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரின்ட் சென்சாருக்கான கான்செப்டை வெளியிட்டிருந்தது. இந்த முறையில் அல்ட்ராசோனிக் ஒலிகள் விரலில் உள்ள ரேகைகளைப் பதிவுசெய்ய உபயோகப்படுத்தப்பட்டன. இதன் மூலமாக கைரேகைகளின் மிக நுண்ணிய தகவல்களைக் கூட பெறமுடிந்தது. வழக்கமான ஸ்கேனர்களை விட இது முப்பரிமாணத்தில் தகவலை சேகரிப்பதால்  இதன் துல்லியம் அதிகம். ஆனால் அந்தத் தொழில்நுட்பம் மொபைல்களில் பயன்பாட்டிற்கு வரவில்லை. 

இந்த வேளையில்தான் இந்த சென்சாரை அறிமுகப்படுத்தியிருக்கிறது சினாப்டிக்ஸ்.  Clear ID FS9500 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த சென்சார் திரைக்கு அடியிலிருந்தும் செயல்படும். இந்த சென்சார் தற்பொழுது ஸ்மார்ட்போன்களில் இருக்கும் அன்லாக் தொழில்நுட்பங்களை விட இரு மடங்கு வேகமாகச் செயல்படும். மேலும் ஈரம், குளிர், வியர்வை போன்றவற்றால் பாதிக்கப்படாது என்கிறது இந்த நிறுவனம். தற்பொழுது வெளியாகியிருக்கும் தகவலின்படி இந்த சென்சாரை முதன் முதலாக விவோ  நிறுவனம் தனது ஸ்மார்ட்போனில் பயன்படுத்தியிருக்கிறது. எனவே திரைக்கு அடியில் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனரை  பயன்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன் விவோவாக இருக்க வாய்ப்பு அதிகம். இந்த ஸ்மார்ட்போன் அடுத்த வருடம் ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படலாம்.



Trending Articles

Sponsored