‘வாட்ஸ்அப், 4G-யோட வர்றோம்... கலக்குறோம்!’ வெறித்தன அப்டேட்களுடன் நோக்கியா 3310நடிகர்களின் ரசிகர்களின் ஒரு க்ரூப் உண்டு. அந்த நடிகரின் ஒரு சில படங்களுக்கு மட்டும் வெறித்தனமான ரசிகர்களாக இருப்பார்கள். அதுபோல நோக்கியாவின் ரசிகர்களில் 3310 மொபைலுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகம்தான். இன்று ஆப்பிள், ஆண்ட்ராய்டு என பயன்படுத்தும் பெரும்பாலானோரின் முதல் மொபைலாக நோக்கியா 3310 இருந்திருக்கக்கூடும். மேலும், ஸ்னேக் கேம் இதன் தனித்துவமான அடையாளமாகவே மாறிப்போனது. 2000-ம் ஆண்டில் வெளியான இது உலகம் முழுவதும் 126 மில்லியன் மொபைல்கள் விற்று சாதனை படைத்தது. இந்த மொபைல் பல நாடுகளில் நோக்கியாவின் சகாப்தத்தைத் தொடங்கிவைத்தது என்றே கூறலாம்.

Sponsored


அதன் பிறகு மொபைல் சந்தையில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக அதிக வசதிகள்கொண்ட மொபைல்கள் வெளியாக படிப்படியாக காணாமல் போனது 3310. அதன் பிறகு நோக்கியாவே சத்தமின்றி காணாமல் போனது. இந்நிலையில்தான், கடந்த வருடம் மீண்டும் மொபைல் சந்தையில் நுழைவதாக நோக்கியா அறிவித்தது. சந்தையில் நுழைந்த பிறகு தொடர்ச்சியாக ஆண்ட்ராய்டு மொபைல்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தனது 3310 மொபைலையும் மீண்டும் அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்தது நோக்கியா. சொன்னது போலவே 3,310 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

Sponsored


Sponsored


 பழைய மொபைலின் வடிவத்தை புதிய மொபைலில் ஓரளவுக்குக் கொண்டுவந்து கேமரா, டூயல் சிம் என இந்தக் காலத்துக்கு தகுந்தவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது புதிய நோக்கியா 3310. அவ்வளவும் செய்த நோக்கியா தவறு செய்தது விலை விஷயத்தில்தான். இரண்டாயிரம் ரூபாய்க்கே ஆண்ட்ராய்டு மொபைல்கள் வரிசை கட்டி நிற்க பேஸிக் மாடல் மொபைலான நோக்கியா 3310 ஐ  வாங்குவதற்கு சற்றே யோசித்தார்கள் மக்கள். இருந்தாலும் பழைய நினைவுகளை மனதில் வைத்து விலையைப் பற்றி கவலைப்படாமல் அதை வாங்கியவர்களும் உண்டு.

புதிய நெட்வொர்க், புதிய இயங்குதளம்

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் 4G நெட்வொர்க் சேவை கிடைக்கிறது. பல நாடுகளில் 2G சேவை வழங்குவதை படிப்படியாக குறைத்து வருகின்றன தொலைத்தொடர்பு நிறுவனங்கள். இந்தியாவில்கூட கடந்த வருடத்துடன் 2G சேவையை முழுவதுமாக நிறுத்தியிருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். ஜியோவோ 4G சேவையை மட்டுமே அளிக்கிறது. 2Gயின் நிலைமை அப்படியிருக்க இந்த வருடம் முதல் 5G சேவை அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாட்ஸ்அப் போன்ற சேவைகளையும் இன்று பலர் பயன்படுத்தி வருகிறார்கள். உலகம் முழுவதும் நிலைமை இப்படியிருக்க கடந்த வருடம் பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நோக்கியா 3310 மொபைலில் 2G வசதி மட்டுமே இருந்தது, வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாதது போன்ற குறைகள் இருந்தன. பின்னர் அது மேம்படுத்தப்பட்டு அக்டோபர் மாதம் 3G யில் இயங்குமாறு வெளியிடப்பட்டது. இந்நிலையில்தான் 4G வசதியோடு நோக்கியா 3310 மீண்டும் அறிமுகப்படுத்தப்படப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்து வெளியாகப் போகும் புதிய நோக்கியா 3310 வின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இந்த மொபைலின் வெளித்தோற்றத்தில் எந்த மாறுதல்களும் செய்யப்படவில்லை. மாறாக அதன் உள்ளே சில மாற்றங்களைச் செய்துள்ளது நோக்கியா.  இன்டர்னல் மெமரியை 512 MB யாக அதிகரித்துள்ளது. புதிய இயங்குதளம் பயன்படுத்தப்பட்டிருப்பதால் வாட்ஸ்அப் இதில் இயங்கும் வாய்ப்பு அதிகம். மேலும், இதில் 4G வசதியும் இருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் MWC 2018-ல் இந்த மொபைல் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். 4G வசதியோடு திரும்ப வரும் நோக்கியா 3310 மக்களிடையே வரவேற்பைப் பெரும் என நம்பலாம்.Trending Articles

Sponsored