உணவு ஸ்கேனர், டிஜிட்டல் ஷவர், டிரான்ஸ்லேட்டர்... 2018-ன் டெக் புதுவரவுகள்! #CES2018Sponsoredருட்டு.

மின்சாரம் இல்லை.

வெளியில் மழை இரண்டு மணி நேரம் விடாமல் பெய்ததால், ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு அந்த அரங்கம் முழுவதும் வெளிச்சமின்றி தவித்தது. ஜன்னல் வழியாகச் சிக்கனமாக வந்த வெளிச்சத்தை வைத்துக் குழுமியிருந்த பெருநிறுவனங்களின் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களை சரியாகக் காட்சிப்படுத்த முடியவில்லை. மக்கள் மட்டும் அரங்கம் எங்கும் நடக்க பேட்டரியால் இயங்கும் வழிகாட்டிகள் பொருத்தப்பட்டிருந்ததால் சிரமம் இன்றி சுற்றிவந்தனர். இந்தச் சம்பவம், அமெரிக்கா போன்ற ஒரு வளர்ந்த நாட்டில், இருட்டிலும் ஓய்ந்து விடாத லாஸ் வேகாஸ் நகரத்தில், ஒரு மாபெரும் எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் நடந்துவிட, அந்தக் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பங்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, இது ஒரு பரபரப்புப் செய்தியாகிப் போனது. உலகின் மிகப் பெரிய எலெக்ட்ரானிக்ஸ் வர்த்தக கண்காட்சி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் ஜனவரி 9-ம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. உலக அரங்கில் ஒரு மேடை, நான்கு திசைகளில் இருந்தும் மக்கள் வருவார்கள். இந்தக் காரணங்கள் போதாதா? முன்னணி டெக் ஜாம்பவான்கள் அனைவரும் தங்களிடம் உள்ள அதி நவீன தொழில்நுட்பத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்த இதைவிட ஒரு சிறந்த மேடை கிடைக்காது என்று தங்கள் தளவாடங்களுடன் களம் இறங்கிவிட்டனர். அப்படி அறிமுகப்படுத்தப்பட்ட சில நவீன தொழிநுட்பங்கள் உங்கள் பார்வைக்கு…

Sponsored


Lenovo Smart Display

Sponsored


லெனோவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஸ்மார்ட் டிஸ்பிளே ஒரு ஹோம் அசிஸ்டன்ட். தற்போது இருக்கும் ஹோம் அசிஸ்டன்ட்களை எல்லாம் ஓரங்கட்டும் வகையில், பல அட்டகாசமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கூகுள் அசிஸ்டன்ட் கொண்டு செயல்படும் இதை எழுப்ப “ஹே கூகுள்!” என்று அழைத்தால் போதும். அமேசான் எக்கோ ஷோ (Amazon Echo Show) கேட்ஜெட்டைவிட அசுர பாய்ச்சலில், துரிதமாகச் செயல்படும் இதைக் கொண்டு காபி தயாரிக்கச் சொல்லலாம், குழந்தைகளை எழுப்பச் சொல்லலாம், போக்குவரத்து நெரிசல், வானிலை குறித்த தகவல்களைப் பெறலாம், அலாரம், ரிமைண்டர்கள் வைக்கலாம், வீடியோ மற்றும் ஆடியோ கால் கூடச் செய்யலாம். பிரைவசிக்காக, அவசியமில்லாத நேரத்தில் இது எதையும் ரெகார்ட் செய்துவிடக் கூடாது என்பதற்காக, முழுவதும் செயல்படாமல் இருக்கக் கூடுதலாக ஒரு சுவிட்ச் சேர்த்திருக்கிறார்கள். அப்போது நீங்கள் “ஹே கூகுள்!” சொன்னால்கூட செயல்படாது. கேமரா கூட ஆன் ஆகாது.

விலை:

10.1 அங்குல டிஸ்பிளே - $249,

8 அங்குல டிஸ்பிளே - $199

Travis the Translator

ஆம், சரிதான். இது கூகுள் ட்ரான்ஸ்லேட்டரின் கேட்ஜெட் வெர்ஷன். ஒரு ஃபிலிப் அளவே இருக்கும் இது சிம் கார்டு மற்றும் வைஃபை கனெக்ஷன் இருந்தால் போதும். 80 மொழிகள் வரை ரியல் டைமில் மொழிபெயர்த்துத் தருகிறது. இன்டர்நெட் கனெக்ஷன் இல்லையென்றால் கூட 20 மொழிகளை மொழிபெயர்க்கும் திறன்கொண்டதாய் இருக்கிறது. இதன் டச்பேடில் இரண்டு மொழிகளைத் தேர்ந்தெடுத்தவுடன், அதில் ஏதேனும் ஒரு மொழியில் நீங்கள் பேச வேண்டும். உதாரணமாக நீங்கள் யாரோ ஒருவருடன் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்றால், நீங்கள் தமிழில் பேசியதை அது மொழிபெயர்க்கும். அதை அவர்களுக்குப் பேசியும் காட்டும். பின்பு அவர் ஆங்கிலத்தில் பதிலளிப்பதையும் பதிவுசெய்து அதை உங்களுக்குத் தமிழிலும் மொழிபெயர்த்துக் கொடுக்கும்.

விலை: $199

photo credit: Engadget

Dreamlight Sleep Mask

நமக்கு இது நிச்சயம் ஒரு வித்தியாசமான ஒன்றாகத்தான் தோன்றும். ஆமாம், நம்மைத் தூங்க வைக்க ஒரு LED மாஸ்க். இதைக் கண்களில் மாட்டிக்கொண்டால், பாதி முகத்தை மறைத்து விடுகிறது. இப்போது உங்கள் கண்களுக்கு முன் ஆரஞ்சு நிற LED பல்பின் வெளிச்சம் மட்டும் ஆட்டம் காட்டும். இந்த மாஸ்க்கை அணிந்துகொண்டால் ஒளிரும் வெளிச்சத்தில் உறக்கம் தானாக வந்துவிடும் என்கிறது இந்த நிறுவனம்.

விலை: $100

LinkSquare

அடிக்கடி உங்களுக்கு ஃபுட் பாய்சன் ஆகிவிடுகிறதா? இந்த கேட்ஜெட் உங்களுக்கு நிச்சயம் உதவும். ஒரு மார்க்கர் பேனா அளவே இருக்கும் இந்தச் சாதனத்தைக் கொண்டு சாப்பிடும் பொருள்களை ஸ்கேன் செய்யலாம். மாமிசம் கெட்டுப் போய்விட்டதா? பாக்டீரியாக்கள் உணவில் குடியேறிவிட்டனவா? இந்த மதுபானம் அசலானது தானா? - இப்படி பல கேள்விகளுக்கு இது நொடியில் பதில் தருகிறது. உணவு என்று மட்டுமல்ல, ஒரு மாத்திரை சரியானதுதானா? இந்தப் பணம் கள்ள நோட்டா? என்றெல்லாம்கூட இது ஆராய்ந்து சொல்லும் என்கிறார்கள். உங்கள் ஸ்மார்ட்போனிலிருக்கும் ஓர் ஆப்புடன் சேர்ந்து செயல்படும் இது, பலருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

விலை: $299

Moen's bathroom technology

பாத்ரூமுக்கும் கொண்டு வந்துவிட்டார்கள் ஒரு அதி நவீன கேட்ஜெட்டை! குளியலறையில் சுவரில் இருக்கும் கண்ணாடி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஷவர், இந்த இரண்டும் சேர்ந்ததுதான் இந்த பாத்ரூம் டெக்னாலஜி. இதனுடன் வரும் கண்ணாடி உள்ளிருந்து ஒளிரும் லைட்டுடன் வருகிறது. செய்யும் வேலைக்கு ஏற்ப, இந்தக் கண்ணாடியின் வெளிச்சத்தை வெறும் கட்டளைகள் கொடுத்துக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, ஷேவிங் போன்ற வேலைகளுக்கு மிதமான வெளிச்சம், ட்ரிம் செய்யும்போது அதீத மற்றும் அடர்த்தியான வெளிச்சம் என்று தேவைக்கேற்ப அதுவே மாற்றிக்கொள்ளும். நாம் கட்டளைகள் கொடுத்தால் போதுமானது. டிஜிட்டல் ஷவர் தொழில்நுட்பம் என்பதால், “98 டிகிரியில் சுடுதண்ணீர் வேண்டும்” என்று கட்டளை கொடுத்தால் போதும், அதை உடனே செய்து காட்டும். தண்ணீர் சூடாகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மின்சார செலவும் மிச்சமாகும் என்கிறார்கள்.

விலை: $1,200

இது வெறும் சாம்பிள்தான். தானாக இயங்கும் கார்கள், 8K தொலைக்காட்சிகள், ரோபோ உதவியாளர்கள் என்று மொத்தம் 4000 நிறுவனங்கள் தங்கள் புது வரவுகளை அடுக்கியிருக்கின்றன. இதில் பல கேட்ஜெட்கள் வெறும் ப்ரோட்டோடைப் (மாதிரிகள்) மட்டுமே. நிறைய பொருள்கள் ஆராய்ச்சி நிலையில் இருப்பவை, சந்தைக்கே வருமா என்பதும் தெரியாது. நிறுவனங்கள் தங்கள் முத்திரையைப் பதிக்க, விளம்பரதாரர்களைக் கவர இது வருடா வருடம் நடக்கும் நிகழ்வுதான் என்றாலும் பின்னாளில் வரப்போகும் பல அதிசய தொழில்நுட்பங்களை இப்போதே இங்கு கண்டு ரசிக்கலாம்.Trending Articles

Sponsored