5 கேமரா... திரைக்கு அடியில் ஃபிங்கர் பிரின்ட்... 2018 மொபைல்களில் என்ன ஸ்பெஷல்?



முந்தைய ஆண்டுகளைவிட கடந்த 2017-ம் வருடம் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பாகவே இருந்தது. ஸ்மார்ட்போன்களில் பல புதிய தொழில்நுட்பங்கள் இடம் பிடித்தன, அதே வேகத்துடன் இந்த வருடமும் புதுப்புது வசதிகளுடன் சந்தையைக் கலக்கத் தயாராகி வருகின்றன பல ஸ்மார்ட்போன்கள். இந்த வருடம் வெளியாகப்போகும் ஸ்மார்ட்போன்களில் என்னென்ன  வசதிகள் இருக்கலாம் என்று இப்பொழுதே இணையத்தில் விவாதங்கள் தொடங்கிவிட்டன. வாடிக்கையாளர்களுக்குப் புதிய வசதிகளை அறிமுகப்படுத்த மொபைல் நிறுவனங்களும் தயாராகி வருகின்றன. இந்த வருடம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்கள் சிலவற்றைப் பற்றி பார்க்கலாம்.

நோக்கியா

Sponsored


Sponsored


கடந்த வருடம் மீண்டும் சந்தைக்குத் திரும்பினாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை நோக்கியா. வசதிகள் குறைவாக இருந்தது, விலை அதிகமாக இருந்தது போன்ற காரணங்களால் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் போதிய அளவிற்கு வெற்றிபெறவில்லை. அதனால் இந்த வருடம் லோ பட்ஜெட் செக்மென்டில் அதிகம் கவனம் செலுத்தக்கூடும். அதே வேளையில் ஃப்ளாக்‌ஷிப் செக்மன்டில் புதிய முயற்சிகளை நோக்கியா செய்தே ஆக வேண்டும். Nokia 9 மற்றும் Nokia 10 என்ற ஃப்ளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை நோக்கியா இந்த வருடம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கலாம். அதிலும் 5 கேமராக்கள் கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை உருவாக்கும் வேலையில் நோக்கியா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக சில நாள்களுக்கு முன்னர் தகவல் வெளியாகவே நோக்கியா ரசிகர்கள் வெறித்தன வெயிட்டிங். 

Sponsored


ஆப்பிள் 

கடந்த வருடம் ஆப்பிளின் புதிய மொபைலுக்கு எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்க, ஏற்கெனவே இணையத்தில் வெளியாகியிருந்த  தகவல்களை ஒன்று திரட்டி பெரிய திரையில் இதுதான்  ஐபோன் x என அறிமுகப்படுத்தியதில் கடுப்பானர்கள் ஆப்பிள் ரசிகர்கள், சரி வேற என்ன இருக்கு என அனைவரும் காத்துக்கிடக்க ஃபேஸ்ஐடி, அனிமோஜி என மீண்டும் காமெடி பண்ணியது ஆப்பிள்.  ஒரு லட்சம்தான் விலை என ஆப்பிள் தொடர் காமெடி பண்ண ஒரு நிமிஷம் தலை சுற்றியது ஆப்பிள் ரசிகர்களுக்கு. “இந்த வருடம் பாருங்க பாஸ்” என்ற ரசிகர்களுக்கு மெல்ட்டவுன் பிரச்னை அதிர்ச்சியைக் கொடுத்தது. இதற்கு ஆண்ட்ராய்டு தேவலாம் என்று புலம்பித் தள்ளினார்கள் ஆப்பிள் பாய்ஸ். ஏற்கனவே இதைப்பற்றித் தெரிந்திருந்தும் மறைத்த காரணத்திற்காக ஆப்பிள்மீது வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. ஐபோன் அதிக விலைக்கு விற்பதே நீதிமன்றத்தில் அபராதம் கட்டுவதற்குத்தான்  என்ற உண்மை பல காலத்திற்கு பிறகு ஆப்பிள் ரசிகர்களுக்கு தெரிய வந்திருக்கிறது. அப்படி இருந்தும் இந்த வருடக் கடைசியில் செப்டம்பர் மாதம் வெளியாகப்போகும் இந்த வருடத்திற்கான ஐபோனுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது,அது தொடர்பான தகவல்கள் இப்போதே இணையத்தில் வலம் வர ஆரம்பித்துவிட்டன. அதில் என்னென்ன சிறப்பு வசதிகள் இருக்கும் என யோசித்து இப்போதே சீட்டு கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் ஆப்பிள் ரசிகர்கள் (பாவம் பாஸ் அவங்க).

சோனி 

ஐந்தாயிரத்துற்கு வாங்கினாலும் சரி ஐம்பதாயிரத்துக்கு வாங்கினாலும் சரி உனக்கு இவ்வளவுதான் என ஸ்மார்ட்போன்களை ஒரே டிஸைனில் கொடுத்து மொபைல் வாங்குபவர்களை வெறுப்பேற்றியது சோனி. ஆனால் இந்த வருடம் கொஞ்சம் மனசை மாற்றியிருக்கிறது இந்த வருடம் கொஞ்சம் மேம்பட்ட வடிவவமைப்பில் சோனி மொபைல்கள் வெளியாகக்கூடும். Sony Xperia X2 மற்றும் Xperia XZ என இரண்டு வரிசைகளில் ஸ்மார்ட்போன்கள் வெளியாகலாம்.

சாம்சங்

கேலக்ஸி நோட் 7 மாடல் வெடித்தது, ஊழல் புகாரில்  சிக்கியது எனக் கடந்த சில வருடங்களாகவே சாம்சங்கிற்குப் போதாத காலம்தான். சற்று உஷாரான சாம்சங் கடந்த வருடம் மொபைல் வடிவமைப்பில் பெரிய மாற்றங்களைச் செய்திருந்தது. அதைப்போலவே இந்த வருடம் வெளியாகவிருக்கும் Samsung Galaxy S9 மற்றும்  Galaxy Note 9 இரண்டிலும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இந்த வருடம் சாம்சங் நிறுவனத்திற்கு சிறப்பானதாக இருக்கலாம். அதன் தொடக்கமாக சிறையில் இருந்த சாம்சங் நிறுவனத்தின் துணைத்தலைவர் ஜே ஓய் லீ சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். 

ஷியோமி 

வெடிக்குது, அனல் பறக்குது எனக் கலாய்த்தவர்களே வேறு வழியில்லாமல் ரெட்மியை வாங்கினார்கள் கடந்த வருடம். லோ பட்ஜெட் செக்மென்டையும், மிட்-ரேன்ஜ் செக்மென்டையும் ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்தது ஷியோமி. அதன் விளைவு சாம்சங்கை பின்னுக்குத்தள்ளி இந்தியச் சந்தையில் முதலிடம் பிடித்தது. இந்த வருடம் அந்த இடத்தை தக்க வைப்பதற்காகப் பல புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிடலாம். கடந்த வருடம் ஃப்ளாக்‌ஷிப் செக்மென்டிலும் தனது பார்வையை பதித்த ஷியோமி இந்த வருடத்தில் அந்த செக்மென்டில் சற்று கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். இந்த வருடத்தில் 18:9 டிஸ்ப்ளேவைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை அதிகமாக அறிமுகப்படுத்தலாம்.  இந்த மாதம் 14-ம் தேதி ரெட்மி 5 என்ற ஸ்மார்ட்போன் வெளியாகலாம். ஷியோமியில் இருந்து எப்போது வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்திருப்பது ரெட்மி நோட் 5 தான் அது தொடர்பான படங்களும் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன. 

ஹூவாய்

இந்தியாவில் ஷியோமி என்றால் உலக அளவில் சாம்சங்கிற்கு சவால் நிறைந்த போட்டியாளராக இருப்பது மற்றொரு சீன நிறுவனமான ஹூவாய்தான். உலக அளவில் அதிகம் விற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வரிசையில் கடந்த வருடம் மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தது ஹூவாய். அது கைப்பற்ற நினைக்கும் மற்றொரு சந்தை இந்தியாதான். ஏற்கெனவே கடந்த மாதம்தான்  ஹானர் 9 லைட் என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்த வருடம் டூயல் கேமராவைக்கொண்ட ஸ்மார்ட்போன்களையே பெரும்பாலும் ஹூவாய் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். கடந்த வருடம் உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு திறன் சிப்பைக் கொண்ட ஸ்மார்ட்போனான  Mate 10 ஐ அறிமுகப்படுத்தியிருந்தது.  ஹூவாய் அதன் அடுத்த வரிசை மொபைல் இந்த வருடம் வெளியாகலாம்.

லெனோவோ நிறுவனத்திற்குக் கை மாறியதில் இருந்து சற்றுத் தடுமாறி வரும் மோட்டோரோலா இந்த வருடமாவது வாடிக்கையளர்களின் குரலைக் கேட்கும் என எதிர்பார்க்கலாம்.  

ஆப்பிளோ, சாம்சங்கோ அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்ட திரைக்கு அடியில் கைரேகை சென்சாரைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை தனது புதிய மொபைலில் அறிமுகப்படுத்தியிருக்கிறது விவோ.

இன்னமும் சந்தையில் சிறப்பான ஸ்மார்ட்போன்களைக் கொடுத்து வருகிறது எல்ஜி நிறுவனம், விளம்பரம் பெரிய அளவில் இல்லாதது, லோ பட்ஜெட் செக்மென்டில் அதிக கவனம் செலுத்தாதது எல்ஜியின் மிகப்பெரிய மைனஸ். அதிக மாடல்களை அறிமுகப்படுத்துவதைக் குறைத்து விட்டது. ஆகவே இந்த வருடமும் குறைவான அளவிலேயே மொபைல்கள் வெளியிடப்படலாம்.



Trending Articles

Sponsored