எட்டே நிமிடங்களில் விண்வெளியில் டிராப்... செவ்வாய் கிரகத்துக்கு போகும் டெஸ்லா கார்..!



Sponsored



மூன்று நாள்களுக்கு முன்னால் ஒரு மாலை வேளை. அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் இருக்கும் கென்னடி விண்வெளி மையத்தைச் சுற்றி மக்கள் கூடியிருக்கிறார்கள். எல்லாம், அந்த இடத்திலிருந்து  ஃபால்கன் ஹெவி என்ற ராக்கெட் ஏவப்படும் நிகழ்வைப் பார்ப்பதற்குத்தான். ராக்கெட் ஏவப்படும் சமயங்களில் மக்கள் கூடுவார்கள் என்றாலும் அன்றைக்கு வழக்கத்தைவிட கூட்டம் சற்று அதிகமாகத்தான் இருந்தது. அதே நேரத்தில் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள் மகிழ்ச்சி கலந்த பதற்றத்தோடு அந்த நிமிடத்திற்காகக் காத்திருக்கிறார்கள். இவர்கள் தவிர உலகம் முழுவதும் இருப்பவர்களும் நேரலையில் அவர்களோடு இணைந்து கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த நேரம் வருகிறது. வெண்நிறப் புகையைக் கிளப்பியவாறு வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது ராக்கெட். அரங்கத்திற்குள்ளேயும் வெளியிலும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கிறார்கள் அதைப்பார்த்துக்கொண்டிருந்தவர்கள். சரி உலகமே உற்றுநோக்கும் வகையில் அந்த ராக்கெட்டில் அப்படி என்னதான் இருந்தது ?.

ஃபால்கன் ஹெவி:

Sponsored


தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் உலகின் மிகச் சக்தி வாய்ந்த ராக்கெட் என்பது ஃபால்கன் ஹெவியின் சிறப்புகளில் ஒன்று. இது மட்டுமல்ல இன்னும் பல சிறப்புகள் இந்த ராக்கெட்டிற்கு இருக்கின்றன. செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் எலான் மஸ்க்கின் திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்தப் பரிசோதனை ராக்கெட் ஏவும் முயற்சி. ஒரு பகுதி என்று சொல்வதைவிட இதைச் சிறந்த தொடக்கம் எனவும் வைத்துக்கொள்ளலாம்.  இப்படி ஒரு ராக்கெட்டை உருவாக்குவதற்கான  திட்டம் 2004-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. 2011-ல் ஃபால்கன் ஹெவியின் வடிவமைப்பு இறுதி வடிவம் பெற்றது. 2013-ம் ஆண்டில் விண்ணில் ஏவி பரிசோதிக்கத் திட்டமிட்டிருந்தார்கள் ஆனால், பல்வேறு காரணங்களால் அது தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. தற்போது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றிருக்கிறது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முக்கியக் கண்டுபிடிப்புகளில் ஒன்று ராக்கெட்டை ஏவிய பின்பு அதன் பூஸ்டர்களை மறுபடியும் பயன்படுத்தும் தொழில்நுட்பம். விண்ணிற்கு செலுத்தப்படும் ராக்கெட்டின் பூஸ்டர்கள் சுமந்து சென்ற எடையை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமியில் வந்து தரையிறங்கும். இந்தத் தொழில்நுட்பத்தைத் தனது ராக்கெட்டுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகிறது ஸ்பேஸ் எக்ஸ். அதைப்போலவே ஃபால்கன் ஹெவியையும் வடிவமைத்திருந்தது. 

Sponsored



இதுபோன்று ஒரு ராக்கெட்டை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு முன்னால் அதற்குள்ளே ஒரு மாதிரியை வைத்து விண்ணில் செலுத்துவார்கள். விண்ணில் ராக்கெட் அதிவேகமாகப் பாயும்போதும் விண்ணிற்குச் சென்ற பிறகும் அது என்னென்ன தாக்கத்தை மாதிரியில் ஏற்படுத்துகிறது என்பதைப் பரிசோதிப்பார்கள். பரிசோதனை மாதிரியாக இதுவரைக்கும் சாதாரண இரும்புப் பெட்டகம் அல்லது பெரிய கான்கிரீட் பாளங்களோதான் பயன்படுத்தப்படும். எலான் மஸ்க் எந்த ஒரு விஷயத்தையும் வித்தியாசமாக அணுகும் நபர் என்பதால் இந்த ராக்கெட்டில் அவரது டெஸ்லா நிறுவனத்தின் சிவப்பு நிற ரோட்ஸ்டெர் காரை விண்ணில் ஏவுவதற்குத் திட்டமிட்டார். அதன்படி ஃபால்கன் ஹெவியின் முன்புறத்தில் அந்தக் கார்  பொருத்தப்பட்டது. அந்த காரில் டிரைவரின் இடத்தில் 'ஸ்டார்மேன்' (Starman) என்ற பொம்மையை உட்கார வைத்திருக்கிறார். அந்த பொம்மைதான் போலியானதே தவிர அது அணிந்திருக்கும் உடை நிஜமானது விண்வெளியில் மனிதர்கள் பயன்படுத்துவதற்காக  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. வெறுமனே விண்ணில் ஏவுவதோடு மட்டும் நிற்காமல் அந்தக் காரை செவ்வாய் கிரகத்திற்கும் அனுப்பி வைப்பதுதான் எலான் மஸ்க்கின் திட்டம். அதன்படி பார்த்தால் விண்வெளிக்குச் சென்ற முதல் கார் என்ற சிறப்பையும்  எலான் மஸ்க்கின் ரோட்ஸ்டெர் கார் பெற்றுவிட்டது. ஒரு வேளை திட்டமிட்டபடி அடுத்த 6 மாதத்தில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்தால் அங்கு சென்ற முதல் கார் என்ற சிறப்பையும் பெறும்.

  

ராக்கெட்டின் முன்பகுதியில் கார் பொருத்தப்பட்ட அனைத்தும் தயார் செய்யப்பட்டன. ஃபால்கன் ஹெவி விண்ணில் பாயத் தயாராக இருந்தது. 270 அடி உயரம் கொண்ட ஃபால்கன் ஹெவியில் நடுவில் ஒன்று பக்கவாட்டில் இரண்டு என மொத்தம் மூன்று பூஸ்டர்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதில் பயன்படுத்தப்பட்ட மொத்த இன்ஜின்களின் எண்ணிக்கை 27. இதற்கு முன்பு இதுபோல எண்ணிக்கையில் வேறு எந்த ராக்கெட்டிலும் பயன்படுத்தப்பட்டதில்லை. இந்த இன்ஜின்கள் ஒன்று சேர்ந்து 5 மில்லியன் பவுண்டுகள் அளவிற்கு உந்து விசையை அளித்தன. விண்ணில் பாயத்தொடங்கி இரண்டரை நிமிடங்களிலேயே 60 கிலோமீட்டர் உயரத்திற்கு சென்ற ராக்கெட்டில் இருந்து பக்கவாட்டு பூஸ்டர்கள் பிரிந்தன. அடுத்த சில நொடிகளிலேயே முதன்மை பூஸ்டரும் பிரிந்து மூன்றும் பூமியை நோக்கி வரத்தொடங்கின. ராக்கெட்டின் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ரோட்ஸ்டெரும் ஸ்டார்மேனும் விண்வெளியில் பத்திரமாக ட்ராப் செய்யப்பட்டார்கள். வேலையைச் சிறப்பாக முடித்த பூஸ்டர்கள் தரையிறங்கிக்கொண்டிருந்தன. அடுத்த சில நிமிடங்களில் பக்கவாட்டு பூஸ்டர்கள் இரண்டும் பத்திரமாகத் தரையிரங்கின. இன்னும் நடு பூஸ்டர் மட்டும்தான் பாக்கி அதைக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படவே அது மட்டும் திட்டமிட்டபடி தரையிறங்கவில்லை. இந்த மொத்த செயல்பாட்டிற்கும் ஃபால்கன் ஹெவி எடுத்துக்கொண்ட நேரம் 8 நிமிடங்கள் மட்டுமே. அதற்குள்ளாகவே சுமந்து சென்ற எடையை விண்ணில் செலுத்திவிட்டு பூஸ்டர்கள் மீண்டும் பூமியில் தரையிறங்கிவிட்டன. இதுவரை வடிவமைக்கப்பட்டதிலேயே அதிக எடையைச் சுமந்து செல்லக்கூடிய நான்காவது ராக்கெட் இதுதான். ஃபால்கன் ஹெவி மூலமாக 64 மெட்ரிக் டன் எடையை பூமியின் சுற்றுவட்டப்பாதைக்குக் கொண்டு செல்ல முடியும்.

  


ஒரே ஒரு பூஸ்டர் திட்டமிட்டபடி தரையிறங்க முடியாவிட்டாலும், சுமந்து சென்ற எடையை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி விட்டதால் மொத்த திட்டமும் வெற்றி பெற்றதாகவே கருதப்படும். இரண்டு நாட்கள் கழித்து நேற்று வெளியான செய்தி ரோட்ஸ்டெரும் ஸ்டார்மேனும் செவ்வாய் கிரகத்தை நோக்கிய பயணத்தில் தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பது. த்ரஸ்டர்கள் சற்று அதிகமாகவே காரை உந்தித்தள்ளி விட்டதால் திட்டமிடப்பட்ட பாதையில் இருந்து சற்று விலகி விட்டதாம். ஒரு பெரிய முயற்சியை மேற்கொள்ளும்போது சில தவறுகள் நடப்பது இயல்புதான் என்பதும் எலான் மஸ்க்கிற்கும் தெரிந்திருக்கும், இந்த ஃபால்கன் ஹெவி ஏவப்படுவதற்கு முன்னால் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது "ஒரு வேளை இந்த முயற்சி தோல்வியில் முடிந்தால் என்ன செய்வீர்கள்" தாமதமின்றி அவரிடம் இருந்து பதில் வந்தது  "அடுத்த வெற்றியை நோக்கி முன்னேறுவேன்" எதிர்மறை எண்ணங்கள் அவரிடம் இருந்து வெறும் பதிலாகக்கூட வெளிப்படாது என்பதற்கு எடுத்துக்காட்டு அது. உலகில் வேறு எந்த அரசு விண்வெளி அமைப்புகள்கூட செய்யத்தயங்கும் முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். இதுபோல சவால் நிறைந்த திட்டங்களை முன்வைத்தால் இவரை பலர் கேலி செய்வார்கள். ஆனால், இப்போது நிலைமை தலைகீழ் அடுத்து இவர் என்ன செய்யப்போகிறார் என்பதை உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருகிறது. சொல்லாததைக்கூட செய்வதுதான் எலான் மஸ்க்கின் ஸ்டைல்.

இதிலும்கூட அப்படித்தான். காரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவது மட்டுமல்ல அவரது திட்டம், அந்தக் கார் நமது சூரியக் குடும்பத்தைக் கடந்தும் பல தொலைவிற்குப் பயணிக்கும் என்பது அவருக்குத் தெரியும். ஒரு வேளை இந்தக் காரை வேற்று உலகத்தைச் சேர்ந்த யாராவது கண்டுபிடித்தால் அவர்களும் படித்துப் பயனுறும்  வகையில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஐசக் அசிமோவின்  'Foundation' என்ற புத்தகத்தின் மொத்த அத்தியாயத்தையும் ஒரு சிடியில் பதிவு செய்து காரில் வைத்திருக்கிறார். அது மட்டுமில்லை; காரில் இருக்கும் சர்க்கியூட் போர்டில் எலான் மஸ்க் பதிவு செய்திருக்கும் வாசகம்  "Made on Earth by humans." இது "பூமியில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது" என்று ஆங்கிலம் தெரிந்த வேற்றுகிரகவாசி எதிர்காலத்தில் படிக்கக்கூடும். 

எதிர் நீச்சலை இனி ’எலான் மஸ்க் நீச்சல்’ என்றும் சொல்லலாம்; கொஞ்சம் பெரிதாக இருந்தாலும்கூட.

.



Trending Articles

Sponsored