ஃபேஸ்புக்கில் மீம்ஸ் ஏன் வீடியோக்களாக அப்லோடு செய்யப்படுகின்றன? - ஒரு சுவாரஸ்ய போர்



Sponsored




ஃபேஸ்புக் டைம்லைனை தன் இஷ்டத்துக்கு மாற்றிக்கொண்டே வருவது தெரிந்த விஷயம். முதலில் நிறைய போஸ்ட் கண்ணில்பட்டன. சென்ற ஆண்டு அதை வீடியோக்கள் கைப்பற்றின. ஃபேஸ்புக்கை திறந்தாலே வீடியோக்கள் மட்டுமே அதிகம் வரும். அப்போதுதான் முதன்முதலில் நம் டைம்லைனை ஃபேஸ்புக் தன் இஷ்டத்துக்கு மாற்றும் என்பதே பரவலாகத் தெரிய வந்தது. “என் டைம்லைன் என் உரிமை” என்பதெல்லாம் கமென்ட்டில் போட்டுக் கொள்ளலாம். உண்மையில். நம் டைம்லைன் ஃபேஸ்புக் உரிமை என்பதுதான் சரி.

எப்படியாவது ஃபேஸ்புக் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தங்களுக்கு தேவையான ரீச் பெற தனி நபர்களும், நிறுவனங்களும் ஏதாவது ஒன்றை செய்துகொண்டேதான் வந்தனர். வேறு தளத்தின் லிங்க்கை நம் ஃபேஸ்புக் போஸ்ட்டில் போட்டால், அதற்கு லைக்ஸ் குறைவாகத்தான் வரும். காரணம், அந்த லிங்க்கைக் க்ளிக் செய்து வாடிக்கையாளர்  ஃபேஸ்புக்கை விட்டு வேறு தளத்துக்குச் சென்றுவிடுவார் என்பதே. இதை ஃபேஸ்புக் விரும்பாது. தனது வாடிக்கையாளர் தனது தளத்திலே இருக்க வேண்டுமென்பதுதான் அனைத்து சமூக வலைதளங்களின் நோக்கம். இதனால்தான் வேறு தளத்தின் லிங்க் கொண்ட ஸ்டேட்டஸ்களை அதிகமானவர்களுக்குக் காட்டாது ஃபேஸ்புக். இதைச் சமாளிக்க அந்த லிங்க் பற்றிய விஷயத்தை மட்டும் ஸ்டேட்டஸில் சொல்லிவிட்டு, லிங்க்கை கமென்ட்டில் கொடுக்கத் தொடங்கினர் ஃபேஸ்புக் பயனர்கள். இது ஓரளவுக்கு ஹிட் ஆன ஐடியாதான். இதன் தொடர்ச்சியாக மீம்ஸ் பக்கங்களுக்கும் ஃபேஸ்புக்குக்கும் ஒரு தொடர் போரே நடந்து வருகிறது. அதுதான் இப்போதைய சுவாரஸ்ய கலாட்டா.

Sponsored


மீம்ஸ் பக்கங்களின் ரீச்சைக் குறைக்க முடிவு செய்தது ஃபேஸ்புக். மீம்ஸ் மூலம் விளம்பரம் செய்து அவர்கள் சம்பாதிப்பதால் ஃபேஸ்புக் அதைக் குறைக்க நினைத்தது. ஃபேஸ்புக்கில் விளம்பரம் ஆகும் செலவைவிட மிகக் குறைந்த விலையிலே மீம்ஸ் மூலம் விளம்பரம் செய்யலாம் என்பதே அதற்கு காரணம். அதனால், புகைப்படங்களின் ரீச்சை டைம்லைனில் குறைத்து வீடியோக்களின் ரீச்சை அதிகரித்தது. இதைப் புரிந்துகொண்ட மீம்ஸ் பக்கங்களின் அட்மின்கள், தங்கள் மீமை 10 செகண்ட் வீடியோவாக மாற்றி அதை ஷேர் செய்யத் தொடங்கினர். 10 செகண்ட்டும் நகராமல் அதே புகைப்படம் இருக்குமென்பதால் பயனர்களுக்கும் அந்த வீடியோ ஒரு புகைப்படம் போலவே இருக்கும். ஃபேஸ்புக்கின் கோட்-ஐ அந்த வீடியோ ஏமாற்றும் என்பதால் அவர்களுக்கு அதிகமான ரீச் கிடைத்தது.

Sponsored


கொஞ்ச நாள் கழித்து இதை ஃபேஸ்புக்கும் புரிந்துகொண்டது. உடனே, ஸ்டேட்டிக் வீடியோக்களைக் கண்டறிந்து, அவற்றின் ரீச்சையும் குறைத்தது. மீண்டும் மீம்ஸ் பக்க அட்மின்களின் மூளை ஓவர்டைம் செய்தது. இந்த முறை வீடியோக்களில் ஆங்காங்கே பூக்கள் தூவுவது போன்ற ஃபில்டர்களைச் சேர்க்கத் தொடங்கினர். இதனால் ஃபேஸ்புக்கின் கோட், அதை ஸ்டேட்டிக் வீடியோ இல்லை என நம்பி அனைவரது டைம்லைனிலும் அனுமதித்தது.

நிச்சயம், இந்நேரம் ஃபேஸ்புக் இதையும் கண்டுபிடித்திருக்கும். அதன் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக பேஜ் அட்மின்கள் காத்திருக்கின்றனர்.

முன்னர் கூகுள் சர்ச்சின் முதல் பக்கத்தில் தங்கள் இணையதளத்தின் முகவரி வர ஏகப்பட்ட விஷயங்களைச் செய்து வந்தனர். இதனால் கூகுள் தனது சர்ச் லாஜிக்கை அடிக்கடி மாற்றியமைத்தது. பின்னர் அதுவே ஒரு முக்கியமான வேலைவாய்ப்பை உருவாக்கும் ஏரியாவாகிப் போனது. இப்போது மீம்ஸும் அப்படித்தான். பொழுதுபோக்கு என்னும் நிலையிலிருந்து மீம்ஸ் ஒரு முக்கியமான வேலைவாய்ப்புகள் தரும் விஷயமாகிவிட்டது.

உங்கள் ஃபேஸ்புக் டைம்லைன் இப்போது எப்படியிருக்கிறது? நீங்கள் விரும்பியபடி இருக்கிறதா?
 



Trending Articles

Sponsored