சைபர் அட்டாக்கில் இது புதுசு... மின்சாரம் தந்து தகவல் திருடும் 'ஜூஸ் ஜேக்கிங்'! #JuiceJackingSponsoredடிஜிட்டல் உலகைப் பொறுத்தவரையில் தகவல்களைக் கையாள்வது எவ்வளவு எளிதாக இருக்கிறதோ அது அளவு எளிதானது அத்தகவல்கள் களவாடப்படுவது. முன்பெல்லாம் டிஜிட்டலில் ஒரு தகவலை பதிவு செய்வதுதான் கடினமான வேலை. ஆனால் இன்றைக்குத் தகவலை சேமிப்பது மிக எளிது. அதைப் பாதுகாப்பதுதான் பெரிய வேலையாக இருக்கிறது. நாளுக்கு நாள் பாதுகாப்பு வசதிகள் அப்டேட் ஆனாலும் தகவல் திருட்டுக்கான வழிகளும் புதிதாக உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. மொபைலோ, கணினியோ எதுவாக இருந்தாலும் ஒருவருக்குத் தெரியாமல் தகவல் திருடப்படுவதுதான் அதிகம் நடைபெறுகிறது. அதில் இந்த ஜூஸ் ஜேக்கிங்கும் ஒன்று. மற்ற சைபர் தாக்குதல்கள் போல இல்லாமல் இந்த ஜூஸ் ஜேக்கிங் என்ற வார்த்தை பலருக்கும் புதிதாக இருக்கலாம்.

ஹேக்கர்களின் வலையில் தானே போய் சிக்குவதுதான் 'ஜூஸ் ஜேக்கிங்'

Sponsored


Sponsored


மற்றவகை தகவல் திருட்டுகளில் இருந்து ஜூஸ் ஜேக்கிங் எந்த வகையில் வேறுபட்டது என்பதை, அது எப்படி நிகழ்கிறது என்பதை வைத்தே புரிந்துகொள்ள முடியும். பொது இடங்களில் மொபைலில் சார்ஜ் தீர்ந்துபோய் எப்படியாவது ஒரு சார்ஜர் கிடைத்து விடாதா என்று தேடித் திரிபவர்கள்தான் ஹேக்கர்களின் முதல் இலக்கு. அப்படியே போகிற போக்கில் மொபைலில் சார்ஜ் ஏற்றிக்கொள்பவர்களும் இந்தத் தாக்குதலுக்கு ஆளாவதுண்டு. மக்கள் கூடும் பொது இடங்களில் சார்ஜர்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காக பவர் பாயின்ட்கள் அமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். அதே போல சார்ஜரை கையில் எடுத்துவராதவர்களும் பயன்படுத்தும் வகையில் சில பவர் பாயின்ட்களில் நேரடியாக USB போர்ட்களும் கொடுக்கப்பட்டிருக்கும். நமது ஊரில் இந்த USB போர்ட் சார்ஜர்களை அதிகம் பார்க்க முடியாது, ஆனால் வெளிநாடுகளில் விமானநிலையம், ஹோட்டல், பேருந்துகள், மால்கள், என மக்கள் கூடும் இடங்களில் இந்த வகை சார்ஜர்களை அதிகமாகப் பார்க்கலாம். இதில் இருக்கும் வசதி என்னவென்றால் நேரடியாக USB கேபிளை பயன்படுத்தி மொபைலை சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த விஷயத்தைத்தான் ஹேக்கர்கள் அவர்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்கிறார்கள்.

மொபைல்கள் USB போர்ட்கள் வழியாகவே தகவல்களையும் பரிமாறிக்கொள்வதால் தகவல் திருட்டு என்பது எளிதாகிறது. USB பவர் பாயின்ட்களில் ஒரு ஸ்மார்ட்போன் இணைக்கப்பட்டவுடன் எளிதாகத் தகவல்களை திருடவோ அல்லது ஏதாவது மால்வேர்களையோ மொபைலில் இன்ஸ்டால் செய்து விடுகிறார்கள். இந்தத் தகவல் திருட்டு பலருக்கும் தெரியாமலே நடக்கிறது. மொபைலில் சார்ஜ் ஏறுவதற்காக அதிக நேரம் காத்திருப்பதும் அவர்களுக்குச் சாதகமாகி விடுகிறது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பிரபலமாகத் தொடங்கிய போதே இந்த முறையில் தகவல்கள் திருடப்படுவது நடந்து வந்துள்ளது. அதன் பிறகு ஆண்ட்ராய்டின் USB போர்ட்டில் இருந்த குறைகள் சரி செய்யப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இருந்தாலும் இது பற்றிய விழிப்புஉணர்வு இல்லாத காரணத்தால் இன்றைக்கும் பலர் இது போன்ற சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகிறார்கள். இந்தியாவில் இது போன்ற USB பவர் பாயின்ட்கள் குறைவு என்பதால் ஜூஸ் ஜேக்கிங்கும் குறைவாகவே நடைபெறுகிறது. சமீபகாலங்களாக இங்கும் சில இடங்களில் USB சார்ஜர்கள் இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகமாகலாம். ஜூஸ் ஜேக்கிங் தாக்குதலில் இருந்து தப்பிக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் போதுமானது.

ஜூஸ் ஜேக்கிங் தாக்குதலை தவிர்க்க என்ன செய்யலாம்?

  • வெளி இடங்களுக்குக் கிளம்பும் முன்னர் மொபைலில் முழுவதுமாக சார்ஜ் இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது.
  • நீண்ட தூர பயணங்களுக்குச் செல்பவர்கள் என்றால் பவர் பேங்க்-களை பயன்படுத்தலாம். 
  • பொது இடங்களில் USB இருக்கும் சார்ஜிங் போர்ட்களை பவர் பேங்க் -களை  சார்ஜ் செய்வதற்கு மட்டும் பயன்படுத்தலாம்.
  • கணினியாக இருந்தாலும் கூட அது முறையாகப் பாதுகாக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்னர் மட்டுமே USB சார்ஜிங் போர்ட்களை பயன்படுத்த வேண்டும்.
  • USB போர்ட்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், மொபைலை அன்லாக் செய்யாமலோ, ஸ்விட்ச் ஆப் செய்தோ சார்ஜ் செய்யலாம். 
  • பொது இடங்களில் USB சார்ஜிங் போர்ட்களுக்கு பதிலாக மொபைல் சார்ஜர்களையே பயன்படுத்த வேண்டும்.
  • கடைகளில் 'Charge only' கேபிள்கள் கிடைக்கின்றன, இவற்றின் மூலமாக சார்ஜ் மட்டுமே ஏற்ற முடியும். இவற்றின் மூலம் டேட்டாக்களை பரிமாற முடியாது என்பதால் இவையும் பாதுகாப்பானதாக இருக்கும்.Trending Articles

Sponsored