ஒவ்வொரு 11 நாளுக்கும் ஒரு மொழி அழிகிறது... களத்தில் இறங்கிய கூகுள்!
உலக முழுவதும் கிட்டத்தட்ட 7,000- க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் UN-ன் மதிப்பீட்டின்படி அடுத்த அரை நூற்றாண்டின் இறுதிக்குள் இவற்றில் பாதி மொழிகள் அழிந்து விடும் என்று கூறியுள்ளனர். இந்த அழிவு திடீரென நிகழ்ந்து விடவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக அம்மொழிகள் சிதைக்கப்பட்டு அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்படுகிறது. இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் 18 மொழிகள் கண்டிப்பாக அழிந்துவிடும் நிலையில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மொழிகளைப் பேச ஒவ்வொரு மொழிக்கும் தலா ஒருவர் மட்டுமே இருக்கிறார் என்று U.N Atlas of Endangered Languages கூறியுள்ளது. இந்த மொழிகளைப் பேசும் அந்த ஒருவர் இறந்து போனால் அந்த மொழியும் அவரோடு இறந்து போய்விடும். அந்த மொழியைக் கடைசியாகப் பேசியவர் அவராகத்தான் இருக்க முடியும். இதுமட்டுமல்லாமல் 574 மொழிகள் `ஆபத்தான நிலையில்' உள்ளது. இந்த மொழிகள் அழியாமல் இருப்பதற்குக் கற்றல் வழிமுறைகளை எளிமைப்படுத்துவது, அந்த மொழியின் மீதான அரசாங்கத்தின் அணுகுமுறை, வயதானவர்கள் தங்களின் மொழி, அவற்றின் முக்கியத்துவம் பற்றிய புரிதலை இளைய தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த நூற்றாண்டின் இறுதியோடு உலகில் 90 சதவிகிதம் மொழிகள் அழிவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மொழியியல் வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு 11 நாள்களுக்கும் ஒரு மொழி புழக்கத்திலிருந்து அழிவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

Sponsored


மனித வரலாற்றில் சொல்லப்படாத பல மொழிகள் அழிந்துள்ளன. இருந்தாலும் ஒரு மொழியின் அழிவு எப்படி மனிதனைப் பாதிக்கும் என நீங்கள் கேட்கலாம். மொழி என்பது பிறரோடு தொடர்புகொண்டு பேசுவதற்கு மட்டும் அல்ல ; அவை ஓர் இனத்தின் வரலாறு, கலாசாரம், ஆன்மிகம், அறிவு என அனைத்தையும் தாங்கிக்கொண்டிருக்கிறது. மொழிகள் ஒரு தனிமனிதரின் அடையாளமும் கூட. 
   
இப்படி அழியும் மொழிகள் மெள்ள மெள்ள அவர்களின் சந்ததியினராலேயே மறக்கப்பட்டு பின்னர் வரலாற்றுச் சுவடு கூட இல்லாமல் போவது பெரும் சோகம். இந்த மொழிகளை வரலாற்றின் பக்கங்களிலிருந்து மறைக்கப்படாமல் காக்க கூகுள் ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. Linguistic diversity என்ற நிறுவனத்துடன் இணைந்து  www.endangeredlanguages.com என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது கூகுள். இந்தத் தளத்தில் உள்ளே சென்று explore பொத்தானை அழுத்தினால் உலக வரைபடம் தோன்றும். இது மொழிகளுக்காக உருவாக்கப்பட்ட வரைபடம். இதில் எந்தெந்த நாட்டில் எந்தெந்த இடத்தில் அழியும் நிலையில் மொழிகள் உள்ளன எனப் புள்ளி வைத்துக் காட்டும், அந்தப் புள்ளியினை கிளிக் செய்தால் அந்த மொழியினைப் பற்றிய சில தகவல்கள் தோன்றும். மொழிகளைக் காக்க வேண்டும் என்று ஆர்வம் உங்களுக்கு இருந்தால் அதில் கொடுக்கப்பட்டுள்ள மொழிகள் பேசுவோர் எவரேனும் பற்றித் தெரிந்தாலோ, அல்லது அந்த மொழியால் எழுதப்பட்ட சிறு குறிப்பு கிடைத்தாலும் அதனை இந்தத் தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அதனை அந்தக் குறிப்பிட்ட மொழி ஆவணங்களுடன் சேர்க்கப்பட்டுவிடும். இனி எத்தனை தலைமுறை வந்தாலும், இப்படி ஒரு மொழி இந்த இடத்தில் பேசப்பட்டு வந்தது எனத் தெரிந்துகொள்ளலாம்.

Sponsored


Sponsored


 கிரேக்கம், லத்தீன், ஹீப்ரூ போல உலகில் பழைமையான மொழிகள் பல உண்டு. பழமையான மொழிகளில் நம் தமிழ் மொழியும் ஒன்று. கிரேக்கம், லத்தீன் மொழிகள் எல்லாம் காலத்தின் போக்குக்கு ஈடு கொடுக்க முடியாமல் அழிந்து விட்ட நிலையில், பல ஆண்டு காலம் எந்த மொழியின் ஆதிக்கத்துக்கும் பணிந்து விடாமல் தழைத்து நிற்பது நம் தமிழ் மொழி. இப்போது அழிவுச் சாயல் தமிழ் மொழி மீது இல்லை. எனினும், காலப் போக்கில் அதன் சாயல் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை. இனி வரும் தலைமுறையினருக்கு மொழியை மட்டும் கடத்தாமல், மொழியின் தொன்மையையும் உணர்ச்சிகளோடு சேர்த்துக் கடத்தினால் நிச்சயம் எத்தனை காலம் ஆனாலும் நம் மொழியை அழிவின் பக்கம் செல்லாமல் தடுக்கலாம்.Trending Articles

Sponsored