'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்! #GoogleTrends



முன்பெல்லாம் தமிழில் வெளிவரும் படங்கள் ஓடவில்லை என்றால் `` ஏன்ப்பா, இந்தப் படம் தேறாது. ஏதாவது பழைய எம்.ஜி.ஆர் படத்த போடுவொம்" என்று தியேட்டர் முதலாளிகள் படத்தை மாற்றிக் கல்லா கட்டுவது வழக்கம். இதேபோன்று, 2005-ம் ஆண்டுக்குப் பிறகு 'பி','சி' சென்டர்களிலுள்ள பல தியேட்டர்களில் ஓடாத படங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட 'விஜய்' படங்கள் ரீ ரிலிஸ் செய்யப்பட்டன.

புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலுள்ள சின்னச் சின்ன ஊர்களில் இருக்கும் திரையரங்குகளில் விஜய்க்கு சரியாக போகாத படங்கள் என விமர்சிக்கப்பட்ட சுறா, வேட்டைக்காரன் போன்றவைதான் ரீ ரிலிஸிலும் கல்லா கட்டியவை. திரையரங்குகளில் எண்டெர்டெயினராக வலம் வரும் விஜய்க்கு ஆன்லைனிலும் வசூல் வேட்டைதான். ரசிகர்களின் ட்ரெண்டிங்கில் விஜய்க்கு எப்போதும் நம்பர் 1 இடம்தான். கூகுள் தேடலில் விஜய் என்று தேடினால் என்னவெல்லாம் ட்ரெண்டாகியிருக்கிறது என பார்த்தால் கிடைக்கும் தகவல்கள் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். 

Sponsored


Sponsored


கடந்த 5 வருடங்களில் யூடியூபில் வியூஸ் மற்றும் லைக்ஸ், ட்விட்டரில் ஹேஷ்டேக், எமோஜி மற்றும் ரீ ட்வீட்ஸ், ஆன்லைன் சினிமா டிக்கெட் புக்கிங்கில் சைட்டை க்ராஷ் செய்தது மற்றும் பிறந்தநாளுக்கென 'பர்த்டே ஸ்பெஷல்' போர்ட்டல் உருவாக்கப்பட்டது என இணையத்தின் அனைத்து ஏரியாக்களிலும் மெர்சல் காட்டியது விஜய் ரசிகர்கள்தான். ட்விட்டர், பேஸ்ஃபுக் மற்றும் பல முன்னணி இணையதளங்களில் ``தமிழில், ஆன்லைன் ரசிகர்கள் யாருக்கு அதிகம்?" என்று நடத்தப்படும் கருத்துக்கணிப்புகளில் அதிகமான வெற்றியைக் கண்டவர் விஜய்தான். ட்விட்டர் மற்றும் யூடியூப் ட்ரெண்டிங்கைத் தாண்டி கூகுள் ட்ரெண்ஸிலும் பட்டையைக் கிளப்பியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில், விஜய் எங்கு, எப்படி, எவ்வாறெல்லாம் தேடப்பட்டிருக்கிறார் என்ற விவரங்கள் இதோ...

Sponsored


அதிகம் தேடிய நாடு ?

உலகிலுள்ள 7 கண்டங்களில் விஜய்யின் பெயர் தேடப்படாத ஒரே கண்டம் அண்டார்டிக்கா. மற்ற ஆறு கண்டங்களிலும் தேடப்பட்டுள்ளார் விஜய். கடந்த 5 வருடங்களில் இவரது பெயரை அதிகம் தேடிய நாடுகள் இந்தியாவும், இலங்கையும்தான். துணைக்கண்டம் தவிர மத்திய கிழக்கு நாடுகளிலும் அமெரிக்காவிலும் அதிகமாக விஜய்யின் பெயர் தேடப்பட்டுள்ளது. தெறி விஜய், மெர்சல் விஜய் ஆகிய படங்களோடு சேர்த்தும் இவரது பெயர் அதிகமாக தேடப்பட்டுள்ளது. 

இந்தியாவில் அதிகம் விஜய்யைத் தேடியது புதுச்சேரிதான் என்கிறது கூகுள் ட்ரெண்ட்ஸ். அதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்திலுள்ளது தமிழகம். மூன்றாவது இடத்தில் விஜய்க்கு அதிக ரசிகர்களுள்ள அண்டை மாநிலமான கேரளாதான். தமிழகத்தில் விஜயை அதிகம் தேடியது டெல்டா மாவட்டங்களான திருச்சி மற்றும் தஞ்சாவூர். 

அதிகம் தேடப்பட்ட விஜய் பட போஸ்டர்?

2008-ல் இருந்து தற்போது வரை 17 படங்களில் நடித்துள்ளார் விஜய். ஆனால், கூகுளின் புகைப்படத் தேடலில், அன்றிலிருந்து இன்றுவரை அதிகம் தேடப்பட்டது 'கத்தி விஜய்' என்பதுதான். ஜூன் 21, 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்ட கத்தி போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விஜய்-முருகதாஸ் கூட்டணியின் இரண்டாவது படம், அனிருத்தின் டாப் க்ளாஸ் பின்னணி இசையோடு, சென்னையின் முக்கிய இடங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து  கூர்மையான பார்வையுடன் வரும் விஜய்யின் 'கத்தி' மோஷன் போஸ்டரை மறக்கமுடியுமா. இரண்டாவதாக அதிகம் தேடப்பட்டது,

விஜய் முதல் முறையாக தாடி, முறுக்கு மீசை என மிரட்டலான லுக்கில் வெற்றிமாறனாக தோன்றிய மெர்சல் புகைப்படங்கள்தான். மெர்சல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்தான் ட்விட்டரில் அதிக ரீ ட்வீட்களைப் பெற்ற தமிழ் படப் போஸ்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இணையத்தில் கடந்த 10 வருடங்களில் விஜய் படங்களில் இன்று வரை அதிகம் தேடப்பட்ட படம் கத்தி தான். 

அதிகம் தேடப்பட்ட விஜய் வீடியோ ?

இந்தியளவில் சாதனைகளைச் செய்துகொண்டிருந்த தமிழ்ப் பட டீசர்களிடையே, முதன்முதலாக உலக சாதனை செய்தது மெர்சல் டீசர். உலகளவில் 1 கோடி லைக்ஸ்களை அள்ளிய முதல் திரைப்பட டீசர் மெர்சல் டீசர்தான். யூடியூப்பில் ரஜினி, அஜித், விஜய் படங்களின் டீசர்/டிரெய்லர்கள் மாறி மாறி சாதனைகளை முறியடித்துக் கொள்வது வழக்கம். ஆனால், மெர்சலுக்குப் பின் எந்தப் படமும் இந்தச் சாதனையை முறியடிக்கவில்லை. தற்போதுவரை மெர்சல் டீசர் 3.9 கோடி பேர் பார்த்துள்ளனர். இதுவரை வந்த டீசர்களில், அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் டீசர் மெர்சல்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் பாடலாகவே மாறியுள்ள 'ஆளப்போறான் தமிழன்' பாடலின் வீடியோவை இதுவரை 5.4 கோடி ரசிகர்கள் பார்த்துள்ளனர். இவ்வளவு சாதனைகளைப் படைத்துள்ள மெர்சலைத் தவிர வேறெந்தப் படம் யூடியூப் தேடலில் முதலிடத்தைப் பெற முடியும். 'விஜய் மெர்சல்' ஆகிய வார்த்தைகளைத்தான் அதிகம் யூடியூபில் தட்டியுள்ளனர் ரசிகர்கள். 

யூடியூப் தேடல்களில், ' விஜய் இந்தி டப்டு மூவீஸ்' என்பதும்  இடம்பெற்றிருக்கிறது. இந்தியில், 'கோல்டுமைன் டெலிஃபிலிம்ஸ்' என்ற யூடியூப் சேனல் தமிழ்ப் படங்களை டப் செய்து வெளியிடுகிறது. இந்தியில் டப் செய்யப்பட்ட தமிழ் படங்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் விஜய்யின் 'தெறி' படம்தான். 6.9 கோடி பேர் இந்தப் படத்தை பார்த்துள்ளனர். இந்தியில் டப் செய்யப்பட்ட  'பைரவா' படத்தை 5.9 கோடி பேரும், 'சுறா' படத்தை 3.7 கோடி பேரும் பார்த்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் விஜய்!

கூகுளில் ஒரு முக்கிய நடிகரின் படம் வெளியானால் கூகுளில் அதிகமாக தேடப்படுவது எல்லாம் எல்லாருக்கும் நடக்கும் விஷயம்தான். ஆனால், கூகுளின் இந்தத் தேடல்தான் விஜய் எனும் நடிகருக்குப் பலமாக அமைந்துள்ளது. உலக அளவில் ''Next Superstar Vijay'' எனும் வார்த்தை எப்போதெல்லாம் விஜய் படம் வெளியாகிறதோ அப்போதெல்லாம் கூகுளில் அதிகமாக தேடப்படுகிறது. 


விமர்சனம், சர்ச்சை, பாராட்டு, சமூக அக்கறை, அமைதி என விஜய்க்கு ஆண்டுதோறும் ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் ஆன்லைனில் அமைதியாக ஹிட் அடிக்கும் விஜய்க்கு பிறந்தநாளின் முதல் ட்ரெண்டாக வந்திருக்கிறது சர்கார். விஜய்யை கூகுளில் எப்படியெல்லாம் தேடியிருக்கிறீர்கள் என கமெண்டில் சொல்லுங்களேன்.



Trending Articles

Sponsored