``நம்புங்க... இதுதான் நாங்க செஞ்ச சேட்டிலைட்!” - நாசாவை ஆச்சர்யப்படுத்திய சென்னை மாணவர்கள்



Sponsored



நாசா, 'க்யூப்ஸ் இன் ஸ்பேஸ்' (Cubes in space) என்ற திட்டத்தை வருடா வருடம் நடத்தி வருகிறது. அதில் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டு கையடக்க செயற்கைக் கோள்களை உருவாக்க, அது நாசாவால் விண்ணில் ஏவப்படும். சென்ற வருடம் சென்னையைச் சேர்ந்த ரிபாத் ஷாரூக் தலைமையிலான அணியின் 'கலாம் சாட்' விண்ணில் ஏவப்பட்டது. 

இதோ இப்போது மறுபடியும் ஒரு கையடக்க செயற்கைக்கோள் அதே நாசாவின் க்யூப்ஸ் இன் ஸ்பேஸ் திட்டத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த முறை சென்னை ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸைச் சேர்ந்த முதலாமாண்டு ஏரோஸ்பேஸ் பொறியியல் மாணவர்கள் இதைத் தயாரித்திருக்கிறார்கள்.

இதை முதலாமாண்டு ஏரோஸ்பேஸ் மாணவர்கள் ஹரி கிருஷ்ணன், அமர்நாத், கிரி பிரசாத் மற்றும் சுதி ஆகிய நால்வரும் உருவாக்கியிருக்கிறார்கள். இதைப் பற்றி மேலும் தகவல்களைப் பெற ஹரி அவர்களைத் தொடர்பு கொண்டோம், ``பர்ஸ்ட் நாங்க இந்த மாதிரி ஒரு ஐடியா வச்சிருக்கோம்னு ஒரு ப்ரொபோஸல் சப்மிட் பண்ணோம். அந்த ஐடியவை க்யூப்ஸ் இன் ஸ்பேஸ்ல இருந்து உடனடியா பரிசீலிச்சு செயற்கைக்கோள் செய்யறதுக்கு ஒப்புதல் அளிச்சாங்க. அதற்கப்புறமாதான் இந்தச் செயற்கைக்கோளைத் தயாரிச்சிருக்கோம்" என தன் கையைத் திறந்து காண்பிக்கிறார். ஒரு குட்டி செயற்கைக் கோள் உட்கார்ந்திருக்கிறது. 

Sponsored


இந்தச் செயற்கைக்கோளின் செயல்பாடுகளைப் பற்றி அமர்நாத் விளக்கினார், ``இந்தச் செயற்கைக்கோளை மூன்று விஷயங்களுக்காக நாங்க தயாரிச்சிருக்கோம். நைலான், மைக்ரோ கிராவிட்டியில எப்படி ரியாக்ட் பண்ணும்னு தெரியாது. அதுனால நைலானோட பண்புகள் மைக்ரோகிராவிட்டில எப்படி இருக்குனு தெரிஞ்சுக்கறதுதான் இதோட முக்கிய நோக்கம். செயற்கைக்கோளோட பயணப்பாதை, வானிலை ஆய்வு இது ரெண்டுக்கும் சேர்த்து செயல்படுற மாதிரிதான் செயற்கைக்கோளை வடிவமைச்சிருக்கோம்" என்றார்

Sponsored


இதைத்தொடர்ந்து பேசிய கிரி பிரசாத், ``மேற்சொன்ன மூன்று விஷயங்களையும் கண்காணிக்கவும் அதுல இருந்து தகவல்களை சேகரிக்கிறதுக்கும் சென்சார்கள் பொருத்தியிருக்கிறோம். அந்த சென்சார்கள் எல்லாம் ஒரு மைக்ரோ கண்ட்ரோலரோட இணைஞ்சிருக்கு. இதன் மூலமா பெறப்படும் தகவல்கள் ஒரு மெமரி கார்ட்ல சேகரிக்கப்படும். அதை வச்சு நாம அந்த தகவல்கள ஆராய்ச்சி செய்யலாம்" என்றார். 

``இதுக்கு முன்னாடி ரிஃபாத் டீம் தயாரிச்ச செயற்கைக்கோள் 64 கிராம். அதுதான் உலகிலேயே எடை குறைந்த செயற்கைக்கோள் (Lightest Satellite). இந்தச் செயற்கைக்கோள் அதைவிடக் குறைவான எடையா 33 கிராம்ல வடிவமைச்சிருக்கோம். இது விண்ணில் ஏவப்பட்டதும் இதுதான் உலகிலேயே எடை குறைவான சேட்டிலைட்டா இருக்கும்" என்றார் சுதி.  இவர்களின் இந்தக் கையடக்க செயற்கைக்கோள் 3d முறையில் நைலானால் தயாரிக்கப்பட்டுள்ளது. 'ஜெய்ஹிந்த் - 1S' (JAIHIND - 1S) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் செயற்கைக்கோள் வரும் ஆகஸ்ட் மாதம் நாசாவின் மூலம் விண்ணில் பாய உள்ளது. 

இதேபோல பலருக்கும் பல ஐடியாக்கள் இருக்கும். இந்தப் போட்டியில் பங்குபெறுவது எப்படி என்ற வழிமுறை இதோ. முதலில் இந்தப் போட்டிக்கான அறிவிப்பு  www.cubesinspace.com என்ற இணையதளத்தில் வெளியாகும். டிசம்பரில் இருந்து ஜனவரிக்குள் இந்த அறிவிப்பு இருக்கலாம். பின்னர் நீங்கள் இந்தப் போட்டில் கலந்துகொள்கிறீர்கள் என அதில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். அதன் பின்னர் நீங்கள் கொடுத்திருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கே உங்களுக்கான அறிவிப்புகள் வரும். அதன் தொடர்ச்சியாக உங்களுடைய செயற்கைக்கோளுக்கான யோசனையைச் சமர்ப்பிக்க வேண்டும். அதில் சின்னச் சின்ன திருத்தங்களுடன் ஒப்புதல் அளிக்கப்படும். அதன் பின்னர் நீங்கள் செயற்கைக்கோளைத் தயாரித்து அனுப்ப வேண்டும், அது அவர்களின் கடைசிகட்ட ஒப்புதலுடன் ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்படும் (மேற்கண்ட அனைத்துமே மின்னஞ்சல் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும்). இதில் கலந்துகொள்ள ஒரே ஒரு நிபந்தனை. நீங்கள் 12 வயதில் இருந்து 18 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 

இரண்டாவது முறையாக க்யூப்ஸ் இன் ஸ்பேஸ் நிறுவனத்தின் மூலம் தமிழ்நாட்டில் இருந்து செயற்கைக்கோள் விண்ணுக்குச் செல்கிறது. இவர்களுக்கு நாமும் நம் வாழ்த்துகளைத் தெரிவிக்கலாமே!



Trending Articles

Sponsored