ஒரே ஆண்டில் 29 பேரைக் கொலை செய்த கொடூரமானவன்... உஷார்!



Sponsored



ஒரே ஆண்டில் 29 பேரை ஒருவர் கொல்கிறார். அத்தனை பேரும் அப்பாவிகள். யார் மீதும் சின்ன தவறு கூட கிடையாது. ஒரே ஊரில் இல்லாமல் இந்தியா முழுவதும் பரவலாக அனைத்து இடங்களிலும் அந்தக் கொலைகள் நடக்கின்றன. அவரை என்னவென்று சொல்வீர்கள்? அவருக்கு என்ன தண்டனை வழங்குவீர்கள்? நன்றாக யோசித்துவிட்டு தண்டனையை முடிவு செய்யுங்கள். ஏனெனில், அந்தக் கொலைகளுக்கும் உங்களுக்கும் கூட தொடர்பு இருக்கலாம்.

கொலையாளியின் பெயர் வாட்ஸ்அப். இந்தக் கொலைகளுக்கு உதவியவர்கள் கோடிக்கணக்கான பெயர். கொலை செய்ய அவர்கள் பயன்படுத்திய ஆயுதம், ஒரே ஒரு ஃபார்வர்டு மெஸெஜ்.

ஆம். சென்ற ஆண்டு மே மாதம் ஒரு மெஸெஜ் உருவாக்கப்பட்டது. அதில், ”குழந்தையைக் கடத்தும் ஏகப்பட்ட கொள்ளையர்கள் நம் மாநிலத்துக்குள் ஊடுருவியிருப்பதாக செய்தி பதிவானது. அவர்களைப் பார்த்தால் நம் குழந்தைகளைப் பத்திரப்படுத்திக் கொள்ளவும்” என்றிருந்தது. எந்த மாநிலம் என யாரும் கேட்கவில்லை. ஜம்மு முதல் குமரி வரை அனைத்து மாநில மக்களும் அதை ஷேர் செய்யத் தொடங்கினர். ஒருவேளை, அது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். ஒருவருக்குக் கூட குழந்தைகளை எப்படி பத்திரமாய் பார்த்துக் கொள்வது என்பது பற்றிய சிந்தனை வரவில்லை. இது தொடர்பாக பள்ளியிலோ, வீட்டிலிருப்பவர்களுடனோ பேச வேண்டும் என்று தோன்றவில்லை. அவர்களுக்குத் தோன்றிய பாதுகாப்பு நடவடிக்கை, ஷேர். வந்த மெஸெஜை 10 பேருக்கு ஷேர் செய்துவிட்டால், அவர்கள் விழிப்பாய் இருப்பார்கள் என்ற நம்பிக்கை. வந்த ஃபார்வர்டைப் பார்த்து நாம் விழுப்புடன் இருந்தோமா என்றெல்லாம் யோசிக்க அவர்களுக்கு நேரமில்லை. ஏனெனில், அடுத்து க்ரூப்பில் இன்னொரு ஃபார்வர்டு வந்திருக்கும்.

Sponsored


இந்த ஒரு ஃபார்வர்டு மெஸெஜ் தான் இந்தியா முழுவதும் பறந்தது. விளைவு,இந்த ஓராண்டில் 29 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இல்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அத்தனை பேரையும் குழந்தைகளைக் கடத்துபவர்கள் என நினைத்து பொதுமக்களே அடித்துக் கொன்றிருக்கிறார்கள். கொலை செய்தவர்கள் யாரும் தீவிரவாதிகள் கிடையாது. தொழில்முறை கொலைகாரர்கள் கிடையாது. 2,3 கொலைகள் செய்த முன் அனுபவம் கிடையாது. ஆனால், அடித்துக் கொன்றிருக்கிறார்கள்.

Sponsored


சினிமாவில் பழிவாங்கும் கதைகளில் கொலை நடக்கும் காட்சிகளில் நெகட்டிவில் சில விஷயங்களைக் காட்டுவார்கள். அதில் எப்படி தன் அன்பானவர்களை எதிரிலிருப்பவன் கொலையோ அல்லது வேறு விதமான துன்புறுத்தலோ செய்தான் என்பது தெரியும். அப்படி அடித்த அத்தனை பேரின் நெகட்டிவிலும் தெரிந்த ஒன்று, அந்த வாட்ஸ்அப் ஃபார்வர்டு. அது நினைவுக்கு வர வர வேகமாக அடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு தவறான ஃபார்வர்டு என்ன செய்துவிடும் என இப்போதாவதா புரிகிறதா?

வாட்ஸ்அப் தான் கொலை செய்தது. ஆனால், வாட்ஸ்அப் என்பது யார்? நீங்களும் நானும்தான். இதற்காக மார்க் சக்கர்பெர்கை தூக்கிலிட முடியாது. இந்தியாதான் வாட்ஸ்அப்க்கு மிகப்பெரிய மார்க்கெட். ஆனால், இங்கே அதற்கென ஒரு செய்தித் தொடர்பாளர் கூட கிடையாது. அது கூட வேண்டாம். ஒரே ஒரு ஃபார்வர்டு அதிகமாக சுற்றுகிறது. இதனால் நடக்கக்கூடாத ஒரு சம்பவம் நடக்கிறதென்றால், அந்த மெஸெஜைக் கண்டுபிடித்து யாராலும் ஃபார்வர்டு செய்யாமல் அவர்களால் தடுக்க முடியும். இது எந்த நாட்டிலிருந்தும் சில நிமிடங்களில் செய்யக்கூடிய ஒன்றுதான். ஆனால், வாட்ஸ்அப் அதைச் செய்யவும் தயாரில்லை. அதற்காக எல்லாம் இந்தக் கொலைகளை வாட்ஸ் அப் கணக்கில் எழுதிவிட முடியாது. அவர்கள் மாறுகிறார்களோ இல்லையோ... நாம் மாற வேண்டும். இந்தச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு இப்படி கண்டதையும் ஃபார்வர்டு செய்யும் நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். இனியும் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வாட்ஸ் அப்பில் நிறைய நல்ல விஷயங்களும் வருகிறது தான். ஆனால், அவை அனைத்தும் இந்த மாதிரியான சம்பவங்களை சமன் செய்ய முடியாது. உங்களுக்கு உறுதியாக தெரியாத விஷயத்தை ஃபார்வர்டு செய்யாதீர்கள். எதையும் படித்ததும் கொஞ்சம் யோசித்துப் பார்க்கவும். அது நம் நாட்டைப் பற்றிய, மதத்தைப் பற்றிய, ஊரைப் பற்றிய பெருமையாக இருக்கலாம். அல்லது இன்னொரு விஷயத்தைக் குறை சொல்லும் விஷயமாக இருக்கலாம். அதைப் படித்துக் கொள்ளுங்கள். ஆனால், உறுதியாக தெரியாத விஷயத்தைப் பரப்பாதீர்கள். ஏனெனில் எல்லா சமயமும் நாம் அடிக்கும் இடத்திலே இருப்போம் எனச் சொல்ல முடியாது. அடி வாங்கும் இடத்திலும் இருக்கலாம்.


 



Trending Articles

Sponsored