பட்ஜெட் ஸ்மார்ட்போன்களிடம் உஷார்.. தகவல் திருட்டு அலர்ட்!Sponsoredடந்த வருடத்தில் உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2.5 பில்லியனாக உயர்ந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை வரும் வருடங்களில் பல மடங்கு வேகத்தில் அதிகரிக்கக்கூடும். ஸ்மார்ட்போன் வாங்குபவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அதிக வசதிகள் கொண்ட விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்கள். மற்றொன்று தங்களுக்கு ஏற்ற  வசதிகள் மட்டும் கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்கள். ஆனால், பட்ஜெட் விலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் ஒரு செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது.

டேட்டாதான் நீங்கள் கொடுக்கும் விலை

அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு முழுமையான ஸ்மார்ட்போன்களின் தொடக்கம் என்பது ஐபோனின் அறிமுகத்தில் ஆரம்பித்தது. ஆனால், ஐபோன் விலை அதிகமாக இருந்ததால் சாமானியர்களை அதனிடமிருந்து தள்ளியே வைத்திருந்தது. அந்த நிலையை மாற்றியது  ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்தாம். ஆண்ட்ராய்டு ஒரு ஓப்பன் சோர்ஸ் இயங்குதளம் என்பதால் அதற்கான விலை குறைவாகவே இருந்தது. ஆனால், அதற்கான விலையை மக்கள் வேறு வகைகளில் கொடுக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் குறைந்த விலை மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களிலிருந்து பயனாளர்களுக்கே தெரியாமல் தகவல்களை திருடப்படுகின்றன என்ற செய்தியை வெளியிட்டிருக்கிறது வால்ஸ்ட்ரீட் ஜர்னல்.

Sponsored


Sponsored


சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான சிங்டெக் (Singtech) கம்போடியா மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் விற்பனை செய்த P10 என்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் தகவல் திருட்டு நடைபெற்றிருப்பதைக் கண்டறிந்திருக்கிறது வால்ஸ்ட்ரீட் ஜர்னல். சிங்டெக் நிறுவனம் P10 ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்படும் போதே தகவல்களைச் சேகரிக்கும் ஆப்பை ரகசியமாக இன்ஸ்டால் செய்திருக்கிறது. பின்னர் மொபைல்கள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் அந்த ஆப் பயனாளர்களிடமிருந்து MAC அட்ரெஸ் மற்றும் IMEI எண் உட்படப் பல தகவல்களைச் சேகரித்திருக்கிறது. பின்னர் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அவர்களுக்கே தெரியாமல் தைவானைச் சேர்ந்த ஜெனரல் மொபைல் கார்ப்பரேஷன் (General Mobile Corp.) என்ற விளம்பர நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. பிரேசில் நாட்டில் விற்கப்பட்ட சில ஸ்மார்ட்போன்களிலும் இது போன்ற பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த மொபைல்கள் இந்தியாவிலும் சீனாவிலும் தயாரிக்கப்பட்டவை.

தைவானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜெனரல் மொபைல் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு இந்தியாவிலும் சீனாவிலும் துணை நிறுவனங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. ``ஒருவர் இலவசமாக இணைய சேவையைப் பெற விரும்பினால் அவர்களுக்கெனக் காட்டப்படும் விளம்பரங்களைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்" என்ற ரீதியில் இந்தப் பிரச்னை தொடர்பாக ஜெனரல் மொபைல் கார்ப்பரேஷன் நிறுவனத்திடமிருந்து பதில் வந்திருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் இதற்கு வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். பட்ஜெட் மொபைல்களில் முக்கிய இடம் பிடிக்கும் ஷியோமி, ஹுவாய் போன்றவை அதில் முக்கியமானவை.

ஸ்மார்ட் போன்களிலிருந்து தகவல் திருடப்படுவது தொடர்பான செய்தி வெளியாவது இது முதல் முறை அல்ல. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் எப்போது பரவலாகியதோ, அப்பொழுதிலிருந்தே இது போன்ற சர்ச்சைகள் வரத் தொடங்கி விட்டன. பெரும்பாலான நிறுவனங்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் சில நிறுவனங்கள் அதை ஒப்புக்கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதுமே இந்தப் பிரச்னை இருந்தாலும் வளரும் நாடுகளில் இது அதிகமாக நிகழ்கிறது. வளர்ந்த நாடுகளில் பொருளாதாரம் மேம்பட்டிருப்பதால் விலை உயர்ந்த மொபைல்களை வாங்கும் மக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். எனவே, அங்கே இது போன்ற தகவல் திருட்டு என்பது குறைவாகவே நிகழ்கிறது.

மாறாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கொடுக்கும் விலைக்கு ஏற்ற வசதிகள் இருக்கின்றனவா என்பதை ஆராய்ந்து பார்த்து வாங்குபவர்கள்தாம் அதிகம். எனவேதான் இங்கே பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கான தேவை என்பது சந்தையில் அதிகமாக இருக்கிறது. அதை மொபைல் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன. சிறந்த வசதிகளுடன் குறைவான விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகின்றன. அதனால், கவரப்படும் மக்கள் அவற்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு மொபைல்கள் விலை குறைவாக விற்கப்படுவதற்கான பின்னணி காரணம் தெரிவதில்லை. அவர்களுக்கே தெரியாமல் திருடப்படும் டேட்டா மறைமுகமாகப் பணமாக மாற்றப்படுகிறது. இது போன்ற செய்திகள் நமக்கு ஒரு விஷயத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன.

வியாபாரம் என்ற உலகத்தில் எதுவுமே இலவசம் கிடையாது.Trending Articles

Sponsored