தாய்லாந்து வீரர்களைக் காப்பாற்ற தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்... ஸ்மார்ட் எலான் மஸ்க்!Sponsoredதாய்லாந்தின் `தாம் லுவாங்' குகைக்குள் தங்கள் நண்பர் ஒருவரின் பிறந்தநாளைக் கொண்டாட ஜுன் 23 தேதி உள்ளே சென்றனர் 16 வயதுக்குட்பட்ட 12 கால்பந்து வீரர்களும், அவர்களுடைய 25 வயதுப் பயிற்சியாளரும். பின்னர் திடீரென்று பெய்த கனமழையால் குகையின் பாதை முழுவதும் தண்ணீரால் நிரம்பிவிட அவர்களால் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இடையில் ஜுலை 6ம் தேதி தாய்லாந்து கடற்படையைச் சேர்ந்த வீரர் ஒருவரும் மீட்கும் பணியில் இறந்து போனார். சிறுவர்கள் உள்ளே சிக்கி இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆன நிலையில் உலகம் முழுவதும் இருக்கும் இத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள், மீட்பு நடவடிக்கைகளுக்குப் பல ஆலோசனைகளையும், தங்களால் இயன்ற உதவியைப் பல நாடுகள் அளித்து வந்தன. 

இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் சி.இ.ஒ.வும், போரிங் நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் அந்தத் தாய்லாந்து குகையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அவர் தாய்லாந்தில் இருக்கிறாரா என்ற நோக்கத்தோடு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ``அவர் எங்கிருக்கிறார் என்பது தொடர்பான கேள்விகளுக்கு எங்களால் பதில் அளிக்க இயலாது" எனத் தெரிவித்துவிட்டனர் அந்நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள். இந்நிலையில், நேற்று எலான் தாய்லாந்திலிருந்து படங்களை வெளியிட்டுள்ளார்.

Sponsored


கடந்த வெள்ளிக்கிழமை அவர் ஓர் ஆலோசனை கூறியிருந்தார். ஒரு முழு நீளக் குழாயை குகையின் வழியே செலுத்தி, பின்னர் அதைப் பெரிதாக்கி அதன் மூலம் தண்ணீரில் செல்லாமலே சிறுவர்களை வெளியேற்றலாம் எனக் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியையும் வெளியிட்டிருந்தார். அதில் ஒரு சிறிய நீர்மூழ்கிக் கப்பல் போன்ற சாதனத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் பரிசோதிப்பது தெரிந்தது. அதைப் பற்றிய விளக்கத்தை எலான் தனது ட்வீட்டில் தெரிவித்திருந்தார். அதில் `இரண்டு பேர் கொண்டு செல்லும்படியான சிறிய நீர்மூழ்கிச் சாதனத்தை வடிவமைத்திருக்கிறோம். இதில் ஆக்சிஜன் வழங்கும் குழாய்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதனை உபயோகிப்பதற்கு எந்தப் பயிற்சியும் அவசியம் இல்லை. அதோடு இந்தச் சாதனத்தை உபயோகிப்பவர் தானாக நீந்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் இந்தச் சாதனத்துக்கு அந்தக் கால்பந்தாட்ட அணியின் பெயரான `வைல்டு போர்' (Wild boar) என்றே பெயரிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதோடு தாய்லாந்து அரசாங்கம் கோரினால் உதவி செய்யவும் இந்த நீர்மூழ்கிச் சாதனங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 

Sponsored


எலான் கூறிய ஆலோசனைகளை வல்லுநர்கள் எடுத்துக்கொண்டாலும், உலகில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்களும் வரவழைக்கப்பட்டுள்ளதால் எலானின் யோசனைகளைப் பயன்படுத்தவில்லை. அதோடு இந்த நீர்மூழ்கிச் சாதனம் குறித்தும் எந்தக் கருத்தையும் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. 

``நாம் எந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம், எவ்வளவு செலவு செய்கிறோம் என்பது இங்கு முக்கியமில்லை அந்தச் சிறுவர்களை பத்திரமாக மீட்க வேண்டும், அவ்வளவுதான்" எனத் தெரிவித்தார் தேசிய மீட்புக்குழு இணை ஆணையரான அன்மர் மிஸ்ரா.

கடந்த சில நாள்களில் எந்தவொரு சாதனமும் இல்லாமல் ஸ்கூபா டைவர்களை கொண்டே எட்டு பேரை மீட்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, உள்ளே சென்ற அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாக அறியப்படுகிறது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் இதுதான். ஒரு பிரச்னை. அது தெரிந்ததும் அதற்கு தீர்வு யோசித்த எலான். அதை ஒரே வாரத்தில் சாத்தியப்படுத்திய முனைப்பு. இதுதான் ஸ்டார்ட் அப்பின் சரியான ப்ளூ பிரின்ட். இந்த உலகில் பிரச்னைகளுக்குப் பஞ்சமே இல்லை. அதற்கு உங்களால் ஒரு தீர்வை யோசிக்க முடிந்தால் நீங்களும் ஒரு தொழில் முனைவர்தான். Trending Articles

Sponsored