2 பேட்டரி, 3 திரை, 4 சிம், 6 கேமரா... சத்தியமா இது ஸ்மார்ட்போன்தாங்க!Sponsoredன்றைய நிலவரப்படி சந்தையில் அதிகம் விலை கொண்ட ஸ்மார்ட்போன் எதுவென்று கேட்டால் பலரும் யோசிக்காமல் ஐபோனை கை காட்டுவார்கள். இறுதியாக வெளியான ஐபோன் x-ன் விலை இந்திய ரூபாய் மதிப்பில் லட்ச ரூபாயைத் தாண்டும். ஆனால் அதைவிட விலை அதிகமாக ஒரு ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அப்படி என்ன இருக்கிறது இந்த ஸ்மார்ட்போனில்? 

மீண்டும் வரும் பழைய வடிவமைப்பு

Sponsored


அறிமுகமான புதிதில் ஒரே வடிவத்தில் வெளியாகிக்கொண்டிருந்த மொபைல்கள் சிறிது காலத்துக்குப் பிறகு விதவிதமான வடிவமைப்புகளில் வெளியாகத் தொடங்கியது. நோக்கியா, சோனி எரிக்ஸன் எனப் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய வடிவங்களில் மொபைல்களை அறிமுகப்படுத்தின. குறிப்பாக ஸ்லைடு, ஃபோல்டபிள் எனப் பல வடிவங்களில் வெளியான மொபைல்களுக்கு சந்தையில் வரவேற்பு அப்போது அதிகமாக இருந்தது. பின்னர் டச் ஸ்க்ரீன் மொபைல்கள் பிரபலமாகத் தொடங்கிய பிறகு மற்ற வடிவங்கள் அனைத்தும் மறைந்து போனது. தற்பொழுது ஒரே வடிவத்தில்தான் ஸ்மார்ட்போன்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், மீண்டும் ஃபோல்டபிள் வடிவத்தை அடிப்படையாக வைத்துப் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது ஒரு நிறுவனம். 

Sponsored


'ஹப்பிள் போன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனை ட்யூரிங் ரோபோட்டிக் இண்டஸ்ட்ரீஸ் (Turing Robotic Industries) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் அதிக வசதி கொண்ட, உயர்ந்த விலை ஸ்மார்ட்போன்களை மட்டுமே தொடக்கம் முதல் உற்பத்தி செய்து வருகிறது. 'ஹப்பிள் போன்' தோற்றத்தில் ஒரே மொபைல் போலத் தெரிந்தாலும் இரண்டு மொபைல்கள் ஒன்றிணைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. போனின் இரண்டாவது பகுதியை மடக்க முடியும். இதன் முதன்மை பகுதியில் வளையும் திறன் கொண்ட AMOLED டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டுள்ளது. மடக்கும் வகையில் மேலே இருக்கும் இரண்டாவது பகுதி முன்புறம் 5.44 இன்ச் பின்புறம் 5.41 இன்ச் என இரண்டு டிஸ்ப்ளேக்களைக் கொண்டுள்ளது. முதன்மை பகுதியின் திரை 11.81 இன்ச் அளவு கொண்டது. இது 4 K வசதியைக் கொண்டது. மேல் பகுதியில் இருக்கும் இரண்டு திரைகளும்  FHD ரெசுல்யூஷன் கொண்டவை. 

இரண்டு மொபைல்களையும் இணைக்கும் பகுதியிலிருக்கும் மெயின் கேமரா 60 MP 15x optical zoom திறன் கொண்டது. மேலே இருக்கும் பகுதியில் முன்புறம் 12 MP டூயல் கேமராவும் பின்புறம் 12 MP கேமராவும் இருக்கிறது. இது தவிர முதன்மைப் பகுதியில் பின்புறம் 12 MP டூயல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதன்படி பார்த்தால் ஹப்பிள் போனில் மொத்தம் ஆறு கேமராக்கள் இருக்கின்றன. நீர், தூசி ஆகியவற்றால் இந்த ஸ்மார்ட்போன் பாதிக்கப்படாத வகையில் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு சிம் கார்டுகளை இதில் பயன்படுத்த முடியும். முதன்மைப் பகுதியில் 3,300 mAh பேட்டரியும், மேல் பகுதியில் 2,800 mAh பேட்டரியும் இந்த மொபைல் செயல்படத் தேவையான மின் சக்தியைத் தரும். ஹப்பிள் ஸ்மார்ட்போன் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும்.

ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தில் இயங்கும் இதில் Snapdragon 855 என்ற புதிய பிராஸசர் பயன்படுத்தப்படலாம். AR (augmented reality), VR (virtual reality), மற்றும் MR (mixed reality) என மூன்று தொழில்நுட்பங்களும் இதில் பயன்படுத்தப்படுவதால் விளையாடும்போது புதிய அனுபவத்தை இந்தப் போன் தரும் என நிறுவனம் உறுதியளித்திருக்கிறது. $2,750 அமெரிக்க டாலர்கள் விலை கொண்ட இதன் மதிப்பு இந்திய ரூபாய் 1.80 லட்சத்தைத் தாண்டுகிறது. இங்கே விற்பனைக்கு வரும்போது இதன் விலை எப்படியும் இரண்டு லட்சத்தைத் தொடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஹப்பிள் போனின் மாதிரிப் புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியிருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் 2020-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 2020 ஜூன் மாதம் அமெரிக்காவிலும், ஆகஸ்ட் மாதம் சீனா மற்றும் ஐரோப்பாவிலும் மற்ற நாடுகளில் டிசம்பர் மாதத்துக்குள்ளும் இந்த ஸ்மார்ட்போனை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கு ட்யூரிங் ரோபோட்டிக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.Trending Articles

Sponsored