``ஆர்டர் செய்த பொருள் வரவில்லையென்றால் தானாக பணம் ரிட்டர்ன்!” - UPIன் அதிரடி அப்டேட்வருகிறது UPI 2.0 பல தாமதங்களுக்குப் பிறகு இறுதியாக நேஷனல் பேமென்ட் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா (NPCI ) UPI 2.0வை அதிகாரபூர்வமாகச் சென்ற வாரம் மும்பையில் அறிமுகப்படுத்தியுள்ளது. எதிர்பார்த்தது போலவே பல புது வசதிகள் தற்போதைய யு.பி.ஐ சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று விரிவாகக் காண்போம்.

1. ஓவர்டிராப்ஃட் அக்கௌன்ட்டையும் இனி இணைக்க முடியும்

Sponsored


தற்போது யு.பி.ஐ 2.0 மூலம் உங்களது ஓவர்டிராப்ஃட் கணக்கையும் யு.பி.ஐயுடன் இணைத்து பணப்பரிமாற்றத்துக்குப் பயன்படுத்த முடியும். அதாவது பணம் இல்லையென்றாலும் அதிகபட்ச ஓவர்டிராப்ஃட் லிமிட்டை கடக்காத வரை உங்களால் பணம் அனுப்பவோ செலுத்தவோ முடியும். 

Sponsored


Sponsored


2. பரிவர்த்தனை அளவு உயர்த்தப்பட்டுள்ளது 

 NPCI யிடம் பெரும்பாலான யு.பி.ஐ பயன்பாட்டாளர்கள் வைத்த முக்கியக் கோரிக்கை மொத்தப் பரிவர்த்தனை அளவை (Transaction Limit ) கூட்ட வேண்டும் என்பதுவே. இதற்குக் காதுகொடுத்து 1 லட்சமாக இருந்த பரிவர்த்தனை கட்டுப்பாடு 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் ஒரு முறைக்கு 10,000 ரூபாய் தான் இப்போதும் அதிகபட்சமாகப் பரிவர்த்தனை செய்யமுடியும். இந்தக் கூட்டப்பட்ட பரிவர்த்தனை அளவு யாருக்கெல்லாம் பொருந்தும் என்பதைப் பற்றிய தகவல்கள் இன்னும் சரிவர தெரிவிக்கப்படவில்லை.

3. விலைப்பட்டியல் இனி உங்கள் இன்பாக்ஸில்:

ஒருமுறைக்கு இருமுறை எல்லாவற்றையும் சரிபார்த்து அதன் பின் பணம் செலுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு உதவும் வகையில் இந்த வசதி இருக்கும். முன்பு வெறும் செலுத்தப்பட வேண்டிய மொத்தத் தொகை மட்டுமே விற்பனையாளர்களிடமிருந்து யு.பி.ஐ செயலிக்கு வந்தடையும். ஆனால், தற்போது கூடவே விலைப்பட்டியலும் வரும் வண்ணம் இது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சரியாக கணக்குப் பார்த்த பின் உங்களது யு.பி.ஐ பின் நம்பரை டைப் செய்து பணத்தை நீங்கள் செலுத்தலாம்.

4. ஒன்-டைம் மேண்டேட் 

இந்த வசதியானது ஆன்லைன் டெலிவரியின் போது பணம் செலுத்த உதவும். அதாவது நீங்கள் ஆன்லைன் சந்தையில் ஒரு பொருளை ஆர்டர் செய்யப்போவதாக வைத்துக்கொள்வோம். இந்த வசதியின் மூலம் தற்போது நடைமுறையில் இருப்பது போல் உடனடியாகப் பணம் செலுத்தாமல் `pay later' என்று யு.பி.ஐ செயலியில் கொடுக்கமுடியும். நீங்கள் ஆர்டர் செய்த பொருள் உங்கள் கைக்கு வந்து சேர்ந்த உடன் தான் பணம் செலுத்தப்படும். அது வரை அந்தத் தொகை தனியாக இருப்பில் வைக்கப்பட்டிருக்கும். டெலிவரியில் ஏதேனும் பிரச்னை வந்தால் பணம் உங்களுக்குத் திரும்பக் கிடைத்துவிடும். விற்பனையாளர், வாடிக்கையாளர் என இரு பக்கமும் பிரச்னை இல்லாமல் வணிகம் நடைபெற இது மிகவும் உதவும் என நம்பப்படுகிறது.

5. QR Code மூலம் பரிவர்த்தனைகள் 

கடந்த ஆண்டு பாரத் QR என்ற ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியது NPCI. இதன் பகுதியாக இனி யு.பி.ஐ மூலம் விற்பனையாளரின் வெரிஃபை செய்யப்பட்ட QR கோடை உங்கள் செயலியில் ஸ்கேன் செய்து உங்களது பணத்தை சூப்பர்மார்கெட் போன்ற சந்தைகளில் செலுத்தமுடியும். 

யு.பி.ஐ 2.0 வின் இந்தப் புதிய வசதிகள் விற்பனையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் நடுவில் உள்ள பணப்பரிமாற்றத்தை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவை வெறும் வசதிகளாக அல்லாமல் சில பணப்பரிமாற்ற முறைகளையே மாற்றியமைக்கும் வண்ணம் அமைந்துள்ளன. ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ஆண்டுகளிலேயே கிட்டத்தட்ட 41,000 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 25 கோடி பரிவர்த்தனைகளை கையாண்டுள்ள யு.பி.ஐ இந்த அப்டேட்டுக்குப் பிறகு இன்னும் முழுவீச்சில் மக்களிடையே சென்றடையும் என்றே எதிர்பார்க்கலாம்.Trending Articles

Sponsored