நொடிகளில் சார்ஜ் ஏறும் குவாண்டம் பேட்டரிகள்... விரைவில்!



ந்த மொபைல் மாடல் புதிதாக வந்தாலும் முதலில் நாம் கேட்பது ``சார்ஜ் எவ்ளோ நேரம் நிக்கும், பேட்டரி அளவு என்ன?” என்பதுதான். புது சாஃப்ட்வேர் அப்டேட் வந்தாலும் சார்ஜ் நிற்பதில் ஏதும் முன்னேற்றம் உண்டா என்றே கேட்கிறோம். அந்த அளவுக்கு பேட்டரி முக்கியம்.

மொபைல் போனை சார்ஜரிலேயே வைத்திருப்பவர்களுக்கு வரமாய் வரவுள்ளது குவாண்டம் பேட்டரிகள். நொடிப்பொழுதில் சார்ஜ் ஆகும் வசதி பெற்ற குவாண்டம் பேட்டரிகள் மொபைல் சார்ஜருக்கு விடை கொடுக்க விரைவில் வர உள்ளன.

Sponsored


அடிலெய்டு பல்கலைக்கழகத்தில், ஸ்மார்ட் போனின் சார்ஜ் செய்யும் நேரத்தைக் குறைக்க ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. உலகின் மிக வேகமாக சார்ஜ் ஆகும் பேட்டரியை குவாண்டம் அறிவியலின் தனிப்பண்புகளைப் பயன்படுத்தித் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் டாக்டர் ஜேம்ஸ் குவாக். குவாண்டம் இயற்பியலில் வல்லுநரான குவாக் உடனடி சார்ஜ் ஆகும் பேட்டரிகளை குவாண்டம் இயற்பியலின் சிக்கலான பண்புகள் உதவியோடு உருவாக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Sponsored


"இரண்டு சிக்கலான பொருள்கள் தங்கள் தனித்தன்மைகளைப் பகிர்ந்துகொள்ளும் குவாண்டம் அறிவியலே இதன் அடிப்படை ஆகும். இதன் விளைவாக ஒரு பொருளில் ஏற்படும் நிகழ்வு மற்றொரு பொருளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குவாண்டம் அறிவியலின் இந்தப் பண்பே வெகு விரைவாக சார்ஜ் ஆக வழிவகுக்கிறது. சாதாரண பேட்டரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் அவை வேகமாக சார்ஜ் ஆகாது. ஆனால், குவாண்டம் பேட்டரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் அவை விரைவாக சார்ஜ் ஆகும் என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே புது ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது" என்று தெரிவித்த குவாக்,

Sponsored


"இதன்படி ஒரு குவாண்டம் பேட்டரி சார்ஜ் ஆக ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும். இரண்டு குவாண்டம் பேட்டரிகளை பயன்படுத்தும்போது சார்ஜ் ஆக அரை மணி நேரம் மட்டுமே ஆகும். பேட்டரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து பத்தாயிரம் குவாண்டம் பேட்டரிகளை ஒருசேரப் பயன்படுத்தும் போது சார்ஜ் ஆகும் நேரம் ஒரு விநாடிக்கும் குறைவாக இருக்கும். ஒருமுறை குவாண்டம் பேட்டரி உருவாக்கப்பட்டுவிட்டாலே சார்ஜ் ஆகும் நேரத்தைப் பூஜ்ஜியத்துக்கு நிகராகக் குறைத்துவிட முடியும். குவாண்டம் பேட்டரிகளை உருவாக்கும் எண்ணம் பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வருகிறது. புத்தகத்தில் இருக்கும் தத்துவத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். குறைந்த வெப்பநிலை மற்றும் தனித்துவமான இடம் உள்ளிட்ட காரணிகளும் குவாண்டம் பேட்டரிகள் தயாரிக்க இன்றியமையாதவை. உலகின் முதல் குவாண்டம் பேட்டரிகளை உருவாக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்" ‌என்று நம்பிகையுடன் முடித்தார்

குவாண்டம் பேட்டரிகள் கடிகாரங்கள், ஸ்மார்ட் போன்கள் மற்றும் சேமித்து வைக்கக்கூடிய பேட்டரியில் பயன்படும் அனைத்து இடங்களிலும் பயன்படக் கூடியவை. குவாக் பெரிய அளவிலான குவாண்டம் பேட்டரிகளை உருவாக்கிப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைச் சேமிக்க அவற்றைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். இத்தாலியில் உள்ள இயற்பியலாளர்களும் குவாண்டம் அறிவியலின் இந்தச் சிக்கலான தனித்தன்மையைப் பயன்படுத்தி பேட்டரிகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கணினியில் பயன்படுத்தும் அளவுக்குப் பெரிய அளவிலான பேட்டரிகளை தயாரிக்கும் முனைப்பில் உள்ளனர். குவாண்டம் பேட்டரிகள் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வர காலம் எடுக்கலாம். ஆனால், பெருகி வரும் ஆற்றல் தேவைக்கு அவை இன்றியமையாதவை.



Trending Articles

Sponsored