3D -யில் வரும் 2.0 டீசர்... யூட்யூபில் வந்தால் பார்க்க முடியுமா? #2PointO



Sponsored



ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் '2.0' படத்தின் 3D டீஸர் செப்டம்பர் 13  வெளியாகவுள்ளது.  இந்த டீசரைக் காண மாநிலம் முழுவதும் உள்ள பல  திரையரங்குகளில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் உண்மையில் 3டி விடீயோக்களை காணத் தியேட்டருக்கு தான் சொல்லவேண்டுமா என்ன?

உண்மையில் இதற்கு அதைத்தவிரவும் பல வழிகள் உள்ளன. அவை என்னவென்று பார்ப்பதற்கு முன், 3டி தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது எனச் சுருக்கமாக பார்க்கலாம். ஒரு கண்ணை மூடி மற்றொரு கண்ணில் மட்டும் பார்த்தாலே இரண்டு கண்களில் தெரியும் காட்சியில் சிறிய வேறுபாடுகள் இருப்பது உங்களுக்குப் புரியும். இரண்டு கண்களிலும் ஒன்றாகப் பார்க்கும்போது அந்த இரு காட்சிகளையும் நம் மூளை ஒன்று படுத்தி நமக்கு நமது 3டி காட்சியை அளிக்கிறது. இந்தப் பிம்பத்தை தான் 3டி தொழில்நுட்பமும் கொண்டுவர முயல்கிறது. இதைப் பலமுறைகளில் கொண்டுவர இயலும்.

Sponsored


அந்தக் காலத்து 3டி கண்ணாடிகள் ஞாபகம் இருக்கிறதா? சிவப்பு-ஊதா நிறத்தில் இருக்குமே அது தான். அதில்  இரண்டு நிறங்களின் வழியே பார்க்கும் போது ஒவ்வொரு கண்ணுக்கும் வேறொரு காட்சி தெரியும். இதை நமது மூளை ஒன்றுபடுத்துவதால் நமக்கு அது மொத்தமாக ஒரு 3டி காட்சியாய் தோன்றும். ஆனாலும் இந்த முறையில் பல நிறங்கள் தெரியாமல் போய்விடும். அனாகில்ஃப் 3டி எனப்படும் இந்த முறை பத்து பேரில் ஒன்பது பேருக்கு தான் சரியாக தெரியும் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதாவது இரண்டு கண்களிலும் சீரான பார்வை இருந்தால் தான் இதை ஒழுங்காகப் பார்க்க இயலும். யூடியூப்பிலேயே மேலே கூறிய முறையில் 3டியை காண முடியும். ஏதேனும் 3டி விடியோவை ( HD போன்று இந்த விடியோக்களிலும் இது தனியாக குறிப்பிடப்பட்டிருக்கும்) செலக்ட் செய்துகொண்டு, 'Anaglyph' என்ற மோடிற்கு மாறினால் போதும். பின்பு இந்த முறையில் வீடியோ ஒளிபரப்பாகும். இந்த சிவப்பு-ஊதா கண்ணாடிகள் பேப்பரில் செய்யப்பட்டு மிகச் சொற்ப விலைகளில் கிடைக்கும்.

Sponsored


அடுத்து வரும் வழி போனிலேயே 3டி பார்ப்பதற்கு. இதற்கு நீங்கள் ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் வைத்திருக்க வேண்டும். யூடியூப்பிலேயே கார்டுபோர்டு மோடிற்கு மாறி இந்த ஹெட்செட் மூலம் 3டி வீடியோக்களைக் காணமுடியும். ஆனால் அதற்கு இந்த வசதியை உங்கள் போன் சப்போர்ட் செய்ய வேண்டும். இந்த முறையிலும் ரியாலிட்டி ஹெட்செட் மூலம் வலது கண் ஒரு படத்தையும், இடதுகண் இன்னொரு படத்தையும் காணும். SBS எனப்படும் சைடு பை சைடு வீடியோக்களை பதிவிறக்கி நேரடியாகவே விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் மூலம் பார்க்கலாம்.

இல்லையெனில் பிரத்யேக தொலைக்காட்சிகளில் இதைக் காணலாம். இந்தத் தொலைக்காட்சிகள் கிட்டத்தட்டத் தியேட்டரில் பயன்படுத்தும் அதே தொழில்நுட்பத்தை தான் பயன்படுத்துகின்றன. போலரைசேஷன் என்ற முறையின் மூலம் இதைச் செய்கிறது இந்தத் தொழில்நுட்பம். இதில் அனாகில்ஃப் போல் நிறங்கள் அடி வாங்காது. 

படங்கள் பெரும்பாலும் 2டியில் எடுத்ததற்குப் பின்பே 3டிக்கு மாற்றப்படும். இதனால் பல நேரங்களில் 3டி படம் பார்க்கும் உணர்வையே அது தராது. ஆனால் இன்றைய தினத்தில் இருக்கும் சிறந்த 3டி கேமராக்கள் மூலம் தொடக்கத்தில் இருந்தே 3டியில் தான் 2.0 படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதனால் பார்வையாளர்களால் வித்தியாசத்தைக் கண்டிப்பாக உணர முடியும் என நம்புகிறது படக்குழு. குழப்பங்களைத் தவிர்க்க தற்போது வெளியாகவுள்ள இந்த 3டி டீஸர் திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்படவுள்ளது. யூடியூப்பில் 2டியில் மட்டும் தான் வெளியாகுமாம். ஆனால் என்றாவது யூடியூப்பில் ரிலீஸ் ஆகும் போது மேலே கூறப்பட்டுள்ள ஏதேனும் முறையில் காண மறந்துவிடாதீர்கள்.



Trending Articles

Sponsored