மார்க்... ஜார்விஸ்... கட்டப்பா... பாகுபலி... ஃபேஸ்புக்! #Welcome2017Sponsored
ஏம்ப்பா நாமெல்லாம் புத்தாண்டு சபதம் எடுத்தா என்ன பண்ணுவோம்? ஜனவரி ஒண்ணாந்தேதி நல்ல புள்ளையா ”நான் இந்த வருசம் இதைச் செய்யப்போறேன்.. அதைச் செய்யப் போறேன்”னு உணர்ச்சி பொங்கப்பொங்க ஒரு ஸ்டேட்டஸை டைப் பண்ணி, அதுல Feeling Determined னு வேற சேர்த்து போஸ்ட் பண்ணி எத்தனை லைக்கு வருதுனு எண்ணிட்டு இருப்போம்.  குறைந்தபட்சம் அடுத்தநாள், அதிகபட்சம் ஒருவாரத்துல நார்மல் மோடுக்கு வந்திருப்போம். ஆனால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஸக்கர்பெர்க், மனிதகுலத்தின் இந்த மகத்தான கலாச்சாரத்திற்கு எதிராக, நியூ இயர் உறுதிமொழியை டிசம்பர் வரை ஞாபகம் வைச்சு, செஞ்சும் இருக்காரு. 

அப்படி என்ன சபதம் எடுத்தார் மார்க்?

Sponsored


இரண்டு முக்கியமான சவால்களை இந்தாண்டுக்குள் தான் முடிக்க வேண்டும் என்று நினைப்பதாக கடந்த ஜனவரி மாதம் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்திருந்தார் மார்க். ஒன்று உடலுக்கு... 365 மைல் ஓடுவது. இன்னொன்று மூளைக்கு, தனக்கென ஒரு வர்ச்சுவல் அசிஸ்டெண்டை உருவாக்குவது. அதுவும் ஐயர்ன் மேன் படத்தில் வரும் ஜார்விஸ் மாதிரியான ஒரு அசிஸ்டெண்டாக இருக்க வேண்டும் என்று விரும்பினார் மார்க். சொன்ன சொல் தவறாமல் அப்படி ஒன்றை உருவாக்கியும் விட்டார் மனுஷன். 
மார்க் ஸக்கர்பெர்க் ஒரு விர்ச்சுவல் அசிஸ்டெண்டை உருவாக்கியிருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். அதற்கு தன் விருப்பம்போலவே “ஜார்விஸ்” என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த ஜார்விஸ் என்பது ஆர்டிஃபிசியல் இண்டெலிஜன்ஸ் முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் ப்ரோக்ராம். நமது மொபைலில் இருக்கும் “ஓக்கே கூகுள்”.. “சிரி” போன்று வாய்ஸ் கமெண்டுகள் மூலம் இயங்கக் கூடிய அப்ளிகேஷன். இந்த அப்ளிகேஷனோடு தன் வீட்டில் பயன்படுத்தும் சாதனங்களுடன் இணைத்து தன் வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக்கியிருக்கிறார். மார்க் ஒரு குரல் கொடுத்தால் போதும் ”ஆலம்பனா நான் உங்கள் அடிமை” என்று இட்ட பணியை சட்டென முடிக்கும் ஜகஜ்ஜால கில்லாடி ஜார்விஸ். நம்ம சிட்டி மாதிரியான்னு கேட்டா, ஆமாங்க.  

Sponsored


என்னவெல்லாம் செய்யும் ஜார்விஸ்?

வீட்டில் லைட் ஆன்/ஆஃப் செய்யவேண்டுமா.. கிட்டா ஆங் ஸ்டைலில் மார்க் சொன்னால் உடனே லைட் அணையும்/எரியும். தூங்கிக் கொண்டிருக்கும் போது ஓவராக் குளிருதா? ரிமோட்டைத் தேடி எடுத்து குறைக்க வேண்டாம்.. அந்த ஏசியைக் கொஞ்சம் கம்மி பண்ணேன் என்று சொன்னா போதும். அதுவே குறைத்துவிடும்.

காலைல எழுந்ததும் மார்க் எங்கெல்லாம் போகணும்? யாரையெல்லாம் மீட் பண்ணனும் என்று நினைவூட்டும். வீட்டு வாசலில் யாராவது காலிங் பெல் அடித்தால் அவர்களுடைய முகத்தை படம் பிடித்து ஃபேஸ்புக் உதவியுடன் வந்திருப்பவர் யார் என்பதை மார்க்கிற்கு தெரியப்படுத்தும்.

பாட்டு கேட்கணும்னா மார்க்கிற்கு என்ன மாதிரியான பாட்டெல்லாம் பிடிக்கும்னு சரியா ஞாபகம் வச்சு அதுக்கேத்த மாதிரி படிக்கும். படம் பார்ப்பதென்றாலும் அப்படித்தான். சொன்னதை மட்டும்தான் செய்யுமா? நோ நோ மார்க் தன் மனைவி மகளுடன் இருக்கும்போது ஒரு பாட்டைச் சொல்லி அதை ப்ளே பண்ணுனு சொல்ல.. ’புள்ளைய பக்கத்துல வச்சிக்கிட்டு இந்தப் பாட்டா கேட்ப’ என்று மார்க்கை அதட்டுவதோடு இந்த பாட்டைக் கேளு என்று மார்க்கின் மகள் மேக்ஸ் ரசிக்கும் வண்ணம் ஒரு பாட்டை ஓடவிடுகிறது (வாவ்டா) 
ஒரு வயதாகியிருக்கும் மார்க் மகள் மேக்ஸைக் கவனிப்பதுதான் ஜார்விஸின் தலையாயப் பணி. விளையாடிக்கிட்டே மேக்ஸ் அறையை விட்டு வெளியே சென்றால்... “பாப்பா வெளில போகப்போறா...சீக்கிரம் வாங்க” என்று அபயக்குரல் எழுப்பி மார்க்கையும் அவரது மனைவியையும் அலர்ட் ஆக்கும். (like reaction)

இப்படி ஒரு உதவியாளரைத்தான் தனது ஓராண்டு கால உழைப்பில் உருவாக்கியிருக்கிறார் ஃபேஸ்புக்கின் நாயகன். இது போன்ற வர்ச்சுவல் அசிஸ்டென்டுகளுக்கு வாய்ஸ்தான் விஷயமே.. ஒரு கம்பியூட்டர் ப்ரோக்ராமை உண்மையான ஆள் போன்ற ப்ரம்மை ஏற்படுத்த அது பேசும் குரல் ஒரு மிக முக்கியக் காரணி. பொதுவாக இது போன்ற ஏ.ஐ (AI) களுக்கு  பெண் குரலைத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால் மார்க் கொஞ்சம் வித்தியாசமாக ஆண் குரலைப் பயன்படுத்தி இருக்கிறார். ஜார்விஸ்க்கு வாய்ஸ் கொடுத்த, அந்த ஆண் யார் தெரியுமா? தனது கரகரக் குரலால் நம்மை வசியம் செய்த பிரபல ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேன். (Love Reaction). இவர் குரலைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், மார்க் இப்படி ஒன்றை உருவாக்கப் போவதாக சொல்ல கிட்டத்தட்ட 50000 பேர் இவர் குரலைப் பயன்படுத்தச் சொல்லிக் கேட்டார்களாம். 

சரி வீட்டில் இதை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றால் வீட்டம்மாவின் ஒத்துழைப்பு வேண்டுமே? இது பற்றி மார்க்கின் மனைவி ப்ரிசில்லா என்ன சொல்கிறார்.. ப்ரிசில்லாவிற்கு முதல் ஏமாற்றம்.. முதலில் இது மார்க் சொல்வதை மட்டுமே கேட்டது. ப்ரிசில்லா ஏதாவது சொன்னால் தேமே என்று இருந்தது. பிறகு மார்க் இதை சரி செய்தார். சில நேரங்களில் கொடூரமான குரல் வருவது.. ஏதோ கமென்ட் சொல்ல எக்குத்தப்பாக எதாவது நடப்பது என்று சில விஷயங்கள் வெறுப்படையச் செய்தாலும் ப்ரிசில்லாவும் இதை லைக் தான் செய்கிறார்.   

எப்படி வேலை செய்கிறது “ஜார்விஸ்”?

ஜார்விஸ், Voice Recognition அடிப்படையில் இயங்கும் Artificial Intelligence ப்ரோக்ராம். மார்க் வீட்டிலுள்ள லைட், ஏசி, டிவி, வாசலில் இருக்கும் கேமரா என்று எலெக்ட்ரானிக் சாதனங்களோடும் இணைக்கப்பட்டுள்ளது. மார்க் ஒரு கட்டளையைச் சொன்னால் அதை சம்பந்தப்பட்ட சாதனத்திற்கு அனுப்பி வேலையை முடிக்கிறது. ஆனால் ’அண்டாகாகசம் அபூகா ஹுக்கும் திறந்திடு சீசேம்’ என்ற சத்தம் வந்தால் சற்றும் யோசிக்காமல் சக்கரத்தை சுற்றிக் கதவுகளைத் திறந்துவிடும் அலிபாபா பட அடிமைகளைப் போல் அல்ல ஜார்விஸ். வெறுமனே இந்தக் கட்டளையைச் சொன்னால் இப்படிச் செயல்பட வேண்டும் என்ற அடிமைத் தனத்துக்கு கட்டுப்பட்டதல்ல. Natural Language Processing அடிப்படையில் தனக்கு வரும் கட்டளைகள் ஒவ்வொன்றையும் சேமித்துக் கொள்வதன் மூலம் யார் கட்டளையைச் சொல்கிறார், எந்த அறையில் இருந்துகொண்டு சொல்கிறார். அவரின் ரசனை எப்படிப் பட்டது? அவர் என்ன மாதிரியான  பாடல்களை விரும்பிக் கேட்கிறார்? எந்த மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்? என்பதை தொடர்ந்து கற்றுக்கொள்வது. ஒரு வார்த்தையை சொல்லும் தொனியை வைத்தே அவர் என்ன மனநிலையில் இருக்கிறார். சோகமாக இருக்கிறாரா? மகிழ்ச்சியாக இருக்கிறாரா? என்று உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்வது என்று தனக்குத்தானே கற்றுக் கொள்ளும் (Technically Machine Learning). 

அடுத்த லெவல்?

இப்போது சோதனை அளவில் இருக்கும் இதை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டுவருவதுதான் இப்போதைக்கு மார்க்கின் திட்டம்.


2017ல் நாம் அதிகம் எதிர்பார்க்கும் இரண்டு தகவல்கள் 
1) கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்
2) மார்க் எடுக்கப்போகும் 2017 ரெசொல்யூஷன்.

- தி.விக்னேஷ்Trending Articles

Sponsored