உங்கள் மொபைலுக்கு 2017ல் என்ன என்ன பலன்கள்? #டெக்னாலஜிராசிபலன்Sponsoredசன் சைன், மூன் சைன்,ராசி, பிறந்த தேதி, பிடித்த கலர் என ஜோஸ்யம் சொல்ல ஏகப்பட்ட க்ரூப் உண்டு. அந்த வழியில் உங்கள் மொபைல் வைத்து 2017க்கான பலன்களை பார்க்கலாமா?

ஆப்பிள் ராசி அன்பர்களே...

Sponsored எப்பவும் கண்ணாடி முன்னாடியே நின்னு ஃபோட்டோ எடுக்கும் ஆப்பிள் ராசி நண்பர்களே...  ஐஃபோன் 7 இல் ஒன்றாம் இடமான ஆடியோ ஜாக்கில் ஆப்பு வைத்த ராகு இந்த ஆண்டு இரண்டாம் இடமான டிஸ்ப்ளேவிற்கு குடி போவதால் தடிமனான டிஸ்ப்ளேவுக்குத் தயா’ராகு’ங்க. அடுத்த அப்டேட் ஐஃபோன் 8 இல்லையாம், 7S ஆம். ஐஃபோன் 7க்கே கிட்னி வரை அடகு வைத்த நீங்க 7க்கும் 8க்கும் நடுவில் இருக்கும் ஏழரை சனியான 7S க்கு யார் கிட்னியை அடகு வைக்கலாம்னு திட்டமிடுவது நல்லது. 

Sponsored


உங்களுக்கு ராசியான டெக்னாலஜி : ப்ளூடூத் ஹெட்செட்

HTC ராசி கனவான்களே...


ஊரே ஆப்பிளா சாம்சங்கானு சுத்தும்போது தனியாத் திரியும் HTC ராசி கனவான்களே.... போன வருடம் இருந்த இடம் தெரியாமல் இருந்த சுக்ரன் இப்போது மூன்றாம் இடமான  மெமரிக்கு குடிபோவதால் 256 ஜிபி இண்டர்னல் மெமரியைப் பெறுவீர்கள். பிறகென்ன இனி வீடியோக்கள் அனுப்பும் வாட்ஸப் க்ரூப்களில் தைரியமாக நுழையலாம்.  க்விக் சார்ஜிங், நீடித்து உழைக்கும் பேட்டரி என வசதிகள் வரிசை கட்டி நிற்பதால் பவர் பேங்க் வாங்கும் வீண் செலவுகள் வராது. 

உங்களுக்கு ராசியான டெக்னாலஜி : வாட்ஸப்

LG ராசி அன்பர்களே...


3ஜி, 4ஜினு எத்தனை ஜி வந்தாலும் நாங்க LG ல தாண்டா இருப்போம்னு குறிக்கோளோட இருக்கும் LG ராசி நேயர்களே.. G5 இல் வைடு ஆங்கிள் கேமிராவில் சஞ்சாரம் செய்த வாயு பகவான்  தற்போது G6 இல் வயர்லஸ் சார்ஜிங்கில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் காத்துலயே சார்ஜ் போட்டு காலரை தூக்கி விட்டு சுத்துவீங்க. ஒன்பதாம் இடமான டிஸ்ப்ளேயில் குடி கொண்டிருந்த புதன் புதுசு புதுசா அப்டேட் ஆவதால் இது நாள் வரை ’டிவி பக்கத்துல போய் பாக்கதடா கண்ணு கெட்டுபோயிடும்’னு திட்டு வாங்குன நீங்க இனி விர்ச்சுவல் ரியாலிட்டியில் கண்ணுக்குள்ளயே டிவிய வச்சு பார்க்க ஆரம்பிப்பீங்க. 

உங்களுக்கு ராசியான டெக்னாலஜி : விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்

ரெட்மீ ராசி அன்பர்களே...


சீப்புதான்..ஆனாலும் சீஃப்தான் என சிரித்துக்கொண்டிருக்கும் ரெட்மீ ராசி அன்பர்களே... அடுத்த ரெட்மீ நோட் மாடலும் பட்ஜெட்டுல பக்காதானாம். 2 ஜிகாஹெர்ட்ஸ் புராசஸர், இண்டக்ரேட்டட் பேமன்ட் ஆப்ஷன்ஸ் என நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படும் என்பதால் தைரியமாக வாங்கலாம். நோட் 4-ஐ விட, பேட்டரிதிறன் சற்றே குறைவென்றாலும் மொபைலின் எடையும் குறையும் என்பதால் பாதகமில்லை. 

உங்களுக்கு ராசியான டெக்னாலஜி : பேமண்ட் வாலட்

மோட்டோ ராசி அன்பர்களே...


ஸ்லோவாக அப்டேட் வந்தாலும் சோலோவாதான் வரும் மோட்டோராசி அன்பர்களே... ஒரு ‘பிரேக்கிங்’ செய்தி உங்களுக்காக காத்திருக்கிறது. மார்ச் மாதம் வரவிருக்கும் மோட்டோ ஜி5 மொபைலில் ஷாட்டர் ப்ரூஃப் டிஸ்ப்ளே அருள போகிறது மோட்டோரோலா.. கீழ விழாத ஃபோனும், தீஞ்சு போகாத நாணும் இந்தியால இருக்க முடியுமா? இதற்கு ஒரு பாதுகாப்பாதான் இந்த டெக்னாலஜியை இறக்குகிறது மோட்டோரோலா. உடையாத உமையாள் அம்மனின் அருள் வேண்டி திருக்கோவிலுக்கு சென்று வருவது நல்லது.

உங்களுக்கு ராசியான டெக்னாலஜி : டிராப்டவுன் டெக்னாலஜி.

ஒன் ப்ளஸ் ராசி அன்பர்களே...

பழங்கள்ல ஏழைகளின் ஆப்பிள் தக்காளினா மொபைல் போன்ல ஏழைகளின் ஆப்பிளான ஒன் ப்ளஸ் ராசி அன்பர்களே... 3, 3T க்களில் கெத்து காட்டிய கேது ஒன் ப்ளஸ் 4ல் தனது ஆஸ்தன இடமான ரேமில் குடிபோவதால் 8 GB இண்டர்னல் மெமரிக்கே ஓவர் சீன் போடும் ஃபோன்களுக்கு மத்தியில் 8GB ரேம் வைத்து காலரைத் தூக்கி விட்டு சுத்துவீர்கள். 4000 Mah பேட்டரியும் இருப்பதால் விடிய விடிய வீடியோ கேம் விளையாடி குஜாலா இருப்பீங்க.

உங்களுக்கு ராசியான டெக்னாலஜி : வீடியோ கேம்ஸ்

சாம்சங் ராசி அன்பர்களே...

’அட அதெல்லாம் பொரளிடா எல்லா ஃபோனுமா வெடிக்கும்?’னு வெளிய வெறப்பா சுத்துனாலும் உள்ளுக்குள்ள ’ஒரு வேளை வெடிக்குமோ’னு எனி டைம் பீதியிலேயே சுற்றும் சாம்சங் ராசி அன்பர்களே... சென்ற ஆண்டு  நோட் 7 நோட்டமிட்டுக் கொண்டிருந்த சனி பகவானின் கொடூரப் பார்வை நோட் 8 மீதும் இருக்கும் என்று கட்டம் சொல்வதால்.. ஆணியே புடுங்க வேணாம் போங்கடா என்று நோட் வகை போன்களுக்கு தலை முழுக வாய்ப்புண்டு. அப்படியே வந்தாலும் எட்டடி தள்ளிவைத்தே பயன்படுத்தவும். 

உங்களுக்கு ராசியான டெக்னாலஜி : சாம்சங் ரெஃப்ரிஜூரேட்டர். 

மைக்ரோசாப்ட் ராசி அன்பர்களே...


கண்ணும் கண்ணும் நோக்கியானு பாடித் திரிஞ்சுட்டு இப்போ நோக்கியாவே கெடையாதாம் சர்ஃபேஸ்தானாம்னதும் சோகத்துல சுத்தும் மைக்ரோ சாஃப்ட் ராசி நேயர்களே.. உங்களுக்கு செவ்வாய் தோசம் உச்சத்தில் இருப்பதால் எல்லா ஆப்’பும் லேட்டாதான் கிடைக்கும். ஊரே ப்ரிஸ்மாவில் விதவிதமா போட்டோ போட நீங்க சர்பேஸ் பென் எழுதுதானு கிறுக்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். 

உங்களுக்கு ராசியான டெக்னாலஜி : அது ஒண்ணுதான் குறைச்சல்

- கார்க்கிபவா, தி.விக்னேஷ் Trending Articles

Sponsored