அன்லிமிட்டட் இந்தியா... அதிரடி சீனா..! மொபைல் சந்தையில் என்ன நடக்கிறது?Sponsoredஉங்கள் முதல் மொபைல் என்ன பிராண்ட் என நினைவிருக்கிறதா? நோக்கியா, மோட்டோரோலா, சோனி, சீமென்ஸ் என்பதே பதிலாக இருக்கும். ஜென் இஸட் ஆட்கள் என்றால் ஆப்பிளோ, சேம்சங்கோ இருக்கலாம். இவர்கள் எல்லாம் கோலோச்சிய இந்திய மொபைல் மார்க்கெட்டில் இப்போது விவோ, ரெட்மீ, அஸுஸ், லெனோவா பெயர்களே சூப்பர்ஸ்டார்கள். இந்திய மொபைல் பிராண்ட் ஆன மைக்ரோமேக்ஸ், கார்பன் முதலியவை தங்களின் விற்பனை சரிவதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. காரணம், சீன பெருந்தலைகளின் அதிரடி என்ட்ரி.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்திய பிராண்டுகள் அவ்வளவு விற்கவில்லை. திடீரென மொபைல் தேவை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்க, அதைச் சரியாகப் பயன்படுத்தி சாம்சங், ஆப்பிள் போன்ற சர்வதேச பிராண்டுகளை வீழ்த்தி, இந்திய பிராண்டுகள் முதல் இடம் பிடித்தன. இன்று விலையையும் வசதிகளையும் வைத்து, சீன நிறுவனங்கள் அதே வழியில் இந்திய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளுகின்றன.

Sponsored


சீன நிறுவனங்கள் இந்திய சந்தையைக் குறிவைக்க பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவை இவைதான்.

Sponsored


1. சீனா மார்க்கெட்டின் தன்னிறைவு

138 கோடி மக்கள்தொகை கொண்ட சீனாவில் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் 2010-ம் ஆண்டில் தொடங்கியது. அதன் வேகத்தைக் கண்டு பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் கோடிகளை இறக்க, சில ஆண்டுகளிலே அங்கே மொபைல் சந்தை தன்னிறைவை அடைந்து விற்பனை சரியத் தொடங்கியது. அதனால் தயாரிக்கும் மொபைல்களை சர்வதேச மார்க்கெட்டுக்கு ஏற்றுமதி செய்யவேண்டிய நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டன. சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து மிகப் பெரிய மொபைல் சந்தை இந்தியா. உடனே, அனைத்து சீன நிறுவனங்களும் கைகளை உயர்த்திக்கொண்டு இந்தியாவுக்குள் ஆஜர் ஆகின.

2. இந்தியாவில் மொபைல் விநியோகம் எளிது

அமெரிக்க மொபைல் மார்க்கெட் இந்தியாவைவிட பெரியதுதான். ஆனால், அதன் அதிகமான ஷேர் ஆப்பிள், சாம்சங் போன்ற ஜாம்பவான்கள் கைகளில் இருக்கிறது. மேலும், மொபைல் ஆபரேட்டர்கள் தரும் ஆண்டு ப்ளான்களில்தான் அதிக மொபைல்கள் விற்கின்றன. எனவே, சீன நிறுவனங்களால் அங்கே உள்ளே நுழைவது எளிதான காரியம் அல்ல. ஆனால், இந்தியாவில் இந்தச் சிக்கல்கள் எதுவும் இல்லை.

3. ஆன்லைன் பிரம்மாஸ்திரம்

ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியே மொபைல்கள் அனுப்புவதில் செலவுகள் அதிகம். டீலர் கமிஷனும் அதிகம். இதை ஒரே ஒரு முடிவில் மாற்றிக்காட்டியது மோட்டோரோலா நிறுவனம். ஆன்லைன் ஷாப்பிங் போர்ட்டல் ஃப்ளிப்கார்டுடன் கைகோத்த மோட்டோராலா, தனது மோட்டோ-ஜி மாடலை ஃப்ளிப்கார்ட்டில் மட்டுமே வாங்க முடியும் என அறிவித்தது. அட்டகாச விளம்பரங்கள், அசத்தலான வசதிகள், அதிரடி விலை என எல்லாம் சேர்ந்து மக்களை ஃப்ளிப்கார்ட் பக்கம் திரும்பவைத்தது. இந்த முடிவால் இரண்டு நிறுவனங்களுக்குமே வின் - வின் சிச்சுவேஷன். அதன் பிறகு வந்த சீன நிறுவனங்கள் இந்த வழியைப் பின்பற்றி அமேசான், ஸ்னாப்டீல் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் மட்டுமே மொபைல்களை சந்தைக்குள் கொண்டுவந்தன. இதனால் இடைத்தரகர்கள் செலவு இல்லை. ஆயிரக்கணக்கான மொபைல்களை ஸ்டாக் செய்துவைக்கத் தேவை இல்லை. அதனால் இன்வென்ட்ரி செலவும் கிடையாது. ஆன்லைன் வர்த்தகத்தில் ட்ரெண்ட் எளிதில் கண்டறிய முடியும். அதனால், அடுத்த ஒரு வாரத்துக்கு எவ்வளவு மொபைல்கள் தேவைப்படும் என்பதை அறிந்து, அதை மட்டும் ஷிப்மென்ட் செய்யலாம்.

4.சர்வீஸ் சென்டர்கள்

எலெக்ட்ரானிக் பொருட்கள், அதிகம் பழுதாகும் வாய்ப்பு உடையவை. அதனால், சர்வீஸ் சென்டர்கள் சரியாக அமைவது முக்கியம். சீன மொபைல் நிறுவனங்கள் இதைச் சரியாகப் புரிந்துவைத்திருக்கின்றன. அவர்களது தயாரிப்புச் செலவு குறைவு என்பதால், சர்வீஸுக்குக் கணிசமான தொகையை ஒதுக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் சின்னச் சின்ன மொபைல் சர்வீஸ் நிறுவனங்களுடன் கைகோத்துக்கொள்கிறார்கள். ஒரே சர்வீஸ் சென்டரில் பல சீன பிராண்ட் மொபைல்களை சர்வீஸ் செய்வதை நாம் பார்க்கலாம். பிரச்னை அதிகம் என்றால், மொபைலை மாற்றிக் கொடுக்கவும் இவர்கள் தயங்குவது இல்லை. மைக்ரோமேக்ஸ், லாவா போன்ற இந்திய பிராண்டுகள் தங்களது மதிப்பை இழந்ததற்குக் காரணமே, சரியான சர்வீஸ் வசதி செய்து தராததுதான்.

5. இந்தியாவின் தேவை அதிகம்

இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் இன்னும் முழுமையாகச் சென்று சேரவில்லை.50 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்களிடம் இன்னமும் ஸ்மார்ட்போன்கள் இல்லை. ஆனால், சீனாவில் இது 90 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது. இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் பயனர்கள் கூடிக்கொண்டே வருகிறார்கள். அவர்களின் தேவையை சீன நிறுவனங்கள் பூர்த்திசெய்து தங்களது வாடிக்கையாளர்களாக மாற்றிக்கொள்வது எளிதாக இருக்கிறது.

6. விளம்பரங்கள்

சீன நிறுவனங்களின் விளம்பரங்கள்தான் டாக் ஆஃப் தி டவுன். ஸ்மார்ட்போன் விளம்பரங்களுக்காக ஆண்டுதோறும் 1,200 கோடி ரூபாய் இந்தியாவில் செலவு செய்யப்படுகிறது. இதில் 55 சதவிகிதத்தை விவோ, ஓப்போ, ஜியோனி, லீ ஈகோ ஆகிய நான்கே நிறுவனங்கள் செலவுசெய்கின்றன. ஒவ்வொரு நாளும் நாளிதழ்களின் முதல் பக்கத்தை மொபைல் விளம்பரங்களே ஆக்கிரமிக்கின்றன. ஆன்லைன் மூலமே சீன மொபைல்கள் பெரும்பாலும் விற்கப்படுவதால், ஆன்லைன் விளம்பரங்களும் அசத்துகின்றன.

இந்திய நிறுவனங்களால் சீன நிறுவனங்களின் இந்த அட்டாக்கைச் சமாளிக்க முடிவது இல்லை. சில வருடங்களில் கோடிக்கணக்கான மொபைல்களை விற்றுவிட்டு, திரும்பவும் சொந்த நாட்டுக்கே சென்றாலும் அவர்களுக்கு லாபம்தான். அதனால், குறைவான நாட்களில் அதிக பொருட்களை விற்க விளம்பரங்களில் பணத்தைக் கொட்டுகிறார்கள். இந்த வியாபரத் தந்திரம் இந்திய நிறுவனங்களுக்குப் பொருந்தாது. ஆனால், அவர்களைச் சமாளிக்க விளம்பரம் செய்தே ஆக வேண்டும்.

7. சீனா- இந்தியாவில் அலைவரிசை ஒன்றே

மொபைல் போன்களுக்கான அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்), ஒவ்வொரு நாட்டுக்கும் மாறும். ஆனால், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் ஏறத்தாழ இது ஒரே அளவில்தான் இருக்கின்றன. சீனாவில் 4ஜி நெட்வொர்க் சில ஆண்டுகளுக்கு முன்னரே வந்துவிட்டது. 4ஜி மொபைல்கள் தயாரிப்பதில் சீன நிறுவனங்கள் அனுபவம் மிக்கவர்கள். எனவே, 4ஜி மொபைல்களைக் குறைந்த விலையில் அவர்களால் கொடுக்க முடிகிறது. தொழில்நுட்பம் அடிப்படையில் சீனாவிலும் இந்தியாவிலும் தேவைப்படும் மொபைல்களில் பெரிய வித்தியாசம் இல்லை.

8. பேட்டன்ட் வாங்குவது இந்தியாவில் எளிது

சீன நிறுவனங்களில் ஒன்று, இரண்டைத் தவிர மற்றவை சர்வதேச சந்தைகளில் தங்களது புராடெக்ட்களுக்கு பேட்டன்ட் வாங்குவது இல்லை. அவர்களது ஆர்& டி விஷயங்களில் பல பிரச்னைகள் உண்டு. அதனால் அமெரிக்க, ஐரோப்பியச் சந்தைகளுக்குச் செல்ல அவர்கள் தயங்குகிறார்கள். ஒப்பீட்டு அளவில் இந்தியாவில் இது எளிது. அதனால் எந்தக் கவலையும் இல்லாமல், களத்தில் இறங்கிவிட்டார்கள்.

தரம் அடிப்படையில் சீனப் பொருட்கள் மீது எப்போதும் சந்தேகம் உண்டு. போன் சூடாகும்; ஹேங் ஆகும். ஆனால், இதே பிரச்னைகள் இப்போது விலை உயர்ந்த போன்களிலும் வர ஆரம்பித்துவிட்டதால் இதை யாரும் கண்டுகொள்வது இல்லை. சீன மொபைல்கள் சர்வீஸ் ஓ.கே-தான். ஆனால், வாரன்ட்டி முடிந்த பிறகு பார்ட்ஸ் போனால் ரீப்ளேஸ் செய்வது சிரமம். 

மொபைல் என்பது, ஓர் ஆண்டுக்கு ஒருமுறை மாற்றவேண்டியது எனப் பரவலாக ஒரு கருத்து பதிந்திருக்கிறது. அதனால், சீன மொபைல்கள் பற்றியக் குறைபாடுகள் பெரிதாகக் கண்டுக்கொள்ளப்படுவது இல்லை. 

மொபைலின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்வதால், அதன் திறனும் மேம்படுத்தப்பட வேண்டும். இப்போது 6ஜிபி ரேம் கொண்ட மொபைல்கள் தான் மோஸ்ட் வாண்ட்டட். இந்த மாதம் மட்டும் 5க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் தனது 6ஜிபி மொபைலை அறிமுகப்படுத்துகின்றன. ஒவ்வொரு மொபைலும் அதன் வேகத்தை விட வேகமாக விற்று தீர்கின்றன என்பதுதான் ஆச்சர்யம். 

-கார்க்கிபவாTrending Articles

Sponsored