நெருக்கடி சமயத்தில் தொழில்நுட்பத்தை சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி?Sponsoredஜல்லிக்கட்டு போராட்டம் நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறது. தொழில்நுட்பத்தின் பேருதவியுடன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு இடைஞ்சல்களும், அதே தொழில்நுட்பத்தின் வழி வந்தன. இனி வரும் நெருக்கடி காலங்களில் டெக்னாலஜியின் குழப்பங்களில் இருந்து தப்பிக்க, சில விஷயங்களை நாமும் கவனித்து பின்பற்ற வேண்டும்

1) #Verified - சென்னை வெள்ளத்தின்போது மிகப்பெரிய பங்காற்றிய இந்த ஹேஷ்டேக் தான் அடுத்தடுத்த பிரச்னைகளின் போது மிகப்பெரிய எதிர்சக்தியாக மாறிப்போனது. நக்கல், நையாண்டி செய்பவர்கள் இதை விளையாட்டாக மாற்றி பயன்படுத்த, குழப்பம் விளைவிக்க நினைத்தவர்கள் அதையே மும்முரமாக செய்து பல போலி தகவல்களை பரிமாறினர். இனிமேல், #Verified என்றால், அதற்கு குறைந்தபட்சம் ஒரு புகைப்படம் (நம்பத்தகுத்த) இருந்தால் மட்டுமே ஷேர் செய்யலாம். எதையும் பகிர்வதற்கு முன் அது சரியானதாக இருக்குமா என ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும்.

Sponsored


2) ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு வீடியோ ஃபார்வர்டுகள் மிகப்பெரிய உதவி செய்திருக்கின்றன. மக்களுக்கு அறிமுகமானவர்கள் சொல்லும் கருத்துகள் வீடியோ முறையில் பகிர்ந்தால் அதன் நம்பகத்தன்மை அதிகரிக்கும். ஆர்ஜே பாலாஜி செய்ய சொன்னார் என்ற தகவலுடன்  இணையதளத்தில் பதிவு செய்யச் சொல்லி கோரும் ஃபார்வர்டு ஒன்று வைரல் ஆனது. அதை ஆர்ஜே பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் மறுத்திருந்தார். கிட்டத்தட்ட எல்லா பிரபலங்களுமே சமூக வலைதளங்களில் இருக்கிறார்கள். அவர்கள் பக்கத்துக்கு சென்று அது உண்மைதானா என பார்த்துவிட்டு ஷேர் செய்யலாம்.

Sponsored


3) பொதுமக்களும் வீடியோ வசதியை பயன்படுத்துவது நல்லது. ஒருவர் காந்தி சிலையின் பின்புறம் உணவுப்பொட்டலங்களோடு இருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அதை வெறும் எழுத்து மூலம் ஷேர் செய்வதோடு இல்லாமல், 20 செகண்ட் வீடியோவில், காந்தி சிலையையும் உணவுப் பொட்டலங்களையும் படமெடுத்து, அந்த நேரத்தையும் பேசி ஃபார்வர்ட் செய்தால் அது நிஜமான Verified ஆக இருக்கும். 

4) செப்டம்பர் மாதம் ரத்தம் வேண்டும் என கேட்கும் ஃபார்வர்டு, நவம்பர் மாதம் ஷேர் ஆவதை பார்த்திருக்கிறோம். வேண்டும் என்றே பொய்யான தகவலை உருவாக்குபவர்கள் வெகு சிலர். அதை நம்பி ஃபார்வர்ட் செய்பவர்கள்தான் லட்சம் பேர். எனவே நமக்கு வரும் ஃபார்வர்டில் தேதி இருக்கிறதா என உறுதி செய்துக் கொள்வது நல்லது. அல்லது தேதியை சேர்க்க வேண்டும். தேதியை அழித்து யாரும் ஷேர் செய்ய போவதில்லை.

5) டொனால்ட் ட்ரம்ப் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மோடிக்கு மென்ஷன் செய்ததாக ஒரு ஸ்க்ரீன்ஷாட் வைரல் ஆனது. இது போன்ற பொய்யான ஸ்க்ரீட்ன்ஷாட்களை உருவாக்கவே பல இணையதளங்கள் உள்ளன. அதற்கு பதில் அந்த ட்வீட் அல்லது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸின் URLஐ பகிர்ந்தால் பல குழப்பங்களை நீங்கும். 

6) தொலைக்காட்சியில் வரும் செய்திகளை புகைப்படம் எடுத்து, அதை ஃபோட்டோஷாப்பில் நினைத்த மாற்றங்களை செய்து அதை வாட்ஸப்பில் ஷேர் செய்வதும் அதிகரித்திருக்கிறது. தொலைக்காட்சிகளில் சில முக்கிய செய்திகள் இப்படி வருவது உண்மைதான். அதை பகிர நினைப்பவர்கள் குறைந்தபட்சம் Gif வடிவில் 3 நொடிகளாவது எடுத்து அனுப்ப வேண்டும். வீடியோவையும் எடிட் செய்யலாம் என்றாலும், அதற்கான நேரமும் செலவும் அதிகம். புகைப்படங்களை விட இந்த முறையில் எடிட் செய்வது 99% நடக்காது.

7) முக்கியமான போராட்டங்களை காலத்தில் பதிவு செய்வதற்காக நினைவுத்தூண்கள் போல பல விஷயங்களை முன்னெடுப்பார்கள். அது போல, ஒரு டிஜிட்டல் நினைவகத்தை உருவாக்கலாம். ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான அனைத்து விஷயங்களை ஓர் இணையதளத்தில் தொகுக்கலாம். அது வருங்காலத்துக்கு இந்தப் போராட்டத்தின் வீரியத்தை சொல்லும் என்பதோடு, அடுத்தடுத்த போராட்டங்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக இருக்கும் என்பது நிதர்சனம்.

இன்னும் நிறைய குழப்பங்களை டெக்னாலஜி உதவியுடன் நிகழ்த்தி வருகிறார்கள். அதையெல்லாம்,டெக்னாலஜியை சரியாக பயன்படுத்தும் நம்முடைய பொறுப்பான செயல்கள் மூலமே முறியடிக்க முடியும். வேறு என்ன என்ன விஷயங்களில் நாம் கவனமாக இருக்கலாம் என்பதை கமெண்ட்டில் பதிவு செய்யுங்கள்.
 

-கார்க்கிபவாTrending Articles

Sponsored