உங்கள் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்கும் கூகுள்! #GoogleMapsTimelineSponsoredகூகுள் மேப்ஸ் எந்தெந்த விஷயங்களுக்கு எல்லாம் பயன்படும் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். பலருக்கு தற்போது வழிகாட்டிக் கொண்டிருப்பது கூகுள் மேப்ஸ்தான். இப்படி நம் பயணங்களில் வழிகாட்டும் ஆண்ட்ராய்டு கைடாக இருக்கும் இந்த மேப்ஸில் நீங்கள் இதுவரை அதிகம் பயன்படுத்தாத ஒரு வசதியும் உண்டு. பலரும் இதனை பார்த்திருந்தாலும், சரியாக பயன்படுத்தியிருக்க மாட்டோம். ஆனால் இதனை பயன்படுத்தினால் உங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும். அதுதான் கூகுள் மேப்ஸ் டைம்லைன். 

2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த வசதிதான் இந்த கூகுள் மேப்ஸ் டைம்லைன். உங்கள் போனில் இருக்கும் ஜி.பி.எஸ் மூலமாக, நீங்கள் இதுவரை எந்தெந்த இடங்களுக்கு எல்லாம் சென்றுள்ளீர்கள் என்பதனை காட்டும் வசதிதான் இது. ஆண்ட்ராய்டு போனிலும் இதனைப் பார்க்க முடியும் என்றாலும், அதில் கொஞ்சம் பார்ப்பது கடினம்தான். எனவே இதனை டெஸ்க்டாப்பில் பார்ப்பதே சிறந்தது.

Sponsored


டைம்லைனை எப்படி பார்ப்பது?

Sponsored


முதலில் உங்கள் கணினியில், கூகுள் அக்கவுன்ட்டை லாக்-இன் செய்து கூகுள் மேப்ஸ் பக்கத்திற்கு செல்லவும். நீங்கள் லாக்-இன் செய்யும் மின்னஞ்சல் முகவரி, உங்கள் போனில் பயன்படுத்தும் அக்கவுன்ட்டாக இருக்க வேண்டியது அவசியம். 
பிறகு கூகுள் மேப்ஸில் இருக்கும் டைம்லைன் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் போதும். உங்கள் பயண விவரங்கள் அனைத்தும் வந்துவிடும். தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை கொடுத்து, எந்த குறிப்பிட்ட நாளுக்கு வேண்டுமானாலும் சென்று உங்களால் தேட முடியும். இதற்கு நீங்கள் செய்திருக்க வேண்டியது உங்கள் மொபைலில் கூகுள் லொக்கேஷன் ஹிஸ்டரியை ஆன் செய்து வைத்திருக்க வேண்டும். அத்துடன் இணைய வசதியும் இருக்க வேண்டும்.

தற்போது நீங்கள், எந்தெந்த நாட்களில் எந்தெந்த இடங்களுக்கு சென்றீர்கள் என்ற விவரம் அனைத்தும் கூகுள் மேப்ஸில் தெளிவாகத் தெரியும். நீங்கள் இந்த ஆண்டில் சென்ற இடங்கள் அனைத்துமே, மேப்பில் சிவப்பு புள்ளிகளால் காட்டப்படும். அதன் பிறகு நீங்கள் தேதி வாரியாக தேடினால், உங்களது பயண விவரங்கள அனைத்தும் தெரியும். 

உதாரணத்திற்கு நேற்று நீங்கள் உங்கள் அலுவலகத்தில் இருந்து, வீட்டிற்கு சென்றிருந்தீர்கள் என்றால் அந்த விவரங்கள் அனைத்தையும் இதில் 'ஹைலைட்' செய்து காணமுடியும். நீங்கள் காலை உங்கள் வீட்டில் இருந்து கிளம்பிய நேரம், இடையே நடந்து சென்றது, பேருந்தில் சென்றது, இடையே திரும்பிய முக்கிய சந்திப்புகள், சென்று சேர்ந்த நேரம், மொத்த பயண தூரம் மற்றும் நேரம் என அனைத்து விவரங்களையும், சொல்லிவிடுகிறது கூகுள் மேப்ஸ். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், நீங்கள் ஒருநாளை சொன்னால் போதும். அன்றைக்கு நீங்கள் எங்கெல்லாம், எப்படியெல்லாம் சென்றீர்கள் என்ற முழு விவரத்தையும் 'மேப்' மூலம் விளக்கிவிடுகிறது.

உங்களால் மாற்றவும் முடியும்!

உங்கள் மொபைல் மூலம், செயற்கைக்கோள் உதவியுடன் உங்களை தினந்தோறும் பின்தொடர்ந்தாலும் கூட, சில இடங்களை கூகுளால் துல்லியமாக கண்டறிய முடியவில்லை. அதுபோன்ற நேரங்களில், நீங்கள் நிற்கும் இடத்திற்கு மிக நெருக்கமான வேறு இடங்களை குறிப்பிடுகிறது கூகுள். அதுபோன்று தவறாக காட்டப்படும் சமயங்களில், அதுகுறித்து உங்களிடமே அந்த இடம் சரியா எனக் கேட்கிறது. அப்போது அதனை மாற்றிவிடவும் முடியும். அதேபோல நீங்கள் நீக்க விரும்பும் விஷயங்களை, பயண விவரங்களை இதில் இருந்து தூக்கவும் முடியும்.

இந்த வசதி சிறப்பா? கடுப்பா?

நீங்கள் கடந்த வருடம், மே மாதம் 10-ம் தேதி எங்கே சென்றீர்கள் என்ற விவரம் உங்களுக்கு மறந்திருக்கும். ஆனால் அதனை நீங்கள் உடனே இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு மாதமும் உங்கள் பயணங்களை நீங்கள் இதில் பார்க்க முடியும். கூகுள் மேப்பில் இருக்கும் இந்த விவரங்களை, நீங்கள் மட்டும்தான் பார்க்க முடியும். வேறு யாராலும் இவற்றைப் பார்க்க முடியாது என்கிறது கூகுள். இவையெல்லாம் இதன் சிறப்பு. ஆனால் இதில் இன்னொரு விஷயமும் கவனிக்க வேண்டியது இருக்கிறது. அதாவது உங்களின் அன்றாட நடவடிக்கைகள், நீங்கள் அதிகம் செல்லும் இடங்கள், செல்லும் உணவகங்கள், திரையரங்கங்கள், கடைகள் என எல்லா விஷயங்களுமே இதன் மூலம் கூகுள் சர்வர்களில் பதிவாகின்றன.

இதற்காக நீங்கள் கூகுள் மேப் வசதியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை. உங்கள் போனில் ஜி.பி.எஸ் வசதி ஆன் ஆகி இருந்தாலே போதும். கூகுள் நவ் சேவையை பயன்படுத்தி, இடங்களை தேடினாலோ, கூகுள் போட்டோஸ் மூலம், ஏதாவது ஒரு இடத்தில் நீங்கள் போட்டோ எடுத்தாலோ கூட, அதனையும் இந்த டைம்லைனில் காண முடியும். இது நமக்கு ஒரு வசதியாக இருந்தாலும் கூட, நமது தகவல்கள் மூன்றாம் நபரிடம் பதிவாவது நெருடலாக இருக்கிறது இல்லையா?

இதில் இருந்து விடுபட வேண்டுமானால், அதற்கும் ஓகே சொல்கிறது கூகுள். நீங்கள் இனிமேல் செல்லும் இடங்கள் இதில் பதிவாக கூடாது என்றால், உங்கள் லொக்கேஷன் ஹிஸ்டரியை Off / Disable செய்து விடலாம். அல்லது இதற்கு முன்பு பதிவான அனைத்து விவரங்களையுமே அழிக்க வேண்டும் என்றால், Delete all Location History என்ற வசதியை பயன்படுத்தலாம். இதன்மூலம் இதுவரை பதிவான தகவல்கள் அனைத்தும் நீக்கப்பட்டுவிடும். 

- ஞா.சுதாகர்.
 Trending Articles

Sponsored