ஃபேஸ்புக்கில் 'Profile Name' மாற்றுவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்! #FacebookTipsSponsoredநிஜ வாழ்க்கையிலும் சரி; டிஜிட்டல் வாழ்க்கையிலும் சரி; இரண்டிலுமே நமது பெயர் என்பது நம்முடைய அடையாளம். இன்னும் சொல்லப்போனால் அதுதான் இந்த உலகில் உங்களுடைய முகவரி. அதேபோல ஆன்லைனில் உங்களுடைய யூசர் நேம்தான் உங்கள் அடையாளம். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், கூகுள் என எல்லா கணக்குகளுக்கும் இது பொருந்தும். ஆனால் நிஜ வாழக்கையில் பெயர் மாற்றுவது போல, உங்கள் ஃபேஸ்புக்கில் பெயரை மாற்றுவது என்பது கடினமான விஷயம் கிடையாது. ஆனால் ஒரு சில விஷயங்களை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டால் உங்களுக்கு சிக்கல்தான்.

சில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்த செய்தியைக் கேட்டு, உணர்ச்சிக் கொதிப்பில் தன்னுடைய ஃபேஸ்புக் புரொபைல் பெயருக்குப் பின்பு ஃபிடல் காஸ்ட்ரோ என சேர்த்து தனது பெயரை மாற்றிவிட்டார். அந்த சமயம் காஸ்ட்ரோவின் தாக்கம் முகநூலில் அதிகமாகவே இருந்தது. எனவே புரொபைல் பிக்சர் மாற்றுவது, காஸ்ட்ரோவின் பொன்மொழிகளை ஸ்டேட்டஸாக தூவுவது, அவர் தொடர்பான செய்திகளைப் பகிர்வது என மொத்த ஃபேஸ்புக்கும் பிசியாக இருந்தது. எனவே இவர் பெயர் மாற்றியது பெரிதாகத் தெரியவில்லை. 

Sponsored


ஆனால் எப்பேர்ப்பட்ட வெள்ளம் வந்தாலும் நான்கு நாட்கள் பேசிவிட்டு, பீப் சாங்கிற்கு தாவுவதுதானே நம் ஃபேஸ்புக் கலாசாரம்? அதேபோல சில நாட்களில் ஃபேஸ்புக்கில் காஸ்ட்ரோ அலை செவ்வனே கரையைக் கடந்தது. அதற்கு பிறகு ஜெயலலிதா மரணம், தமிழக அரசியல் சூழல், ஜல்லிக்கட்டு பிரச்னை, பன்னீர் செல்வம் பல்ட்டி, சசிகலா சபதம், எடப்பாடி முதல்வர் ஆனது, நெடுவாசல் போராட்டம் என எக்கச்சக்க விஷயங்கள் நடந்துவிட்டன. அத்தனைக்கும் ஸ்டேட்டஸ் போடும் ஃபேஸ்புக் உலகம், இவை அனைத்தையும் கடந்துவந்து விட்டது. இந்த ஜோதியில் ஐக்கியமாக எண்ணி, மீண்டும் புரொபைல் பெயரை மாற்றலாம் என நினைத்தால் ஃபேஸ்புக் ஸ்ட்ரிக்ட்டாக நோ சொல்லிவிட்டது. ஆன்லைனில் அவசரப்பட்டு காஸ்ட்ரோ பெயரை இவர் மாற்றியிருந்தாலும், நிஜத்தில் போராட்டம், புரட்சி ஆகியவற்றிற்கும் இவருக்கும் ரொம்ப தூரம். எனவே காஸ்ட்ரோவின் பெயர் இவர் புரொபைல்க்கு கொஞ்சமும் செட் ஆகவில்லை. மாற்ற நினைத்தாலும் தற்போது மாற்ற முடியாது. ஃபேஸ்புக் ஐடியை யாரிடமும் சொல்லக் கூட முடியாத நிலை. கடைசியில் காத்திருந்து, காத்திருந்து 60 நாட்கள் கழித்துதான் தனது ஐ.டி.யின் பெயரை மாற்றினார். மீண்டும் பழைய பெயர் வந்ததும்தான் ஃபேஸ்புக்கில் மீண்டும் ஆக்டிவ் ஆனார் அவர்.

Sponsored


ஃபேஸ்புக்கில் உங்கள் அக்கவுன்ட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்றால் இதுபோன்ற சிக்கல்கள் இருக்கின்றன. எனவே நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இவைதான்.

1. உங்களுடைய ஃபேஸ்புக் பேஜில் தெரிவது உங்களுடைய ஃபேஸ்புக் பெயர். உங்களுடைய அட்ரஸ் பாரில் தெரிவது ஃபேஸ்புக்கின் யூசர் நேம். இரண்டிற்கும் இடையே வித்தியாசங்கள் உண்டு.

2. உங்களுடைய ஃபேஸ்புக் பெயரை மாற்றும் போது, அதனை அடுத்த 60 நாட்களுக்கு மாற்ற முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஃபேஸ்புக் செட்டிங்க்ஸ் பகுதியில் சென்று இவற்றை மாற்றிக்கொள்ளலாம்.

3. யூசர்நேமையும் இதேபோல செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று மாற்றிக்கொள்ளலாம். ஆனால் ஏற்கெனவே வேறு அக்கவுன்ட்களுக்கு இருக்கும் யூசர் நேமை நீங்கள் பயன்படுத்த முடியாது. இதற்கான Availability-யை நீங்கள் யூசர் நேம் மாற்றும் போதே பார்த்துக் கொள்ளலாம்.

4. மேலே பார்த்தவை தனிப்பட்ட நபர்களின் கணக்குகளுக்கு மட்டுமே! உங்களுடைய தனிப்பட்ட அல்லது நிறுவனங்களின் பக்கங்களுக்கு இது பொருந்தாது. ஃபேஸ்புக் பேஜ்களின் யூசர்நேம் மற்றும் பெயர்களை மாற்ற வேண்டுமெனில், 'Edit Page Info' பகுதிக்கு சென்று மாற்றிக்கொள்ள முடியும். பக்கங்களின் பெயர்களை இன்று நீங்கள் மாற்றினால், உடனே இன்னொரு முறை வேறு பெயரை நீங்கள் மாற்ற முடியாது. பின்பு 7 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

வெறும் புரொபைல் பெயர்தானே என்று அசால்ட்டாக இருக்காதீர்கள். உங்களுடைய முகநூல் முகவரி என்பது உங்களுடைய ரெஸ்யூம் முதல் விசிட்டிங் கார்டு வரை அனைத்து இடங்களுக்கும் வந்துவிட்டது. எனவே அவற்றை தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்!

- ஞா.சுதாகர்.Trending Articles

Sponsored