பயனர்களிடம் பணம் கேட்கப்போகிறதா வாட்ஸ்அப்? #WhatsappSponsoredன்னுடைய முதல் 8 வருடங்களை சாதனைப் பயணங்களோடு கடந்துவிட்டது வாட்ஸ்அப். இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்பாக திடீர் என ட்ரெண்ட் அடித்து, பின்னர் மொபைலில் அத்தியாவசியமான ஆப்பாக மாறியது வரையிலும் வாட்ஸ்அப் செய்தது அபார சாதனை. அதனால்தான் ஃபேஸ்புக் உடனே பேரம் பேசி வாங்கிக்கொண்டது. முதலில் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்த போது, ஒரு வருடத்திற்கு வாட்ஸ்அப் இலவசம். அதன்பின்பு பயன்படுத்த பணம் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால் இதன் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு முற்றிலும் இலவச சேவையாக இதனை மாற்றியது அந்நிறுவனம். எனவே வாட்ஸ்அப் பயனாளர்கள் அதற்கு எந்தவிதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. 

இந்நிலையில் தற்போது இந்தியாவில் முதல்முறையாக வணிக ரீதியான நோக்கில் வாட்ஸ்அப் பிசினஸ் என்னும் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முனைப்பில் இருக்கிறது வாட்ஸ்அப். 

Sponsored


வாட்ஸ்அப் ஃபார் பிசினஸ் என்ற புதிய வெர்ஷனில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பத்து அல்லது அதற்குக் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கையாளுவதற்கும், தக்க ஆலோசனைகளை வழங்குவதற்கும் ஏற்றதாக இது இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் தனது எட்டு வருட இலவச மெசேஜ், குறுஞ்செய்திகளை நமக்கு இலவசமாக வழங்கி வந்ததை அடுத்து, லாபம் ஈட்டும் நோக்கில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.  

Sponsored


வாட்ஸ் அப் இனி லாபம் ஈட்டும் நோக்கில் செயல்படப்போவதாக நிறுவனத்தின் முதல் COO மேட் ஐடிமா அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக வாட்ஸ் அப் மூலம் பேஸ்புக் 22 பில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள  மற்றும் சோதனை நிலையிலுள்ள இந்த வாட்ஸ் அப் செயலி, முதலில் இந்தியாவில் தனது சோதனையை வெற்றிகரமாக செயல்படுத்திய பின் மற்ற இடங்களில் வெளியிட முடிவு செய்துள்ளது. இன்னும் சோதனைக் கட்டத்தில் மட்டுமே இருப்பதால், எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. 

இந்தச் செயலியானது எளிமையானதாகவும், நம்பகத்தன்மையுடனும் மற்றும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்றும் மேலும் டிஜிட்டல் இந்தியாவின் நோக்கங்களை அடைவதற்கான வகையிலும் இது இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து உதவவும், இந்திய டிஜிட்டல் வணிக வளர்ச்சியில் இதன் பங்கு நிச்சயமாக இருக்கும் எனவும் உறுதியளித்துள்ளனர். 

இந்தியா வாட்ஸ்அப்பிற்கு மிகவும் லாபகரமான ஒரு நாடு. காரணம் இங்கே இருக்கும் பயனாளர்களின் எண்ணிக்கைதான். இந்த வருட ஆங்கிலப் புத்தாண்டின் போது மட்டும், இந்திய நாட்டில் 14 பில்லியன் குறுஞ்செய்திகள் வாட்ஸ்அப் மூலம் பதிவாகியுள்ளது. 
இந்தியாவில் கடந்த ஆண்டு (2016) மட்டும் , 155 மில்லியன் மக்கள் ஃபேஸ்புக் உபயோகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பேஸ்புக் வணிகம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது மட்டுமன்றி இந்தியாவில் 200 மில்லியன் மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப்பின் மொத்த பயனாளர்களில் 15 சதவீதம் மக்கள் இந்தியர்களே. இந்த காரணத்தால்தான் வாட்ஸ் அப் தனது புதிய முன்னோட்டத்தை இந்தியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

இந்த வருடத்தில் முன்னதாக இந்தியாவிற்கு வருகை புரிந்த கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, இந்தியாவின் வர்த்தக பொருட்கள் மிக விரைவில் பிரபலமாவதோடு, வெற்றி காண்பதாகவும் கூறியுள்ளார். உதாரணமாக யூ டியூப் பின் மூலம் பிரபலமடைந்த பல பொருட்கள் நாம் அறிந்தவையே. அதி விரைவு மற்றும் புதிய சேவைகளுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்களை இந்தியா அவ்வப்போது ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். ஃபேஸ்புகின் வொர்க் பிளேஸ், ஸ்லாக் போன்ற வசதிகளைப் போலவே இதுவும் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை வாட்ஸ்அப் சேவைக்குக் கட்டணம் நிர்ணயித்தாலும், அது வியாபார ரீதியான சேவைகளுக்கு மட்டுமே இருக்கும். தனிநபருக்குக் கட்டணம் விதிக்காது என்கிறார்கள் இணைய வல்லுநர்கள்.

-  மு. முருகன்

(மாணவப் பத்திரிகையாளர்) Trending Articles

Sponsored