அரசியலில் குதிக்கிறதா ஃபேஸ்புக்? #FacebookTownHallSponsoredற்போதைய காலகட்டத்தில், ஃபேஸ்புக்கையும், அரசியலையும் நிச்சயம் பிரிக்கவே முடியாது. ஏகப்பட்ட அரசியல் கட்சிகள், கொள்கைகள், விவாதங்கள், செய்திகள் என ஒரு செய்தி நிறுவனத்திற்கு இணையாக மற்றும் ஒரு கட்சி நேரடியாக செய்யும் பிரசாரங்களை விடவும் அதிகமாக, தகவல்களை மக்களிடம் பகிர்ந்து வருகிறது ஃபேஸ்புக். இதனை உணர்ந்துதான் பல அரசியல் தலைவர்களும், கட்சிகளும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற ஊடகங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கின்றனர். மோடி, கெஜ்ரிவால் உள்ளிட்ட பிரபலமான அரசியல் தலைவர்களுக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ஃபாலோயர்களும் இருக்கின்றனர். இந்த சக்சஸ் பார்முலாவை அப்படியே "டவுன்ஹால்' என்னும் புதிய வசதியாக மாற்றி தற்போது அரசியலில் குதித்திருக்கிறது ஃபேஸ்புக். 

ஃபேஸ்புக் மூலமாகவே உங்கள் பகுதியின் மக்கள் பிரதிநிதிகளை, அரசியல்வாதிகளை தொடர்பு கொள்ளச் செய்யும் வசதிதான் இந்த டவுன்ஹால். முதல்கட்டமாக தற்போது அமெரிக்காவில் மட்டுமே இது நடைமுறைக்கு வந்துள்ளது. இதனை தன் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் மூலம் அறிவித்திருக்கிறார் அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க். மக்களையும், அரசையும் ஒரே புள்ளியில் இணைக்கும் ஒரு முயற்சியாகவே இதனைக் கருதுவதாக அதில் தெரிவித்துள்ளார் அவர்.

Sponsored


இதன் மூலம் என்ன செய்யலாம்?

நீங்கள் இந்த டவுன்ஹால் வசதியை ஃபேஸ்புக் ஆப் மற்றும் டெஸ்க்டாப்பில் பயன்படுத்த முடியும். இதை டெஸ்க்டாப்பில் பார்க்க, https://facebook.com/townhall என்ற லிங்க்கில் சென்று பார்க்கலாம். ஆனால் இது தற்போது அமெரிக்காவில் மட்டும்தான் என்பதால், நம்மால் இதனைப் பார்க்க முடியாது.

Sponsored


மேலே சொன்ன முகவரிக்கு சென்றதும், நம் முகவரியைப் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களின் தொகுதிக்கான மக்கள் பிரதிநிதிகளை ஃபேஸ்புக் காட்டும். அடுத்ததாக உங்களின் பிரதிநிதிகள் அனைவரையும் நீங்கள் ஃபாலோ செய்யலாம். இதன் மூலம் அவர்களின் செய்திகள் உங்களுக்குத் தவறாமல் வந்து சேரும்.

அரசியல்வாதிகளை ஃபாலோ செய்தது எல்லாம் இதுவரை அனைத்தும் நாம் ஏற்கெனவே செய்பவைதான். இதன் பின்புதான் டவுன்ஹாலின் பணி தொடங்குகிறது. இதற்கடுத்ததாக Contact என்ற ஆப்ஷனைக் கொடுத்துள்ளது ஃபேஸ்புக். இதன் மூலம் உங்களின் மக்கள் பிரதிநிதிகளை நீங்கள் தொடர்புகொள்ள முடியும். இதற்காக கால், மெசேஜ், இ-மெயில் மற்றும் அவர்களின் பக்கத்தைப் பார்க்க என நான்கு வழிகளைத் தருகிறது ஃபேஸ்புக். நீங்கள் அனுப்பும் மெசேஜ் ஆனது ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் அவர்களை சென்றடையும். கால் செய்வதற்காக அவர்களின் அலுவலக எண்களும், இ-மெயில் செய்ய அவர்களின் அதிகாரப்பூர்வ அலுவலக மின்னஞ்சல் முகவரியும் இதில் இணைக்கப்பட்டிருக்கும். 

இந்த வசதிகள் மட்டுமின்றி, தேர்தலில் உங்களை வாக்களிக்க செய்யவும் அறிவுறுத்துகிறது ஃபேஸ்புக். இதற்காக உங்கள் பகுதியில் தேர்தல்கள் நடந்தால், தேர்வில் வாக்களிப்பது குறித்து நினைவுபடுத்தும் வசதியை இணைத்துள்ளது. இதே போன்ற வசதியை உத்தரப்பிரதேச தேர்தலுக்கும் ஏற்கெனவே அறிமுகம் செய்திருந்தது ஃபேஸ்புக். இந்தப் புதிய வசதிகள் அனைத்துமே அமெரிக்காவில் மட்டுமே தற்போது கிடைக்கும். பிறகு அனைத்து இடங்களுக்கும் வருமா என்பது குறித்து இன்னும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. குடிமக்களை அதிக அளவில் பங்கேற்க செய்யும் புதிய மாற்றங்கள் ஃபேஸ்புக்கில் இருக்கும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார் மார்க்; அதைத் தொடர்ந்து இந்த டவுன்ஹால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் இதேபோல புதிய வசதிகளை ஃபேஸ்புக்கிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

ஏற்கெனவே ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மக்களையும், பிரபலங்களையும் இணைக்கும் ஒரு பாலமாக செயல்பட்டு வருகின்றது. அதன் அடுத்த கட்டமாகவே இது பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக்கிற்கு இது ஒரு புதிய வசதியாக இருக்கலாம்; ஆனால் இது மக்களுக்கு எந்த அளவிற்கு பயன்படும், அரசியல்வாதிகள் இதனை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதை எல்லாம் பொறுத்துதான் இதன் வெற்றி அமையும். ஒருவேளை இந்த வசதி இந்தியாவுக்கும் வந்தால், ஒவ்வோரு பிரச்னையின் போதும் 'இதுதான் உங்கள் எம்.எல்.ஏ.,வின் தொலைபேசி எண், இதுதான் உங்கள் எம்.எல்.ஏ.,வின் மின்னஞ்சல் முகவரி; உடனே அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்' என வந்து குவியும் வாட்ஸ்அப் மெசேஜ்கள் வேண்டுமானால் குறையலாம். மற்றபடி பல நாட்கள் களத்தில் இறங்கிப் போராடியும் கூட, விவசாயிகளைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாத நம் அரசியல்வாதிகளிடம் வேறு எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது அல்லவா? அப்படித்தான் இதுவும்!

- ஞா.சுதாகர்.Trending Articles

Sponsored