போக்குவரத்து நெரிசலை APP மூலம் குறைக்கலாம்... அரசின் கவனத்துக்கு! #MobileApps



Sponsored



வாடகைக்கு வீடு தேடுவது தொடங்கி வீடு தேடி வரும் தண்ணீர் கேன் ஆர்டர் செய்யக் கூட ஆப்ஸ் (App) வந்துவிட்டன. வாழ்க்கையின் மிக முக்கியமான, சிக்கலான பிரச்னைகளுக்கு பலவற்றுக்கும் டெக்னாலஜி உதவியுடன் ஆப்ஸ் மூலம் தீர்வு தந்திருக்கிறார்கள் பல வியாபார நிறுவனங்கள். மகிழ்ச்சி.

ஆனால், டிஜிட்டல் இந்தியா என கூவிக்கொண்டிருக்கும் அரசு என்ன செய்திருக்கிறது? எத்தனை விஷயங்களுக்கு ஒரே ஒரு ஆப்ஸ் மூலம் தீர்வு தர முடியும் அதிகாரவர்க்கத்தால்? ஆதார் கார்டை இணைப்பதில் கூட சிக்கலான நடைமுறையையே வைத்திருக்கும் இந்த அரசுக்கு இதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான். ஆனால், உண்மையான டிஜிட்டல் இந்தியா என்பதில் இதுதான் முதலில் நடக்க வேண்டும்.

Sponsored


போக்குவரத்து காவல்துறைக்கு ஒரு ஆப்:
சென்ற ஞாயிற்றுக்கிழமை சென்னை அண்ணா சாலையில் திடிரென சாலையில் பள்ளம் ஏற்பட்டது. அப்போது ஒரு பேருந்து, ஒரு கார் அதில் சிக்கி விபத்துக்குள்ளாகின. இதனால் அந்தச் சாலையில் வாகன நெரிசல் அதிகமானது. அங்கே டிராஃபிக் சரியாக பல மணி நேரங்கள் ஆகியிருக்கும். சென்னை டிராஃபிக் போலீஸ் இதற்கு ஒரு ஆப் கொண்டு வரலாம். அதில், சென்னையில் எங்கெல்லாம் வாகன நெரிசல் அதிகம் இருக்கிறது என்பதை வாகன ஓட்டிகளுக்கு எடுத்துச் சொல்லலாம். 

Sponsored


எக்மோரில் இருந்து ஒருவர் சைதாப்பேட்டைக்கு சென்று கொண்டிருக்கிறார். வழியில் அண்ணா சாலையில் டிராஃபிக் அதிகம் என அவருக்கு தகவல் தெரிந்தால், அவர் மாற்றுப்பாதை மூலம் சைதாப்பேட்டைக்கு சென்றுவிடுவார். மேலும், டிராஃபிக் போலீஸ் வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்க விரும்பும் அனைத்து விஷயங்களையும் ஒரே க்ளிக்கில் அனுப்பிவிடலாம். காய்கறிகள் தொடங்கி கால்குலேட்டர் விற்பவர்கள் வரை அனைவரும் அனுப்பும் மெஸெஜையே தவறாமல் படிக்கிறார்கள். அதற்கு நடுவில் போலிஸிடம் இருந்து தகவல் வந்தால் பார்க்காமலா இருக்க போகிறார்கள்? 

டிராஃபிக் அப்டேட்ஸ் தருவது ஒரு பயன் தான். இதைத்தாண்டி, ஒவ்வொருவரின் லைசென்ஸ், இன்ஷூரன்ஸ் ஆகிய தகவல்களையும் இணைத்துக்கொள்ளலாம். அவை காலாவதி ஆகும் முன் அவர்களுக்கு நினைவூட்டலாம். அல்லது புதுப்பிக்க தவறுபவர்களை சாலையில் சோதனை செய்து பிடிப்பதை விட, ஆட்டோமேஷன் மூலம் அதிக சிரமமின்றி பிடிக்கலாம்.  மொபைல் கோர்ட் போன்ற விஷயங்களுக்கும் இந்த ஆப் தீர்வாக அமையும். நோ பார்க்கிங்கில் வண்டி நிறுத்தினாலோ, அதிக வேகத்தில் சென்றாலோ... அந்த வாகன எண்ணை வைத்து ஆப் மூலம் அபராத தொகையை தெரிவிக்கலாம். ஆன்லைன் வாலட் மூலம் அதை பெறவும் முடியும். விபத்துகள் நடந்தால் ஆப்-ல் பதிவு செய்திருக்கும் எமர்ஜென்சி நம்பருக்கு தகவல் போகும்படி செய்யலாம்.

ஆப் ஸ்டோரில் தேடியதில் புனே நகர போக்குவரத்து காவல்துறையின் ஒரு ஆப்ஸ் கண்ணில் பட்டது. நாம் சொன்ன பல விஷயங்களை அவர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள். இதை ஏன் இன்னும் மற்ற மாநகர போலிஸ் பின்பற்றவில்லையென்பது தெரியவில்லை. 

இன்னும் நிறைய விஷயங்களை உதாரணங்களாக காட்ட முடியும். அரசு உண்மையிலே டிஜிட்டல் இந்தியாவாக விரும்பினால் இதையெல்லாம் எப்போதோ செய்திருப்பார்கள். பள்ளி மாணவர்களிடம் இது போன்ற ஆப்ஸ்களுக்கு ஐடியா கேட்டால் போதும். ஆப்ஸ் மூலம் தீர்க்க கூடிய நாட்டின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் அவர்கள் தீர்வு தந்துவிடுவார்கள்.

இன்னும் என்ன என்ன ஆப்ஸ் கொண்டு வரலாம் என்பதை இங்கே படிக்கலாம்.

-கார்க்கிபவா



Trending Articles

Sponsored