உங்கள் வீட்டில் எந்தெந்தப் பகுதிகளில் சோலார் தகடுகள் பொருத்தலாம் தெரியுமா?



Sponsored



வீடுகளில் சோலார் அமைக்கும் வழக்கத்தைத் தற்போது பெரும்பாலான மக்கள் பின்பற்றத் துவங்கியுள்ளனர். வீட்டில் மின்சாரமில்லாத நேரத்தில் மாற்று எரிபொருளாகப் பயன்படுத்த துவங்கி, தற்போது முழுவதுமாக சோலாரை நம்பி இருக்கும் நிலைக்கும் வந்து விட்டனர். சோலார் தகடுகள் சுற்றுச்சூழலுக்கும் மிக உகந்தது என்பது இதன் கூடுதல் சிறப்பு. இதற்காக ஒருமுறை பணத்தை முதலீடு செய்துவிட்டால் போதும், குறைந்தது இருபது வருடங்களுக்கு வீட்டின் மின்சாரத் தேவை குறையும். ஏற்கெனவே வீடு கட்டியவர்கள் இதற்குத் தனியாக பட்ஜெட் அமைப்பது சிறந்தது. புதிதாக வீடு கட்டுபவர்கள் சோலாருக்கும் சேர்த்து திட்டம் அமைத்தால் கூடுதல் செலவைக் குறைக்கலாம். எதிர்கால மின் தேவையையும், செலவாகும் பணத்தையும் கணக்கிட்டால் சோலார் ஓர் எளிதான விஷயமாகவே தோன்றும். வீடுகளில் சோலார் தகடுகளை மொட்டைமாடிகளிலோ அல்லது தரைதளங்களிலோ மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்பது பெரும்பாலோனோர் நினைக்கலாம். ஆனால், உங்கள் வீட்டின் ஜன்னல்கள், வீட்டுக் கூரைகள், தாழ்வாரங்கள் உள்ளிட்ட பல இடங்களில் சோலார் தகடுகளை அமைக்கலாம்.

வீட்டின் மேற்புறம் சோலார் தகடுகள்:

Sponsored


Sponsored


வீட்டின் மாடியில் மூன்று கிலோ வாட்டில் சோலார் தகடுகளை அமைக்கலாம். தகடுகளை நிறுவ ஆகும் செலவு சுமார் 4 லட்சம் . சோலார் தகடுகளிலிருந்து சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றி வீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேட்டரிகளில் சேமித்து பின்னர் அந்த மின்சாரத்தைத் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். வீடுகளில் பயன்படுத்தும் மின்சாதன பொருள்கள் குறைந்தளவில் மின்சாரத்தை உறிஞ்சுவதாக இருக்க வேண்டும். இதேபோல வீடுகளில் பயன்படுத்தும் பல்புகளும் குறைந்த வாட்ஸ் உள்ள பல்புகளாக இருக்க வேண்டும். வீட்டிலுள்ள மைக்ரோவேவ் ஓவன் மற்றும் வாட்டர் ஹீட்டர் என உயர்தர தேவைகளைக் குறைத்தால் சோலார் தகடுகள் மூலம் வீட்டுக்கு முழுமையான மின்சாரம் வழங்க முடியும் என்பது சாத்தியம்தான். சரியாக ஒரு கிலோவாட் உற்பத்தி செய்ய சோலார் தகடுகளை, பேட்டரியுடன் அமைக்க சுமார் ஒன்றரை லட்சம் வரை செலவாகும். ஆனால், இந்தச் செலவை அரசுக்குச் செலுத்தும் மின் கட்டணத்தோடு ஒப்பிட்டால் சோலார் மின்சாரத்தில் முதலீடு செய்த பணத்தை விரைவாகவே திரும்ப எடுத்து விடலாம். அதேபோல, சோலார் தகடுகள் பொருத்திய பின்னர் தேவையில்லாமல் விளக்குகள் எரிவதையும், தேவையில்லாத மின்சாதன பயன்பாடுகளைக் குறைவாக அமைப்பது நல்லது. ஒரு கட்டத்துக்குப் பிறகு, அரசுக்குச் செலுத்தும் மின்சாரக் கட்டணம் மிச்சம்தானே. ஆனால் முறையான கண்காணிப்பும் மிக முக்கியம்.

வீட்டின் ஜன்னல்களில் சோலார்:

சந்தையில் புதிதாக களமிறங்கியிருக்கும் கருவியின் பெயர் 'சோலார் கேப்ஸ்'. வீட்டிலுள்ள சாதாரண ஜன்னல்களைத் தவிர்த்து, பிளிப் டைப் ஜன்னல்களில் இக்கருவியைப் பொருத்தலாம். சூரிய ஒளி படும் இரண்டு திசைகளிலும் சோலார் கேப்ஸ் கருவியை அமைத்தால் கூடுதல் சிறப்பு. இந்தக் கருவியைப் பயன்படுத்தும்போது, வழக்கமாக நீங்கள் செலவழிக்கும் மின்சார செலவில் 70 சதவிகிதம் குறையும். இதை உக்ரைனைச் சேர்ந்த எவ்கன் எரிக் என்பவர் இந்தக் கருவியைக் கண்டுபிடித்துள்ளார். சோலார் கேப்ஸ் மூலம் 10 சதுர அடிக்கு 100 வாட்ஸ் மின்சாரம் தயாரித்துக்கொள்ள முடியும். மின்சாதனங்களைப் பொறுத்தவரையில் 10 சதுர அடியில் மொத்தம் 30 எல்.இ.டி பல்புகளுக்கு தேவையான மின்சாரம் தயாரிக்க முடியும். இந்த சோலார் செல்கள் 25 வருடங்கள் சூரிய ஒளியைச் சேமிக்கும் பணியைச்  செய்யும். அதற்குமேல் சூரிய ஒளி சேமிப்பது பராமரிப்பதைப் பொறுத்து அமையும். இக்கருவி, மைனஸ் 40 டிகிரியிலிருந்து 176 டிகிரி பாரன்ஹிட் என எல்லாப் பருவநிலை மாற்றத்துக்கும் ஏற்றார்போல செயல்படும். தற்போது அறிமுகமாகியுள்ள சோலார் கேப்ஸ், வழக்கத்திலுள்ள சோலார் பேனல்களை விட அதிகமான சூரிய ஒளியைச் சேமித்து வைக்கும்.

வீட்டின் மேற்புறம் சோலார் ஓடுகள்:

கடந்த மாதம் எலான் மஸ்க், சூரிய ஒளியில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கூரை ஓடுகளை அறிமுகம் செய்தார். இந்த வகை சோலார் தகடுகள், மற்ற சோலார் தகடுகளைக் காட்டிலும் சற்று வித்தியாசமானது. இந்த ஓடுகள் பார்ப்பவர்களுக்கு சாதாரண வீட்டு ஓடுகளைப் போல விதவிதமான தோற்றத்திலிருக்கும். ஆனால் அந்த ஓடுகளின் கீழ்புறமுள்ள சூரிய ஒளித்தகடுகள் சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றும் வேலையை மேற்கொள்ளும். இதனால், வீட்டின் மேற்புறம் அழகியலும், கீழ்புறம் மின்சாரம் என இரண்டு பயன்களும் ஒரு மேற்கூரை ஓட்டின் மூலமாகக் கிடைக்கும். சாதாரணமாக நான்கு அறை கொண்ட வீட்டின் மேற்கூரையில் பொருத்தும்போது 24 மணிநேரமும் மின்சாரம் கிடைத்துக் கொண்டே இருக்கும். மற்ற சோலார் தொழில்நுட்பத்தின்படி, பெறப்பட்ட மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து பின்னர் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். "இந்தக் கூரை ஓடுகள் குவார்ட்ஸ் கண்ணாடிகளால் ஆனது. ஆனால், அலங்கார ஓடுகளைவிட இதன் விலை குறைவு" என எலான் மஸ்க் சமீபத்தில் உறுதியளித்தார். இருந்தும் சூரிய ஓடுகளின் விற்பனை 2018 ஆம் ஆண்டு வரையிலும் முன்பதிவு முடிந்து விட்டது.

அதேபோல பெரிய பெரிய பண்ணை வீடுகளாக இருந்தால் வீட்டுக்கு வெளியிலுள்ள விளக்குகளுக்கு ஒரு பல்புக்குப் பொருத்தமான சோலார் தகடுகள் கிடைக்கிறது. அதுபோல சிறுசிறு தகடுகளை வாங்கி பொருத்திக் கொள்ளலாம். இதைப் பயன்படுத்தும்போது, மின்சார செலவு முற்றிலும் குறையும். இப்படி வீடுகளில் செய்வதை அலுவலகங்களிலும், செய்ய முன்வந்தால் மின்சார செலவு மூன்றில் ஒரு பங்காகக் குறையும். இவ்வாறு வீட்டில் சோலார் பயன்பாடுகளை அதிகரிப்பதால் பணம் வீணாவதும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறையும்.



Trending Articles

Sponsored