24*7 கண்காணிப்பு... துப்பாக்கிச்சத்தம் கேட்டால் போலீஸுக்கு அலெர்ட்! #ShotSpotter



அமெரிக்கா. உலகம் முழுவதும் இருக்கும் பல நாட்டினரும் செல்ல விரும்பும் ஒரு நாடு. அங்கேயே செட்டில் ஆக வேண்டும் என்பதும் பலரது கனவுதான். ஆனால், துப்பாக்கி கலாசாரம் பரவலாக இருக்கும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. சின்னச் சின்ன சண்டைகளுக்கு கூட துப்பாக்கிகள் விளையாடும் தேசம் அது. பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்பத்திலும் கில்லியான அமெரிக்கா இதற்கு எதாவது செய்ய வேண்டாமா? செய்திருக்கிறது.

Sponsored


பொதுவாக, ஓரிடத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தால் அவசர உதவி எண் ஆன 911க்கு யாராவது அழைப்பார்கள். அதன்பின் போலீஸ் அங்கே செல்லும். குற்றம் நடந்தபின் அங்கே வருவதால் பெரிதாக எந்த உதவியும் இல்லை. உயிரைக் காப்பாற்ற முடியாவிட்டாலும், குற்றவாளிகளைப் பிடிப்பது அவசியம். அதுவே குற்றங்கள் குறைய உதவக்கூடும். ஆனால், நேரம் கடந்தபின் வருவதால் அதுவும் சாத்தியமாவதில்லை. துப்பாக்கிச்சூடு நடந்த சில நிமிடங்களில் போலீஸ் அங்கே வர வேண்டுமென்றால், அதற்கு என்ன தேவை என்பதை ஆராய்ந்து 2010-ம் ஆண்டு ஒரு டெக்னாலஜியை கொண்டு வந்தார்கள். அதுதான் ஷாட்ஸ்பாட்டர்(ShotSpotter)

Sponsored


ஷாட்ஸ்பாட்டர் என்பது ஒலியைப் பதிவு செய்து அலெர்ட் செய்யும் ஒரு சிஸ்டம். சிசிடிவி கேமராக்கள் இருப்பது போலவே, குற்றங்கள் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படும் அனைத்து இடங்களிலும் ஷாட்ஸ்பாட்டர் பொருத்தி இருக்கிறார்கள். சிசிடிவி கேமராக்களில் ஒலி சரியாக பதிவு ஆகாது. ஆனால், ஷாட்ஸ்பாட்டர் துல்லியமாகப் பதிவு செய்யும். மூன்று மைக்ரோபோன் கொண்டு, எந்த இடத்தில் துப்பாக்கி சத்தம் கேட்டது என்பதை மிகச்சரியாக கணிக்கிறது ஷாட்ஸ்பாட்டர். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் என்பதை அதுவே உறுதி செய்து அடுத்த நொடி அந்தத் தகவலையும், சம்பவம் நடக்கும் இடத்தையும் துல்லியமாக போலிஸூக்கு அனுப்பிவிடும். ரோந்துப் பணியில் இருக்கும் போலிஸூக்கும் மொபைல் மூலம் தகவல் போகும் என்பதால் அடுத்த சில நிமிடங்களிலே போலீஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வர முடியும். இதனால், குற்றவாளிகளைப் பிடிப்பது கொஞ்சம் எளிதாகும்.

Sponsored


90 அமெரிக்க நகரங்களில் ஷாட்ஸ்பாட்டர் பொருத்தப்பட்டிருக்கின்றன. சில வழக்குகளில், துப்பாக்கி வெடித்த இடத்தில் இருந்து 11 அடி தூரத்தில் போலீஸ் இருந்திருக்கிறார்கள். ஷாட்ஸ்பாட்டர் உதவியுடன் பலரது உயிரையும் காப்பாற்றியிருப்பதாக சொல்கிறது அமெரிக்க போலீஸ்.

அமெரிக்காவில் தொடர்குற்றங்கள் அதிகம். துப்பாக்கி கிடைத்தால் வரிசையாக சுட்டுக்கொண்டே செல்வார்கள் குற்றவாளிகள். ஷாட்ஸ்பாட்டர் அது போன்ற குற்றங்களை தடுக்க உதவும். குற்றங்கள் அதிகமாக எங்கு நடக்கின்றன என்ற தகவலையும் தந்து, அங்கே கூடுதல் கவனம் செலுத்த உதவி செய்யும். 

ஆனால், ஷாட்ஸ்பாட்டர் உதவியுடன் போலீஸால் அதிக குற்றவாளிகளைப் பிடிக்க முடிந்ததில்லை என்ற தகவலை ஃபோர்ப்ஸ் இணையதளம் பகிர்ந்திருக்கிறது. உடனடியாக அலெர்ட் வந்தது உண்மைதான். அதனால் குற்றவாளிகளைப் பிடிக்க முடிந்ததா என்ற கேள்விக்கு, டேட்டாக்கள் தரும் விடை இல்லையென்பது தான் என்கிறது ஃபோர்ப்ஸ்.

குற்றவாளிகளை பிடிப்பது இரண்டாம்பட்சம்தான். சம்பவம் நடந்த சில நிமிடங்களில் போலீஸ் விரைகிறது என்பது அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும். அதுதான் முக்கியம் என்கிறார்கள் ஷாட்ஸ்பாட்டர் பயன்படுத்தியவர்கள். இந்த டெக்னாலஜியை இன்னும் கொஞ்சம் மெருகேற்ற வேண்டியிருக்கிறது. அது நடந்துவிட்டால், குற்றவாளிகளை பிடிப்பதும் நடக்கும் என்கிறார்கள்.

இன்னமும் கரகர வாக்கி டாக்கியுடன் இருக்கும் நம்ம ஊர் காவலர்களும் டெக்னாலஜியை கையில் எடுக்க வேண்டும். ஏனெனில், குற்றவாளிகள் அவர்களைவிட வேகமாக டெக்னாலஜியில் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தம்.



Trending Articles

Sponsored