விலையேறும் மின்சாரம்.. விதிவிலக்கான சோலார்! #RenewableEnergy



சோலார் மின்சக்தியின் பயன்பாட்டை குறித்து நாம் பார்க்காத விளம்பரங்களில்லை. புதைபடிவ எரிபொருளால் ஏற்படும் சுற்றுப்புற மாசு மற்றும் சுகாதாரக்கேடுகளை முன்வைத்து, சோலார் மற்றும் காற்றாலை மின்சாரம் அதற்கான மிக சரியான மாற்று என்பது போன்ற பல ஆய்வுக்கட்டுரைகள் வலம் வந்தபடிதான் இருக்கின்றன. அரசாங்கமும் சோலார் மின்சக்தியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக அவ்வப்போது பல சலுகைகளை அறிவித்துக்கொண்டுதான் இருக்கின்றது. இத்தருணத்தில் வரவேற்கத்தக்க வகையில் வந்திருக்கிறது இந்த நற்செய்தி!

Sponsored


குறைந்தது விலை

முற்றிலும் புதுப்பிக்கத்தக்க எரிபொருள்கள் பற்றிய செய்திகளை வழங்கும் க்ரீன்டெக் மீடியா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் இனி சோலார் சக்தியில் மின்சாரம் உற்பத்திச் செய்ய முன்பை விட மிகவும் குறைந்த செலவே ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. உலகெங்கும் சோலார் சக்தியை உற்பத்திச் செய்ய நிறுவப்படும் கட்டமைப்பிற்கான விலை அதிரடியாக குறைந்துள்ளதால் சோலார் மின்சக்தி என்பது கூடியவிரைவில் அனைவருக்கும் ஏற்றபடியான விலையில் தயாரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sponsored


இந்தியாவில் எவ்வளவு?

இந்தியாவை பொறுத்தவரை, தற்போதைய நிலவரப்படி ஒரு வாட் மின்சக்தியை சோலார் மூலம் உருவாக்க ஆகும் செலவு வெறும் $0.65, அதாவது வெறும் 42 ரூபாய்! இதன்படி கணக்கிட்டுப் பார்த்தால் உலகிலேயே இந்தியாவில்தான் குறைந்தபட்ச விலையில் இனி சோலார் மின்சக்தி தயாராகும். ஆய்வாளர்களின் கூற்றுப்படி இவ்விலை மேலும் குறையவும் நிறைய வாய்ப்புகள் உள்ளது. மேலும், உலக சந்தையைப் பொறுத்தவரை, சராசரியாக வருடத்துக்கு 4.4% சோலார் மின்சக்தியின் விலை குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி 2022-ம் வருடம் இப்போது இருக்கும் இந்த குறைந்தபட்ச விலையிலிருந்து மேலும் 27% வரை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sponsored


இது ஆரோக்கியமான விஷயமா?

கிரீன்விச் மீடியாவின் ஆய்வாளர் பென் கள்ளகர் கூறுகையில், "இந்த விலைகுறைப்பு முழுக்க முழுக்க சோலார் மின்சக்தி உற்பத்திச் செய்ய பயன்படும் மூலப் பொருட்களின் விலை குறைப்பு மட்டுமல்ல, இன்வெர்ட்டர்கள், ட்ராக்கர்கள் உட்பட ஊதிய செலவுகளும் இதில் அடக்கம் என்று கூறப்படுகிறது. இதனால் இந்தியா போன்ற நாடுகளில் குறைந்தபட்ச ஊதிய செலவுகள் மற்றும் விலைகுறைந்த மூலப் பொருட்கள் கொண்டுத் தயாரிக்கப்படும் பட்சத்தில் அதன் தரம் மற்றும் ஆயுள் எப்படியிருக்கும் என்பதுபோன்ற கேள்விகளுக்கு வழிவகுக்கிறது," என்றார்.

ஆனால் மறுபுறம், பிரதானமாகவே, இந்த விலை குறைப்பு புதுப்பிக்கத்தக்க எரிபொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது சுற்றுப்புறத்திற்கேற்ற மின்சக்தி உற்பத்தி செய்யும் முறை பொருளாதார அடிப்படையிலும் ஆரோக்கியமான ஒன்றாக மாறிவிட்டதால் நிச்சயம் இதுவரை சோலாரை வெறுத்தவர்களும் அதைப்  பயன்படுத்தத் தொடங்க நிறையவே சாத்தியக்கூறுகள் உள்ளது.

இந்தியா என்ன செய்யவேண்டும்?

இப்போது சோலார் மின்சக்தி உற்பத்தியை பொறுத்தவரை, சீனாவுக்கும், ஜெர்மனிக்கும்தான் போட்டியே. சோலார் அதிகமாக பயன்படுத்தும் நாடுகளில் முதல் 10 இடங்களில்கூட இந்தியா இல்லை! ஆனால், இப்போதிருக்கும் புதிய நிலைப்படி, சீனாவிலேயே ஒரு வாட் சோலார் மின்சக்தி தயாரிக்க இந்தியாவை விட அதிக செலவாகுமாம்! இதனால் இப்போது குறைந்திருக்கும் உற்பத்திச் செலவை வைத்து, சரியான முறையில் அரசு மேலும் பல நலத்திட்டங்கள் வழங்கும் பட்சத்தில் நாம் சோலார் மின்சக்தியில் அசைக்க முடியாத இடத்தை நிச்சயம் பிடிக்க முடியும்!

இருந்தாலும், சோலார் சக்தியை வீட்டில் பயன்படுத்தினால், அதற்கென தனி மீட்டர் பொருத்த வேண்டும். ஆனால், அந்த  மீட்டரை சரியான நேரத்தில் கொடுத்து உதவாமல் மின்சார வாரியம் அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அரசு அதை கவனத்தில்கொள்ள வேண்டும்.



Trending Articles

Sponsored