4ஜி உண்டு... வாட்ஸ்அப் கிடையாது..! ஜியோ போன் சாதிக்குமா... சறுக்குமா?



Sponsored



"அடுத்த 12 மாதங்களில் இந்தியாவின் 99 சதவிகித மக்கள்தொகைக்கு ஜியோவின் சேவைகள் வழங்கப்படும்" - ஜியோ போன் அறிமுகத்துக்குப்பிறகு, ரிலையன்ஸ் நிறுவனத்தின் 40-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி பேசிய வார்த்தைகள் இவை.

தற்போது 12.5 கோடிப்பேர் ஜியோவின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். இலவச அழைப்புகள், 4ஜி டேட்டா, குறைந்த விலைக்கு பிளான்கள் என ஜியோ அறிவித்த அத்தனை சலுகைகளும் டெலிகாம் சந்தையில் ஹிட் அடித்தன. டெலிகாம் சந்தையில் ஜியோவின் போட்டியைச் சமாளிக்க, போட்டி நிறுவனங்களும் தங்கள் சேவைகளில் மிகப்பெரிய விலைக்குறைப்பு செய்தன. மிகக்குறுகிய காலத்துக்குள் இந்தியாவின் நம்பர்-1 டெலிகாம் நிறுவனமாக ஜியோ மாறியிருக்கிறது. அடுத்தக் கட்டமாக, குறைந்த விலையில் 4ஜி மொபைல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

Sponsored


'இந்தியாவின் ஸ்மார்ட்போன்' என்ற விளம்பரத்தோடு வரும் ஜியோ போன், பெரும் வெற்றிபெறும் என்பது ஜியோ நிறுவனத்தின் கணிப்பு. சாதா ஃபோனுக்கும், ஸ்மார்ட்ஃபோனுக்கும் இடைப்பட்ட வசதிகள் கொண்டதாகத்தான் ஜியோ போன் பார்க்கப்படுகிறது. 4ஜி வசதியுடைய மலிவு விலை மொபைல் போன் என்பது இதன் மிகப்பெரிய பிளஸ். கிராமப்புறங்களிலும் இதனால் 4ஜி வசதி சென்றடையும். இந்தியாவில் தற்போது 78 கோடிப்பேர் மொபைல் போன் பயன்படுத்தினாலும், அவர்களில் 50 கோடிப்பேர் 2ஜி நெட்வொர்க் கொண்ட சாதாரண மொபைல் போன்தான் பயன்படுத்துகின்றனர். இதனால் ஜியோ போன் டெலிகாம் சந்தையில் நிச்சயம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ஸ்மார்ட்போனுடன் ஜியோ வழங்கும் டேட்டா ஆஃபர்களும் நிறைவாகவே இருக்கின்றன.

Sponsored


வாய்ஸ் கமாண்ட் மூலம் கால் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவது, இணையத்தில் தேடுவது, ஆபத்து நேரங்களில் SOS மெஸேஜ் மூலம் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பும் வசதி போன்றவை இதன் சிறப்பம்சங்கள். ஜியோ டிவி உள்ளிட்ட ஜியோவின் அப்ளிகேஷன்கள் ப்ரி-லோடு செய்யப்பட்டு வருகின்றன. இவை தவிர்த்து, 22 இந்திய மொழிகளையும் ஜியோ போன் சப்போர்ட் செய்கிறது.

ஜியோ போனின் ஹார்டுவேர் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், இதில் குவால்கோம் நிறுவனத்தின் 205 பிராஸசர் (மொபைல் பிளாட்ஃபார்ம்) தான் பயன்படுத்தப்படவிருக்கிறது. குவால்கோம் நிறுவனம் சமீபத்தில் இதை அறிவித்தது. இந்த பிராஸசர் பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில் கீழ்க்காணவிருக்கும் வசதிகள் இடம்பெறாது என்பதால், ஜியோ போனிலும் இவை இருக்காது.

ஆண்ட்ராய்டு :

இந்திய மொபைல் போன் சந்தையில் தற்போது ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருப்பவை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் தாம்! ஆனால் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்திருக்கும் ஜியோ போனில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் இருக்காது. காரணம் குவால்கோம் 205 பிராஸசர் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை சப்போர்ட் செய்யாது. லினக்ஸ் அல்லது ஃபயர்பாக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் மட்டுமே ஜியோ போனில் இருக்கப்போகிறது.

வாட்ஸ்அப் :

இந்தியாவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட அப்ளிகேஷனான வாட்ஸ்அப், ஜியோ போனில் இடம்பெறாது. விண்டோஸ், சிம்பியன் போன்ற ஆபரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தும் பழைய மொபைல்களுக்கான சப்போர்ட்டை ஆண்ட்ராய்டு கடந்த ஜூன் மாத இறுதியோடு நிறுத்தியது நினைவிருக்கலாம். ஸ்மார்ட்போன் என அழைக்கப்பட்டாலும், ஜியோ போனில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாதென்றால், அது மிகப்பெரிய குறையாகத்தான் பார்க்கப்படும்.

டச் ஸ்க்ரீன் :

ஃப்ளாக்‌ஷிப் கில்லர் என்றழைக்கப்படும் அதிக வசதிகளுடன் குறைந்த விலைக்குக் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்தான் தற்போது மொபைல் போன் சந்தையைக் கலக்கிக்கொண்டிருக்கின்றன. இவை பெரும்பாலும் டச் ஸ்க்ரீன் வசதியைக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஜியோ போனில் டச் ஸ்க்ரீன் வசதி கிடையாது. அதோடு பேஸிக் மொபைலில் இருக்கும் பட்டன் கீபோர்டுதான் இதில் இடம்பெற்றிருக்கிறது.

ஹாட்ஸ்பாட் :

ஜியோ போனில் 4ஜி வசதி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். பொதுவாக 4ஜி வசதி இருக்கும் மொபைல் போன்களில் இருந்து ஹாட்ஸ்பாட் மூலமாக மற்ற டிவைஸ்களிலும் இணையத்தைப் பயன்படுத்த முடியும். ஆனால், ஜியோ போனில் ஹாட்ஸ்பாட் வசதி இல்லை என்றே செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இதனால் ஜியோ போன் தவிர்த்து பிற மொபைல்களுடன் ஹாட்ஸ்பாட் மூலமாக இணையத்தைப் பயன்படுத்த முடியாது.

4ஜி சேவை, மலிவு விலை, வாய்ஸ் சர்ச் போன்ற வசதிகள் இருந்தாலும், ஸ்மார்ட்போனுக்கான பிற வசதிகள் இதில் குறைவு. ஆனால் தற்போது 50 கோடிக்கும் மேற்பட்டோர் 2ஜி நெட்வொர்க்தான் பயன்படுத்துகின்றனர் என்பதால், இந்திய மொபைல் சந்தையில் ஜியோ போன் புதிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கலாம்.



Trending Articles

Sponsored