ரான்சம்வேரிலிருந்து உலகைக் காப்பாற்றிய இளைஞரை அமெரிக்கா கைது செய்தது ஏன்? #RansomwareSponsoredஇங்கிலாந்தைச் சேர்ந்த 'சைபர் அட்டாக் ஹீரோ' மார்கஸ் ஹட்சின்ஸ் (Marcus Hutchins) அமெரிக்காவில் கைது செய்யப்பட்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன், உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியான வான்னாக்ரை ரான்சம்வேர், மேலும் பரவாமல் தடுத்ததில் இவரின் பங்கு மிக முக்கியமானது.

வான்னாக்ரை :

Sponsored


கணினிகளைத் தாக்கி தீங்கு ஏற்படுத்தும் மென்பொருள்களை மால்வேர் என்றழைப்பார்கள். இந்த மால்வேரில் பல வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் ரான்சம்வேர். வான்னாக்ரை என்ற ரான்சம்வேர் ஐரோப்பிய நாடுகளிலிருந்து, இந்தியா உள்ளிட்ட சுமார் 150 நாடுகளுக்குப் பரவியது. ஆந்திர காவல்துறை உள்ளிட்ட பல அரசுத்துறைகளில் இருந்த கணினிகளும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகின. திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த கணினிகளையும் இந்த ரான்சம்வேர் விட்டுவைக்கவில்லை. உலகம் முழுவதும் சுமார் 2,30,000 கணினிகள் இந்த ரான்சம்வேரால் பாதிப்புக்கு உள்ளானதாக நம்பப்படுகிறது. இதுவரை நிகழ்ந்த சைபர் அட்டாக்குகளிலேயே, வான்னாக்ரை ரான்சம்வேர் தாக்குதல்தான் மிக மோசமானது என டெக் வல்லுநர்கள் கருதுகின்றனர். இமெயில் மூலமாகப் பரவிய இந்த ரான்சம்வேரானது, கணினியில் உள்ள தகவல்களை என்கிரிப்ட் செய்துவிடும். இதனால் பயனாளர்களால் கணினியில் உள்ள எந்தவிதமான தகவல்களையும் அக்சஸ் செய்யமுடியாமல் போகும்.

Sponsored


தகவல்களை மீண்டும் பெறவேண்டுமென்றால், வான்னாக்ரை ரான்சம்வேரைப் பரப்பிய ஹேக்கர்களுக்கு பிட்காயின் என்ற கிரிப்டோகரன்ஸி மூலமாகப் பயனாளர்கள் பணம் செலுத்தவேண்டும். கணினி பாதிப்புக்குள்ளான முதல் மூன்று நாள்களுக்குள் 300 டாலர்களையும், அதற்குள் பணத்தை செலுத்தாவிட்டால் ஒரு வாரத்துக்குள் 600 டாலர்களையும் பிட்காயின் மூலமாகப் பணம் செலுத்த வேண்டும். இந்தக் கால அவகாசத்தைத் தாண்டியும் பணத்தை செலுத்தாவிட்டால், கணினியில் உள்ள மொத்தத் தகவல்களும் டெலீட் செய்யப்பட்டுவிடும். பிட்காயினாகப் பணம் செலுத்தினால் பணம் பெறுபவரின் விவரங்களை அறியமுடியாது. கடந்த சில வருடங்களாக ரான்சம்வேர் தாக்குதல் அதிகரித்துவருவதாகவும், ஹேக்கர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாகவும் சமீபத்தில் கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது.

ரான்சம்வேரைத் தடுத்து நிறுத்திய மார்கஸ் :


வான்னாக்ரை ரான்சம்வேர் இணையத்தில் பரவத் தொடங்கியதும், பல தொழில்நுட்ப வல்லுநர்கள் அதைத்தடுக்கும் வேலைகளில் இறங்கினர். அவர்களில் ஒருவர்தான் 'மால்வேர்டெக்' என்ற இணையதளத்தை நடத்திவரும் இங்கிலாந்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் மார்கஸ் ஹட்சின்ஸ். இவரால்தான் வான்னாக்ரை மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. இல்லாவிட்டால், உலகம் முழுவதும் ரான்சம்வேரினால் மேலும் பெரிதளவு சேதம் ஏற்பட்டிருக்கும். ரான்சம்வேரைப் பரப்பிய ஹேக்கர்கள், கடிவாளம் தங்கள் கைகளில் இருக்க வேண்டுமென நினைத்தனர். 23 கேரக்டர்கள் கொண்ட ஓர் இணையதள முகவரி ஆக்டிவேட் செய்யப்பட்டால், ரான்சம்வேர் மேலும் பரவக்கூடாது என்பதற்கேற்ப கோட் எழுதியுள்ளனர். இதை 'கில் ஸ்விட்ச்' என்பார்கள். இதைக்கண்டறிந்த மார்கஸ், அந்த இணையதளத்தைத் தனது பெயரில் பதிவுசெய்து ஆக்டிவேட் செய்தார். இதனால் வான்னாக்ரை ரான்சம்வேர் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. உலகம் முழுவதிலுமிருந்து இவருக்குப் பாராட்டுகள் குவிந்தன. சைபர் அட்டாக் ஹீரோ என இணையத்தில் பலராலும் இவர் கொண்டாடப்பட்டார். நிறைய நிறுவனங்கள் இவரது செயலைப் பாராட்டி அனுப்பிய சன்மானத்தை, சேவை நிறுவனங்களுக்கு நன்கொடையாக மார்கஸ் அளித்தார்.

அமெரிக்காவில் கைது :

சைபர் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரத்துக்கு அவர் சென்றிருந்தார். இதை முடித்துவிட்டு லண்டன் திரும்புவதற்காக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தபோது, அமெரிக்க மத்தியப் புலனாய்வு அமைப்பால் (FBI) மார்கஸ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

க்ரோனாஸ் (Kronos) என்ற வங்கித்துறை தொடர்பான மால்வேரை உருவாக்க உதவியது, பரவ உதவியது உள்ளிட்ட ஆறு புகார்களின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் மார்கஸ். 2014-ம் ஆண்டு இமெயில் மூலம் பரவிய இந்த மால்வேர், நெட்பேங்கிங் பாஸ்வேர்ட் உள்ளிட்ட தகவல்களைத் திருடிவிடும். அதன்பின் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து பெருமளவில் பணம் திருடப்பட்டிருக்கிறது. இதை உருவாக்கி மற்றொரு நபரிடம் மார்கஸ் விற்றுவிட்டதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு குற்றம் சாட்டியிருக்கிறது. பின்னர் கறுப்புச் சந்தையில் இந்த மால்வேர் 2,000 டாலர்கள் மதிப்புக்கு மற்றொரு நபரால் விற்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மார்கஸை கைதுசெய்து விசாரித்துவருகிறது அமெரிக்க புலனாய்வு அமைப்பு. இந்தச் சம்பவம் மார்கஸ் ஹட்சின்ஸ் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசன் சொல்லும் வசனம்போல... இந்தக்கதையில் மார்கஸ் தான் ஹீரோ... மார்கஸ் தான் வில்லனும்கூட!

.Trending Articles

Sponsored