`கண்டியுங்கள், ஆனால், நம்பிக்கை வையுங்கள்’ - அம்மா - மகள் ரிலேஷன்ஷிப் அழகாக...!`அம்மா மட்டும் இல்லைன்னா நான் என்னவாகியிருப்பேன்?' என்று இப்போதெல்லாம் அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன். எந்த ஓர் உறவின் அருமையும், பக்கத்தில் இருக்கும்போது தெரியாது. அது `தாய்' விஷயத்தில் இருநூறு சதவிகிதம் உண்மை. உங்களை கருவறையில் சுமப்பதிலிருந்து அவளை கல்லறைக்குக் கொண்டுசெல்லும் வரையிலான நாள்கள் எத்தனை? அதில் அவள் உங்களுக்காக கண் விழித்திருந்த நாள்கள், உங்களால் உறங்காமல் இருந்த நாள்கள், உங்களுடன் உணவருந்திய நாள்கள் எத்தனை என்பது யாரும் அறிந்திடாத ஒன்று.

தாய்-மகள் உறவு எவ்வளவு அற்புதமானது என்பதை, ஏனோ பலர் புரிந்துகொள்வதே இல்லை. சிலர் வீட்டில், வாரம் ஒருமுறை மட்டுமே தாயும் மகளும் பேசிக்கொள்வார்கள். இன்னும்சிலர், வீட்டில் வாரம் ஒருமுறைதான் பார்த்தேகொள்வார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான வாழ்க்கைமுறை. ஆனால், அம்மா-மகள் இடையே இருக்கும் அன்பு இன்றியமையாத ஒன்று. இவர்களின் உறவுகளில் இருக்கும் பிரச்னையும் அவற்றுக்கான தீர்வுகளையும் பார்ப்போம்...

Sponsored


Sponsored


கருவுற்ற நாளிலிருந்து தாயின் கடுமையான பயணம் ஆரம்பமாகிறது. நீங்கள் நலமாகப் பிறக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு வேலையையும் பார்த்துப் பார்த்து செய்தவள் அம்மா. நின்றால், நடந்தால், வீட்டுவேலைகள் செய்தால், உறங்கினால்... இப்படி எந்த வேலையைச் செய்தாலும், உங்கள் நலம் கருதி மட்டுமே அவளின் எண்ணம் இருக்கும். ஆனால் மகளோ, வளர்ந்து பதின்பருவதை அடைந்தவுடன் அம்மாவின் அக்கறைச் சொற்கள் அனைத்தும் எரிச்சல்மூட்டும்விதமாகத் தோன்றி தாயின் மனம் புண்படும்படி பேசிவிடுகிறாள். மகள் நலனிலான அக்கறையை, தாயைவிட வேறு யாராலும் கொடுக்க முடியாது என்பதைப் புரியவைப்பது ஒவ்வோர் அம்மாவின் கடமை. 

Sponsored


தினமும் உங்கள் மகளுடன் அமர்ந்து அந்த நாளில் நடந்தவற்றை யாவும் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களின் பிரச்னைகள், தேவைகளை மனம்விட்டுப் பேசுங்கள். நாள்கள் செல்லச் செல்ல உங்களின் மகளும் உங்களிடம் அவளின் தேவைகள், எண்ணங்கள், பிரச்னைகள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வாள். ஒரு தோழிபோல் அவள் கூடவே பயணம் செய்யுங்கள். அன்றாட வாழ்வில் நடக்கும் எல்லா பிரச்னைகளையும் இருவருமாக நின்று எளிதில் எதிர்கொள்ள முடியும். 

அதில் முக்கியமான ஒன்று பாலியல் தொல்லைகள் பற்றிய விழிப்புஉணர்வு. தற்போதைய நிலையில் பெண் குழந்தைகளுக்கு இது மிகவும் அவசியமான ஒன்று. ஹாசினி தொடங்கி சமீபத்தில் பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளி சிறுமி வரை எத்தனை பாலியல் வன்கொடுமைகளுக்குள்ளாகின்றனர் நம் மென்மையான மலர்கள்.

இதற்கு ஒருவகையில் பெற்றோர்களின் கவனைக்குறைவும் ஒரு காரணம். அதிலும், தாய்க்கு அதிக பொறுப்புகள் இருக்கின்றன. நீங்கள் பார்த்துப்பார்த்து வளர்த்த அரும்புகளின் மேல் யாரும் கைவைக்காதபடி பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம். அதற்காக எந்நேரமும் அவர்கள் கூடவே இருக்க முடியாது. ஆனால், பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவேண்டியது ஒவ்வொரு தாயின் கடைமை.

தற்போது இருக்கும் அவசர உலகில் குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது என்பது அதிசயமான ஒன்று. காரணம், பணிச்சுமை. பெரும்பாலான வீடுகளில் மகள் சொல்லவருவதை காதுகொடுத்துக் கேட்க தாயால் முடிவதில்லை. ஆனால், பிரச்னை என்று வரும்போது பணிச்சுமைகளின்மேல் பழியைப் போட்டு என்ன பயன்? உறவு என்பது எல்லாவற்றுக்கும் மேலானது. ஏற்கெனவே சொன்னதுபோல வாழ்க்கைமுறை ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானது. ஆனால், அதை சரிவர கொண்டுசெல்ல நம்மால் மட்டுமே முடியும். புரிதல், பகிர்தல் இருந்தால் தாய்-மகள் உறவை அசைக்க யாராலும் முடியாது.

ஒவ்வொரு தாய்க்கும் தன் மகள் பதின்பருவத்தை அடைந்தவுடன், தேவையற்றக் கோபம், சந்தேகம், பதற்றம் போன்றவை நாளுக்குநாள் அதிகரிப்பது இயல்பானதுதான். ஆனால், அதை சத்தமாகப் பேசித் திட்டுவதால் மட்டும் சரியாகிவிடும் என நினைக்காதீர்கள். அதனால், இருவருக்குமே இடைவெளி அதிகமாகும். தாயின் அரவணைப்பு வேறொருவர் மூலம் மகளுக்குக் கிடைக்க அதிக வாய்ப்புண்டு (அது வெறும் கானல்நீர் என்பது அறியாத வயது அது). இது மேலும் பிரச்னையை அதிகரிக்கும். எனவே, மகளுக்குப் புரியும்படி பொறுமையாக எடுத்துச்சொல்லுங்கள். அவளின் கருத்துகளையும் காதுகொடுத்து கேளுங்கள். உங்கள் சிறகு முளைத்த வண்ணப்பறவையின்மீது அதிக நம்பிகை வையுங்கள். அதே சமயம் கண்காணிக்கவும் செய்யுங்கள். 

திருமணம் வரைதான் தாயின் அரவணைப்பு, மகளுக்குக் கிடைக்கும். திருமணத்துக்குப் பிறகுதான் தாயின் அருமை சில மகள்களுக்குப் புரியவே செய்கிறது. ஏகப்பட்ட கருத்துவேறுபாடுகள் நிறைந்த வாழக்கையில், தாயின் கருத்துகளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் மகள் தாய்மையடையும் நேரத்தில்தான் ஆரம்பாகிறது. ஆனால், அதே நேரத்தில் தாயை பாரமாக நினைக்கும் மகள்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வாழும் இந்தச் சொற்ப காலத்தில் தன்னை ஈன்றெடுத்தத் தாயை, மகளைத் தவிர வேறு யாரால் முழுமையாய் அரவணைக்க முடியும்? இது பெண்மைக்கே உரித்தான அறிய உணர்வு. அதை அனைத்து பெண்களும் உணர வேண்டும், உணர்வோம்!Trending Articles

Sponsored