பாசத்தின் விலை 10 டாலர்! ஒரு நெகிழ்ச்சிக் கதை! #FeelGoodStory`ன்பை விலை கொடுத்து வாங்க முடியாது; பாசத்துக்கு விலையே இல்லை’ என்கிறார் 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புனிதர் ஜெரோம் (St.Jerome). பாசம்... அன்னைக்குத் தொப்புள் கொடி உறவு; தந்தைக்குப் பெயர் பெற்றுத்தரும் பேறு; சகோதர, சகோதரிகளுக்கு ரத்த பந்தம். உண்மையான பாசம் வெளிப்படுத்தும் உணர்வு பிறரால் அறிந்துகொள்ள முடியாதது... அளவிட முடியாதது. அதை உணர்த்தும் கதை இது.

Sponsored


Sponsored


அவர் அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். அவருக்கும் அவருடைய ஒரே மகனுக்கும் அரிய ஓவியங்களை சேகரிப்பதுதான் முழுநேர, முக்கியமான வேலை. இருவரும் சேர்ந்து பிக்காஸோவின் ஓவியத்திலிருந்து இத்தாலியின் ரஃபேல் ஓவியம் வரை சேகரித்து வைத்திருந்தார்கள். இருவரும் அவ்வப்போது தாங்கள் வைத்திருக்கும் ஓவியங்கள் குறித்துப் பேசுவார்கள்; சிலாகிப்பார்கள்; மகிழ்வார்கள்; பார்த்துப் பார்த்து ரசிப்பார்கள். அந்தப் பணக்காரர், தன் மகனைப் பிரியவேண்டிய சந்தர்ப்பமும் ஒருநாள் வந்தது. அது வியட்நாம் போர். மகன் போருக்குப் போனான்.

Sponsored


அவன் மன உறுதியும் தைரியமும் கொண்டவன். போரில் தன்னுடனிருந்த சக வீரனைக் காக்கும் ஒரு போராட்டத்தில் அவன் உயிரை இழந்திருந்தான். இந்தத் தகவல் அவனுடைய அப்பாவுக்குச் சொல்லப்பட்டது. அவர் வேதனையில் கலங்கிப்போனார்... கண்ணில் நீர் வற்றும் வரை அழுது தீர்த்தார்.

ஒரு மாதம் கழிந்தது. அது ஒரு குளிர்கால மாதம். அவர் வீட்டின் கதவை யாரோ தட்டினார்கள். அவர் கதவைத் திறந்தார். வெளியே ஓர் இளைஞன் நின்றுகொண்டிருந்தான். அவனுடைய கையில் ஒரு பார்சல் இருந்தது.

அவன் சொன்னான்... ``ஐயா... உங்களுக்கு என்னைத் தெரியாது. நான் ஒரு போர் வீரன். என்னை உங்கள் மகன்தான் காப்பாற்றினான். என்னைப்போல எத்தனையோ வீரர்களை உங்கள் மகன் காப்பாற்றியிருக்கிறான். என் நெஞ்சில் பாயவேண்டிய துப்பாக்கிக் குண்டை தன் நெஞ்சில் வாங்கிக்கொண்டு உயிர்விட்டான். உங்களைப் பற்றியும், நீங்கள் சேகரித்துவைத்திருக்கும் அரிய ஓவியங்களைப் பற்றியும் அடிக்கடிப் பேசுவான். அது தொடர்பாகப் பேசுவதற்காகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். அதோடு உங்கள் மகனின் ஓவியத்தையும் நான் வரைந்திருக்கிறேன்...’’ என்ற அந்த வீரன், தன் கையிலிருந்த ஒரு பார்ஸலை எடுத்து அவரிடம் கொடுத்தான்.

அது மிக மிகச் சுமாரான ஓவியம். இறந்துபோன  அவருடைய மகனின் உருவத்தை வரைந்துகொண்டு வந்திருந்தான் அந்தப் போர் வீரன். ``சார்... உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் ஓவியத்தின் மேல் இருக்கும் பிணைப்பை நான் அறிவேன். இது, நானே உங்கள் மகனை வரைந்த ஓவியம்.. இதைப் பெற்றுக்கொள்ளுங்கள். நான் பெரிய ஓவியனில்லை. ஆனால், உங்கள் மகனுக்கு நிச்சயம் இது பிடித்திருக்கும்...’’ என்றான்.

அவர், அந்த ஓவியத்தை வாங்கிக்கொண்டார். அது ஒரு போர்ட்ரெய்ட் Portrait. அவருடைய மகனின் முகத்தை ஓவியத்தில் கொண்டுவருவதற்கான முயற்சி. அப்படித்தான் அதைச் சொல்ல வேண்டும். அதைப் பார்க்கப் பார்க்க அவர் கண்ணில் நீர் வழிந்தது.

``சரிப்பா... இந்த ஓவியத்துக்கு நான் என்ன தரணும்? எவ்வளவு பணம் வேணும்னாலும் கேளு..’’ என்றார் அவர்.

``ஐயய்யோ... இல்லை சார். உங்க மகன் எனக்கு செஞ்சதே ரொம்ப ரொம்ப அதிகம்... இது கிஃப்ட் சார்...’’ அந்த இளைஞன் கிளம்பிப் போனான்.

அவர், அந்த ஓவியத்தை வரவேற்பறையின் முக்கியமான இடத்தில் மாட்டிவைத்தார். அவர் வீட்டிலிருக்கும் ஓவியங்களைப் பார்க்க வருபவர்களுக்கெல்லாம், முதலில் அந்த ஓவியத்தைக் காட்டிவிட்டு, பிறகு மற்ற பிரபல ஓவியர்களின் ஓவியங்களைப் பார்க்க அழைத்துச் சென்றார். அதுவும் சில மாதங்கள்தான். அந்தப் பெரிய மனிதர் இறந்துபோனார்.

***

அவர் அத்தனை நாள்கள் சேகரித்துவைத்திருந்த ஓவியங்கள் ஏலத்துக்கு வந்தன. அவர் சேகரித்துவைத்திருந்த பிரபல ஓவியர்களின் அற்புதக் கலைப் படைப்புகளை வாங்க நிறையப் பேர் ஏலத்துக்கு வந்திருந்தார்கள். ஏலம் ஆரம்பமானது.

ஏலம் விடுபவர், முதலில் இறந்துபோனவரின் மகனின் ஓவியத்தை எடுத்தார்... ``இந்த ஓவியத்திலிருந்து ஆரம்பிப்போம்... யார் இதை ஏலம் கேட்கப் போகிறீர்கள்?” என்று ஆரம்பித்தார். அது அந்தப் போர்வீரன் வரைந்திருந்த சுமாரான ஓவியம்.

``ஏங்க... இதை வாங்குறதுக்கா நாங்க வந்திருக்கோம். முதல்ல புகழ்பெற்ற மத்த ஓவியங்களைக் காமிங்க...’’ ஒரு குரல் பின்னாலிருந்து கேட்டது.

ஏலம் விடுபவர் மறுபடியும் பேசினார்... ``சரி... இந்தப் பையனின் ஓவியத்தை 100 டாலரிலிருந்து ஏலம் ஆரம்பிக்கலாமா?’’

கூட்டத்திலிருந்து ஓர் ஆக்ரோஷமான குரல் ஒலித்தது... ``நாங்க இதை வாங்க வரலை. வான்கோ, ரெம்ப்ராண்ட்ஸ் ஓவியமெல்லாம் இருக்குமில்லை. அதை ஏலம் விடுங்க...’’

ஆனால், ஏலம் விடுபவர் சொன்னார்... ``சரி...இந்த மைந்தனின் ஓவியத்தை யார் வாங்கப் போகிறீர்கள்?’’

``இதெல்லாம் ஒரு ஓவியமா... தூக்கிப் போடுங்க அந்தப் பக்கம்...’’ இன்னொரு குரல் கோபமாக ஒலித்தது.

``இந்தக் குமாரனின் ஓவியத்தை யார்தான் விலைக்கு வாங்கப் போகிறீர்கள்? ஆரம்ப விலை 10 டாலர்...’’

கூட்டத்திலிருந்த ஒருவர்கூட அந்த ஓவியத்தை 10 டாலர் கொடுத்து வாங்க முன்வரவில்லை.

``இந்த மைந்தனின் ஓவியம் 10 டாலர் ஒரு தரம்...’’

அந்த ஏலத்துக்கு வந்திருந்தவர்கள் அந்த சுமாரான ஓவியத்தை வாங்க வரவில்லை. புகழ்பெற்ற ஓவியர்கள் வரைந்த ஓவியங்களை வாங்க வந்திருந்தவர்கள் அவர்கள்.

``பத்து டாலர் ரெண்டு தரம்...’’ ஏலத்துக்கு விடுபவர் குரல் பலத்து ஒலித்தது.

உட்கார்ந்திருந்தவர்களின் வரிசையைத் தாண்டி கடைசியில் நின்றிருந்த ஒருவரின் குரல் ஒலித்தது. அவர் அந்த வீட்டில் பல வருடங்களாகத் தோட்ட வேலை பார்ப்பவர். ``பத்து டாலர்... ‘’ அவரிடமிருந்த மொத்தப் பணமே அவ்வளவுதான்.

``பத்து டாலர் ஒரு தரம்... பத்து டாலர் ரெண்டு தரம்... பத்து டாலர் மூணு தரம்...’’ ஏலம் முடிந்தது... மொத்தமாக!

ஏலம் எடுக்க வந்திருந்தவர்கள் கொந்தளித்துப் பேச, ஏலம் விடுபவர் சொன்னார்... ``என்னை மன்னிச்சிருங்க... ஏலம் முடிஞ்சு போச்சு. நான் இந்த ஏலத்தைவிட வரும்போதே எனக்கு ஒரு உயிலைக் கொடுத்திருந்தாங்க. இந்த வீட்டோட சொந்தக்காரர் எழுதின உயில் அது. அவரோட மகனின் ஓவியத்தை யார் வாங்குறாங்களோ... அவங்களுக்கே இந்த வீடு, சொத்து, ஓவியங்கள் எல்லாம் போய்ச் சேரணும்னு அவர் எழுதிவெச்சிருக்காரு. அதனால... இந்தத் தோட்டக்காரருக்குத்தான் எல்லா சொத்தும்...’’

ஏலம்விடுபவர் சொன்ன வார்த்தைகளில் இன்னோர் அர்த்தமும் உண்டு. அவர், `மகன்... குமாரன்... மைந்தன்...’ என்றெல்லாம் அழைத்த பெயர் 2,000 வருடங்களுக்கு முன்னர் சிலுவை சுமந்த அந்த இயேசுபிரானுக்கும் பொருந்தும்தானே!

***Trending Articles

Sponsored