`` `திருடன் மணியன்பிள்ளை' நூலை திரைப்படமாக்கும் முயற்சியில் இருக்கிறேன்!"- கவிஞர் சாம்ராஜுடன் ஒரு நேர்காணல்Sponsoredஅவள் நைட்டி அணிந்ததில்லை 

`ஷேம் ஷேம் பப்பி ஷேம்' என்று சின்ன வயதில் ஓடியவள்...

எட்டு வயதில் முழங்காலுக்கு மேலான காயத்தை

Sponsored


அப்பாவுக்குக் காட்ட மறுத்தவள்...

Sponsored


உடை மாற்றும் அறைக்குள் அம்மாவைக்கூட‍ அனுமதியாதவள்...

எக்ஸ்ரே அறையிலிருந்து ஓடிவந்தவள்...

அருவிகளில் ஒருபொழுதும் குளிக்காதவள்...

வெளிச்சத்தில் கணவனுடன்கூட சம்மதியாதவள்...

மரித்தலுக்குப் பின்

அம்மணமாய்க் கிடக்கிறாள் மார்ச்சுவரியில்!

ஈக்களும் கண்களும் `அங்கேயே' மொய்க்க

இப்படியாகுமெனில் 

அன்புலட்சுமி தற்கொலையே செய்திருக்க மாட்டாள்!

இந்தக் கவிதை `என்றுதானே சொன்னார்கள்' என்ற சாம்ராஜின் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றது. அதே தொகுப்பில் இடம்பெற்ற கால்பந்தைப் பற்றிய கவிதையும் மிகச் சிறந்த கவிதை. ஒரு கவிதைத் தொகுப்பும், `பட்டாளத்து வீடு' என்கிற சிறுகதை தொகுப்பும், மலையாள சினிமாக்களில் பெரிதும் பேசப்பட்ட திரைப்படங்களில் சிலவற்றை அவற்றின் அரசியல் / கலாசாரப் பின்புலத்தோடு எழுதிய `நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்' என்கிற கட்டுரைத் தொகுப்பும் இவரது படைப்புகளாகும். சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில், காலை நேரத்தில் சந்தித்தேன். திறந்த ஜன்னலுக்கும் அடுக்கப்பட்ட புத்தகங்களுக்கும் இடையே அமர்ந்து இலக்கியம் மட்டுமல்லாது, பயணம், சினிமா, விருது குறித்து உரையாடினோம். கண்ணாடிக் கோப்பையின் கறுப்புத் தேநீரின் மிதமான சூடு அறையெங்கும் பரவியது. இனி உரையாடல்...

குடும்பம் பற்றி...

``அப்பா, சென்னையில் வருமானவரித் துறையில் இருந்தார். நான் அப்பா, அம்மாகூட வளரவில்லை. என்னுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். நால்வருக்கும் ஒரு வயது இடைவெளியே. பிறந்த முப்பதாவது நாளில் சென்னைக்கு என்னைத் தூக்கி வந்த சின்ன அம்மாச்சி, சூழலைப் பார்த்து மறுபடி என்னை மதுரைக்கே  தூக்கிக்கொண்டு போனார். பாட்டி-தாத்தா இருந்தவரை மதுரையில்தான் இருந்தேன். 15 வயதில் மறுபடியும் சென்னைக்கு வந்தேன். சென்னையில்தான் பத்தாவது. மறுபடியும் மதுரைக்குப் போனேன். வீட்டில் நான் மூன்றாவது பிள்ளை. இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி. தம்பி போரூர் ஏரியில் குளிக்கப்போனவன் மூழ்கி இறந்துவிட்டான். அதன் பிறகு எல்லோரும் மதுரைக்கு வந்துவிட்டார்கள். இப்போது என் இணையர்  சரோவோடும் மகன் ஆரண்யாவோடும் சென்னையில்.''

`` `பாட்டி வீட்டில் வளர்ந்தபோது அநாதைத்தன்மையோடு தனிமையில் வளர்ந்தேன்' என்று நீங்கள் சொல்லியதாகப் படித்திருக்கிறேன். அது என்னவிதத்தில் உங்களை ஆட்கொண்டிருந்தது?''

``தாத்தா-பாட்டி வீட்டில் வளரும் பிள்ளைகளுக்கு (எல்லோரும் அல்ல) இலக்கிய சம்பந்தம் உண்டாகிறது என்ற ஒரு யூகம் இருக்கு. இதை நிறுவ முடியுமா எனத் தெரியவில்லை. வயது முதிர்ந்தவர்கள் அல்லது ஏதோ ஒருவகையில் கனிந்தவர்களோடு வளரும் பிள்ளைகளுக்கு வேறு ஏதோ கிடைக்கிறது. நிச்சயமாக என் குழந்தைப்பருவத்தில் தாத்தா-பாட்டியிடையேயான சண்டையைப் பார்த்திருக்கேன். ஆனால், ரொம்ப உக்கிரமான மோசமான சண்டைகள் அல்ல. அப்பா-அம்மாவைவிட கூடுதலான அன்போடு என்னைப் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள்  தங்கள்  பிள்ளைகளை வளர்த்ததைவிட கூடுதலான அன்பும் கரிசனத்தோடும் என்னை வளர்த்ததாக நான் நம்புகிறேன். அது நுண்ணுணர்வுள்ள கூர்மைப்படுதலுக்குப் பயன்பட்டது. 

பெற்றோருடன் வளரும் பிள்ளைகளை சினிமாவுக்கோ வேறு எங்கோ கூட்டிக்கொண்டு போவார்கள். இதெல்லாம் எனக்கு இல்லவே இல்லை. நன்றாக ஞாபகம் இருக்கிறது, எனக்கு ஏழோ எட்டோ வயதிருக்கும்போது அழகர் ஆற்றில் இறங்கிய அன்று மொத்த தல்லாகுளமுமே ஆற்றுக்குப் போயிருந்தது. இரண்டாம் உலகப்போர் சமயத்துல காலி பண்ணிட்டுப் போன ஊர் மாதிரி ஒரு ஆள் இருக்க மாட்டார்கள். யாருமற்ற தெருவில் தனியா உட்கார்ந்திருக்கேன், கூட்டிச்செல்ல யாராவது வேணும். தாத்தா  காலையிலேயே கடைக்குப் போய்விடுவார். பாட்டி தல்லாகுளம் பொட்டலில் அழகரை சேவிக்கிறதோடு சரி. அந்தக் காலையும் தெருவும் இன்னும் துல்லியமாக என் ஞாபகத்தில் இருக்கு. அந்த மாதிரியான அநாதைத்தனம்தான் என்னை வாசிப்பை நோக்கித் திருப்பியதாக நான் நம்புகிறேன். ''

`விளையாடுவதற்கு பக்கத்துவீட்டுச் சிறுவர்கள்..?''

``அதுக்கு ஒரு காரணம் இருக்கு. என் பாட்டி இன்னொரு வகையில் எனக்கு அத்தை. அப்பா, அக்கா மகளைத்தான் கல்யாணம் செய்திருந்தார். பாட்டியை நான் `அத்தை' என்றுதான் கூப்பிடுவேன்.  எனக்கு ஒரு தாய்மாமன் இருக்கிறார். பெரிய குடிகாரர், எல்லா கெட்ட பழக்கங்களும் உண்டு. எழுபது வயசுல இப்பவும் ஆரோக்கியத்திற்கு ஒண்ணும் குறையில்லாம இருக்கார். அதனால வெளியில போனால் கெட்டுப்போயிடுவான் என்கிற பயம் என் அத்தைக்கு இருந்துச்சு. வீட்டைவிட்டு என்னை வெளியில் எங்கையுமே விட மாட்டாங்க.  சிறுபிள்ளைக்கான எந்தவொரு விளையாட்டுமே எனக்குத் தெரியாது. எல்லாமே  ஜன்னல் காட்சிகள்தான். அப்புறம் என் பாட்டிக்கு வேறொரு பயம் இருந்தது. அப்பா, அம்மா அருகில் இல்லாத சூழலில் வளரும் எனக்கு ஏதாவது என்றால் தான்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்ற அச்சமும் ஒருவகையில் காரணம். ''

``வாசிப்பை நோக்கி எப்படி நகர்ந்தீர்கள்... அன்றைய பொழுதுபோக்கு அம்சங்கள் என்னென்ன?''

``வாசிப்புக்கான சூழல் வீட்டில் எப்போதும் இருந்தது. சித்தி-சித்தப்பா இருவரும் படிப்பார்கள். நூலகத்தில் உறுப்பினர்கள்.  கைக்கு எட்டிய தூரத்தில் புத்தகங்கள் இருந்தன. சித்திக்காக புத்தகம் எடுக்க நூலகத்துக்குப் போவேன். இப்படித்தான் எனக்கு புத்தகங்கள் பரிச்சயமாகின. எழுபதுகளின் கடைசியில் சினிமா, ரேடியோ, பத்திரிகைகளைத் தவிர  பொழுதுபோக்கு வேறு ஒண்ணும் கிடையாது. சினிமா பார்ப்பவர்கள் கதையைச்  சொல்வார்கள் அல்லது அதை ஒலிச்சித்திரமாகக் கேட்பார்கள். பிறகு, வானொலியில் அதன்  பாடல்களைக் கேட்டு ரசிப்பார்கள். அதற்கடுத்து புத்தகத்தை நோக்கித்தான் நகர வேண்டியதிருக்கும். என்னுடைய வீடும் நல்லா சினிமா பார்க்கக்கூடிய, நாள் முழுக்க சிலோன் ரேடியோ கேட்கக்கூடிய வீடாக இருந்தது. `இளைய பாரதம்' என்கிற நிகழ்ச்சி திருச்சி வானொலியிலிருந்து ஒலிபரப்பாகும். ஒரே ஒரு சினிமா பாட்டு 7:45-க்கு ஒலிபரப்பு செய்வார்கள். அந்த ஒரு பாட்டுக்காக ரேடியோவைச் சுற்றி முப்பது நாப்பது பேர் அமர்ந்து கேட்பார்கள். இன்றைக்கு இது மிகையான சித்திரமாக இருக்கக்கூடும்.''

``இலக்கியம் என்பது என்ன, அதில் எழுத்தாளனின் பங்கு?''

``இலக்கியம் என்பது அடிப்படையில் தன்முனைப்புக்கு எதிரானது. ஒரு படைப்பு எழுதப்பட்ட பிறகு  அதைப் பொதுவெளியில் முன்வைக்கிறோம். அதோடு படைப்பாளியின் வேலை முடிந்தது. அதற்குத்  தெம்பும் திராணியும்  இருக்கும்பட்சத்தில் அது உயிர்பிழைக்கும். படைப்பாளி தன்னுடைய படைப்புக்கு எல்.ஐ.சி-யில் பாலிசி எடுப்பது, அது வயசான காலத்துல என்ன செய்யும் என்று வருத்தப்படுவது அதற்கு மணிபேக் பாலிசி போட்டு வைக்க முயற்சிப்பதெல்லாம் எழுத்தாளனின் வேலையே அல்ல. ஒரு நாய் பத்து குட்டிகளைப் பெற்றெடுக்கிறது. அதில் மூன்றோ நான்கோ காரில் அடிபட்டுச் சாகின்றன. இரண்டை வேற ஒரு நாய் கடித்துக் கொன்றுவிடுகிறது. மிச்சம் இருப்பவை உயிர்வாழ்கின்றன. இலக்கியத்தில் இப்படித்தான் இயங்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். 

எழுதுவதோடு எழுத்தாளனின் வேலை முடிந்துவிடுகிறது. ஆனால், இப்ப இலக்கியம் என்பது இங்கே விற்பனைப் பிரதிநிதி மருத்துவரைப் பார்க்க வருவதுபோல் ஆகிவிட்டது. அந்த விற்பனைப் பிரதிநிதிகூட வேறொரு மருந்து கம்பனியில் சம்பளத்துக்காக வேலை செய்பவர். ஆனால், இங்க இலக்கியம் எப்படி ஆகிவிட்டதென்றால், தன் கம்பெனிக்குத் தானே விற்பனைப் பிரதிநிதி. பை முழுவதும் அவருடைய புத்தகங்கள். இதைப் படிங்க... இதைப் படிங்க... இதைப் படிங்க... என்று சொல்வதும், தன்னுடைய படைப்புக்குத் தானே பி.ஆர்.ஓ-வாக இயங்குவதும், அவரே மேனேஜராகவும் இருந்து, வெளியீட்டு நிகழ்வை, விமர்சனக் கூட்டங்களை ஒழுங்கு செய்வதும் தானே அதைப் பாராட்டி எழுதச் சொல்வதும், ஒருத்தரிடம் நூலைக் கொடுக்கும்போதே எங்கேயாவது எழுதுங்க இதைப் பற்றி என்று சொல்வதும் இதையெல்லாம் நான் இலக்கியத்துக்கு எதிரான செயல்பாடு என்றே உறுதியாக நம்புகிறேன். 

சமீபத்தில் ஒருவர் அவருடைய  கவிதைத் தொகுப்பைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அதில் ஒரு பத்திக்கு அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா மாமா, மாமி என இலங்கை வானொலி நிலையம்போல நன்றி தெரிவித்திருக்கிறார். அந்தத் தொகுப்பின் முதல் கவிதை `தற்கொலை இனிது'. ரொம்ப அபத்தமாக இருக்கிறது. இவ்வளவு சொந்தம் உள்ளவன் பத்து நாளைக்கு ஊருக்குக்கூட போக முடியாது. அப்புறம் எப்படி தற்கொலை இனிது?''  

``உங்கள் பயண அனுபவத்தைப் பற்றி...''

``ராம்கோபால் வர்மாவின்  `சத்யா' படத்தில் ஒளிப்பதிவாளர் ஜெராடு கூப்பரும், காம்ரானும். இதில் முதலாமவர் வெளிநாட்டுக்காரர். அவர் கண் வழியா மும்பையைப் பார்க்கிறப்போ, வேற மாதிரி இருக்கு. நீங்களும் நானும் சென்னையில் இருக்கோம். அன்றாடத்தின் அலுப்பு நமது காட்சிகளின் மீதும் படிகிறது. நாம் வேறு ஒரு நிலப்பரப்புக்குப் போகும்போது நம் அகமும் சேர்ந்து விழிக்கிறது. அகம் விழித்து அந்த இடத்தைக் கவனமாகப் பார்க்கிறது. நான்கு, ஐந்து நாள்கள் இங்கு இருப்போம். எனவே, அதற்குள் முடிந்த வரைக்கும் அத்தனையையும் கிரகித்துக்கொள்ள வேண்டும் என்ற பதற்றம், பரவசம், ஒரு நோக்கம், நம்முடைய அகக் கண்ணையும் சேர்த்து திறக்கிறது. ஒரு பயணம் என்பது ஒரு மனிதனுக்குள் இப்படித்தான் நிகழும் என்று நம்புகிறேன். அந்தப் பயணம் எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம். ரொம்ப தூரம், குறிப்பிட்ட பயணமா இருக்கணும் என்றெல்லாம் சொல்லவரலை. ஆனா, உங்கள் அகத்தையும் சேர்த்து திறப்பதற்கான ஒரு சாத்தியம் பயணத்தில் இருக்கணும் என்று நான் நம்புறேன். 

பயணம் என்பதை தனியா நிகழ்த்தணும். கூட யாராவது ஒருத்தரைக் கூட்டிப்போனாலும் நாம் அவருடன் பேசத்தொடங்கிவிடுவோம். அவரோடு பேசத் தொடங்குகையில் அந்தப் பயணம் ஐம்பது சதவிகிதமும் அவரோடு ஐம்பது சதவிகிதமும் எனக் கழிகிறது. பாவ்லோ கொய்லா சொல்கிறார், பயணத்துக்கு மிகச்சிறந்த கூட்டாளி நீங்கள் மட்டுமே. 

என்னுடைய பயணங்கள் பெரும்பாலும் தனியானவைதான். சில நிலப்பரப்புகளில் உங்களின் அகம் விம்முவதை நீங்கள் உணர்வீர்கள். எனக்கு கேரளம் என்பது அகம் விம்மக்கூடிய நிலப்பரப்பு. திருவனந்தபுரம், கொச்சின் போன்ற ஊர்கள் என்னை எழுதத் தூண்டுபவையாக இருக்கின்றன. 

ரசிகமணி டி.கே.சி, அவருடைய புத்தகத்தில் கொச்சின்தான் கபிலர் இருந்த இடம் என்கிறார். கொச்சின் உட்பகுதியை நோக்கிச் செல்கையில், செல்லானம் என்ற ஊர் இருக்கிறது. ஒரு பக்கம் கடல், இன்னொரு பக்கம் காயல் இருக்கும் நடுவில் ரோடு போகும். நம்ப முடியாத அளவுக்கு அழகா இருக்கும். அவரவருக்கென்று ஒரு நிலப்பரப்பு இருக்கு. எந்த நிலப்பரப்பு அவர்களை விம்மவைக்கிறது என்பது அவரவர்களைச் சார்ந்ததாகவும் இருக்கும். நான் மலைப்பிரதேசங்களுக்குப் போக மாட்டேன். மலைப்பிரதேசம் என் இருண்மையைக் கூட்டும். இன்னும் இறுக்கமாக்கும். இன்னும் துயரமாக்கும். எனக்கு சமவெளிகள், பெரிய குன்றுகள் இல்லாத பரப்பு, கடலை ஒட்டியிருக்கிற பகுதிகள்தான் உவப்பானவை. கல்பற்றா நாராயணன் ஒருமுறை சொன்னார் `நான் ஓர் இந்தியப் பயணம் போறேன். அந்தப் பயணத்தைப் பற்றி ஒருவார்த்தைகூட எழுத மாட்டேன். ஆனால், அது ஏதோ ஓர் இடத்தில் என் கலைக்குப் பயன்படக்கூடும். பயண இலக்கியம் எழுதுவதல்ல பயணங்களின் நோக்கம்.' 

எனக்குத் தெரிஞ்ச நண்பர்  `விபாஷணா' தியானத்துக்குச் சென்று வந்தார். பதினொரு நாள் அங்கு பேசாமல் இருக்க வேண்டும், அங்கிருந்து திரும்பியவர், இருபத்திரண்டு நாள் அதைப் பற்றிப் பேசினார். இதற்கு அங்கு போகாமலே இருந்திருக்கலாம். உரையாடலிலிருந்து ஒதுங்கி இருப்பதே விபாஷணா. சம்பாஷணா விபாஷணா.''

``சமீபத்தில் வந்த கவிதைத் தொகுப்புகளில் உங்களுக்கு ரொம்பப் பிடித்து எது? அதன் சிறப்பம்சம் என்ன?''

சபரிநாதனின் `வால்' தொகுப்பு. இதை என்னால் வாசித்தே முடிக்க முடியவில்லை. எனக்கு அது எப்படி ஆகிவிட்டதென்றால், யாராவது ஒருவர் வந்து கொடுக்கும் வின்டேஜ் கலெக்‌ஷனில் வரக்கூடிய ஒயின் மாதிரி ஆகிடுச்சு. அந்த ஒயினில் ஒருமிடறு அல்லது ஒரு குவளை அருந்துவது ஒரு ராத்திரிக்கு போதுமானது. உண்மையிலேயே மிகையில்லாமல் சொல்கிறேன் அந்தத் தொகுப்பு முழுமையாய் வாசிக்க முடியாத ஓர் இடத்தில்தான் இருக்கு. ஒரு கவிதை, இரண்டு கவிதை வாசிக்கிறேன். அதில் அப்படியே தங்கிப்போய் நின்றுவிடுகிறேன். இன்னொரு நாள் எடுத்து, மேலும் சில கவிதைகளைப் படிக்கிறேன். என்னுடைய தர்க்கத்துக்கு, என்னுடைய பகுத்தறிவுக்கு, என்னுடைய சிந்தனைக்கு வேற ஒண்ணா இருக்கிறது. அது ஒரு நம்ப முடியாத தொகுப்பு. விடாத படபடப்பை, மனப்பதற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. சொற்களில் இப்படியெல்லாம் கூற முடியுமா என்ற பரவசத்தையும் அபாரமான  அனுபவத்தையும் தரக்கூடியது. ''

``விருதுகள் குறித்து உங்கள் அபிப்பிராயம்?''

``படைப்புக்கு விருது தேவைதான். அது ஒரு கூடுதல் மகிழ்ச்சிதான். எழுத்துக்குக் கிடைக்கக்கூடிய அங்கீகாரம்தான். ஆனால், அதற்காக படைப்பாளி மெனக்கெடக் கூடாது. விருது என்பது `வாங்கப்படுகிற’ காலத்தில் அதுகுறித்து படைப்பாளி எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அது நம்முடைய வேலையல்ல.''

  

``நூல் விமர்சனமாக படைப்புகள் குறித்த உரையாடலோ, கட்டுரைகளோ பரவலாக நடைபெறுவதில்லையே. இலக்கியம், இலக்கியவாதிகளோடு தேங்கிப்போவது சரியா?''

``இலக்கியத்தைப் பரவலாக்குவது என்பது பிரபல ஜவுளி நிறுவனம் கிளை தொடங்குவதுபோல் அல்ல. ஜவுளி நிறுவனம் இப்போது கோவையில், இப்போது ராஜபாளையத்தில் புத்தம்பொலிவுடன் தொடங்குகிறது என்றெல்லாம் இலக்கியம் ஒருபோதும் இயங்கியதில்லை. நல்ல படைப்புகள் நிச்சயமாக யார் தடுத்தாலும் போய்ச் சேரும். யாராவது அதைப் பேசியே தீருவார்கள். 

தலையில் தூக்கி வெச்சுகிட்டு கூவிக்கூவி விற்க வேண்டியதில்லை. என் புத்தகம் ... என் புத்தகம்... படிங்க... படிங்க... என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழ வேண்டியதில்லை. படிச்சியா படிச்சியா படிச்சியா, எழுதினியா எழுதினியா எழுதினியா என்று அசரிரீ மாதிரி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை. 

இலக்கியம் ஓர் ஆன்மிகம். படைத்துவிட்டு அமைதியாக இருக்க வேண்டியதுதான். அரிசியை விதைத்தால் அரிசி வரும். கோதுமையை விதைத்தால் கோதுமை வரும். பார்த்தீனியத்தை விதைத்தால் பார்த்தீனியம் வரும். என்ன விதைத்தீர்களோ அதன் அறுவடை நிகழத்தான் செய்யும். நாஞ்சில் நாடனின் முன்னுரையில் இப்படியொரு வரி இடம்பெற்றிருக்கும் `இது காகமா, குயிலா என்கிற கவலை உங்களுக்கு வேண்டாம். அது வசந்தகாலம் வரும்போது தீர்மானம் ஆகட்டும்'.''

``சினிமா வேலைகள் எப்படிப் போகின்றன?''

`` `திருடன் மணியன்பிள்ளை' நூலை திரைப்படமாக்கும் முயற்சியில் இருக்கிறேன்.''

``மலையாள சினிமா பற்றி...''

``இலக்கியம் வாசிக்கக்கூடிய ஒருவனுக்கு மலையாள சினிமா உவப்பாகத்தான் இருக்கும். ஏனென்றால், அதிலிருக்கும் நகைச்சுவை, யதார்த்தம், கதைக்களம் போன்றவை தமிழ்சினிமாவைவிட நிறைவைத்  தருவதாகவே இருக்கும். ரொம்ப அணுக்கமாகவும் இருக்கும்.''

``கவிதைகள் எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?''

``நீண்டகாலமா வாசித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய 14 வயதில் தல்லாகுளம் கிளை நூலகத்தில் கவிஞர் மேத்தாவின் `அவர்கள் வருகிறார்கள்' படித்தாக ஞாபகம். `முன்னறிவிப்பு அறிவித்துக்கொண்டும், முகாந்திரங்கள் சொல்லிக்கொண்டும் வருவதில்லை புரட்சி', `தேவதைகள் வரம் கொடுக்க வந்தபோது நாங்களெல்லாம் தூங்கிவிட்டோம். பிறகு, அவள் போன பிறகு வாழ்க்கை முழுவதும் அழுதுகொண்டிருந்தோம்' இந்த வரிகள் எல்லாம் இன்னும் ஞாபகம். நீண்டகாலம் தீவிரமான வாசகனாகத்தான் இருந்தேன் .

1991 வாக்கில் மனுஷ்ய புத்திரனிடம் ஒரு நண்பரின் தொகுப்புக்காக முன்னுரை வாங்குவதற்காக துவரங்குறிச்சிக்குப் போனோம் சுபத்ராவின் `எந்தன் தோழா’ என்ற கவிதை தொகுப்புக்கு அவர் எழுதிய முன்னுரையைப் படித்து ஈர்க்கப்பட்டுப் போனோம். கடிதப் போக்குவரத்துதான். சைக்கிள் கடையில் சொன்னால் வீட்டில் கொண்டுவந்து விடுவார்கள் என ஹமீது கடிதத்தில் சொல்லியிருந்தார்.  அவர் வயதான ஒரு பேராசிரியராக இருக்கக்கூடும் என நினைத்துக்கொண்டு போனோம்.   `படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்' அப்போது வந்திருக்கவில்லை. எங்களுக்கு ஆச்சர்யம் காத்துக்கொண்டிருந்தது. ஹமீது வீட்டில் அவரின் டேப் ரெக்கார்டரின் மீது ஒருவாசகம் `Live Your Life Your Own Way' என்று ஒட்டப்பட்டிருக்கும். 

வண்ணதாசனுக்குக் கடிதம் எழுதும் காலத்திலிருந்து ஏதாவது எழுதுங்க என்று சொல்லிக்கொண்டே இருப்பார். 

பின் ரொம்ப தாமதமாக என் முப்பதுகளின்  நடுப்பகுதியில்தான் எழுத வந்தேன். 

எனக்கு ஒரு பைண்டிங் இருக்கு. இடதுசாரி அரசியலிலிருந்து வாசிப்புக்கு வந்தவர்கள் அரசியல் நம்பிக்கைகள் குறையும்போது வாசிப்பையும் கைவிட்டுவிடுகிறார்கள். வாசிப்பிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள், அரசியல் கைவிடும்போதும் வாசிப்பு என்னும் தாய்க் கழகத்துக்கு திரும்பிவிடுகிறார்கள்.

எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இலக்கியத்தின் வழி அரசியலுக்கு வந்தார் என்று சொல்ல முடியாது. அரசியலின் வழி இலக்கியத்துக்கு வந்தவர். ஒருநாள் ராத்திரி என்னைக் கூப்பிட்டு `இந்தப் புத்தகங்கள் எல்லாம் சமூக மாற்றத்துக்குப் பயன்படுமா?' என்றார். நான் `அப்படியெல்லாம் உத்தரவாதம் தரை இயலாது' என்றேன். `அப்படியென்றால் இந்தப் புத்தகங்களையும் எடுத்துப் போயிடு' எனச் சொல்லிவிட்டார். எனக்கு இடதுசாரி அரசியலை அறிமுகப்படுத்தியவரும் அப்படிப்பட்டவர்தான். ஆனால், நான் வாசிப்பிலிருந்துதான் இடதுசாரி அரசியலுக்கு வந்தேன். அதில் இப்போது கேள்விகள் இருந்தாலும் வாசிப்பில் தொடர்ந்து இருக்கேன். எந்த பேதங்களும் இல்லாமல் கிடைத்ததெல்லாம் படிக்கக்கூடியவனாகவே இருக்கிறேன்.''

 ``நவீன கவிதைகளில் உங்களை வசீகரித்த கவிதைகள்?''

``வண்ணதாசனின் எளிமையும் அதில் உள்ள ஆழமும் என்னை ரொம்பவும் பாதித்தன. அதன் பிறகு சமயவேல். பின் நான் ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்தேன். அப்போது, தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் தலைவரின் புத்தகம் ஒன்று ஜெராக்ஸுக்கு வந்தது. 42 ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய `மரணத்தில் வாழ்வோம்' என்ற அந்த நூல் ரொம்பப் பிரமாதமான கவிதைகள் அடங்கிய தொகுப்பு. அது என்னைக் கடுமையாகப் பாதித்தது. `பற்றி எரிவது யாழ்ப்பாணம் நகரம் மட்டுமல்ல, பெற்ற வயிறும்தான் பேசாதிரு மகனே' என்று அந்தக் கவிதை முடியும். எம்.ஏ.நுஃமானின், `நேற்றைய மாலையும் இன்றைய காலையும்’ இப்படி நிறைய பேரின் கவிதைகள் என்னை ரொம்ப பாதித்தன. ''Trending Articles

Sponsored