செல்ஃபி எடுத்த பென்குயின்கள்... இது அண்டார்டிகா அதிசயம்!Sponsoredறவைகள் என்றால் நன்றாகப் பறக்க வேண்டும் அல்லவா? இவற்றுக்குப் பறக்கவே தெரியாது. ஆனால், நன்றாகவே நீந்தும். மற்ற பறவைகளுக்கு இருப்பதுபோல் இவற்றின் சிறகுகள் மென்மையாக இருக்காது, நீண்ட கைகளைப் போல் மிகவும் கடினமானது. வாத்து போன்ற கால்களைக் கொண்ட இவை, தரையில் தன் உடலைத் தூக்கிக்கொண்டு அந்தச் சின்னக் கால்களால் மெல்ல நடக்கும் நளினத்தின் முன் அன்ன நடைகூடத் தோற்றுத்தான் போக வேண்டும். தரையில் சோம்பேறிக்குச் சொந்தக்காரன்போல் இருக்கும் இந்தத் தென் துருவப் பறவைகள், நீருக்குள் புகுந்துவிட்டால் இதுவா அப்படி அன்னநடை போட்டது என்று ஆச்சரியப்படும் அளவிற்கு வேகமாக நீந்தும்.

பறக்கத் தெரியாது, கைகளைப் போல் கடினமான எலும்புகளைக் கொண்ட சிறகுகள் போன்ற உடலுறுப்பு, நன்றாக நீந்துகிறது. பிறகு எப்படிப் பறவையினம் என்று கூறுகிறார்கள்?

Sponsored


ஆம், அது ஒரு பறவைதான். பறவை இனங்களைப் போலவே முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கக்கூடிய இவற்றின் முகத்தில் நீண்டிருக்கும் அலகுகள் அதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. கடற்பறவை வகைகளில் பறக்க இயலாத ஒரே பறவை, பனிப்பாடி என்று தமிழில் அழைக்கப்படும் இந்தப் பென்குயின்கள் மட்டுமே.

Sponsored


உலகளவில் மொத்தம் 17 வகையான பென்குயின்கள் இருக்கின்றன. அதில் எம்பரர் பென்குயின் (Emperor Penguin) என்ற இனம்தான் இருப்பதிலேயே உயரமானது. பொதுவாக அனைத்து இனங்களுமே மீன்கள், சிப்பி வகைகள், க்ரில் (Krill) என்ற ஒரு வகை இறால்களையே அதிகம் உண்ணுகின்றன. பனிப்பிரதேசங்களில் அதிகமாகக் காணப்படும் இவை பனிச்சிறுத்தை, நரி போன்ற விலங்குகளாலும் ஸ்குவா (Skua), ஷீத்பில் (Sheathbill) போன்ற கடற்பறவைகளாலும் வேட்டையாடப்படுகின்றன. இத்தகைய வேட்டையாடிகளால் வராத ஆபத்து, இன்றைய உலக வெப்பமயமாதலால் இந்தப் பென்குயின்களுக்கு ஏற்பட்டுள்ளது.

உலகம் வெப்பமடைவதால் தென் துருவ அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனிமலைகள் உருகிக்கொண்டிருக்கின்றன. இதனால் உருவாகும் காலநிலை மாற்றங்களால் உலகின் உயிர்கள் அனைத்தும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருவதுபோலவே, பென்குயின்களுக்கும் ஆபத்து வந்துவிட்டது. பனிப்பிரதேசக் கடல் பகுதிகளில் மட்டுமே வாழும் பிரத்யேக மீன் மற்றும் இறால் வகைகளையே இவை உணவாகக் கொள்கின்றன. ஆனால், வெப்பமடைதல் காரணமாக அவற்றின் எண்ணிக்கை குறைவதாலும், இருப்பதையும் அதீத மீன் பிடித்தல் மூலம் மனிதர்கள் சுரண்டி விடுவதாலும் பென்குயின்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. சராசரியாக ஒரு காலனியில் வாழும் மொத்த பென்குயின்களும் 1.93 லட்சம் டன்கள் இறாலையும், 18,000 டன்கள் மீன்களையும் அவற்றின் இனப்பெருக்கக் காலத்திற்கு மட்டும் உணவாகக் கொள்கின்றன. ஆனால் வரும்காலத்தில் அவைகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அது மட்டுமின்றி தற்போதைய நிலவரப்படியே, பென்குயின்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகக் கூறி இயற்கையின் பாதுகாப்புக்கான சர்வதேசச் சங்கம் அவற்றை சிவப்புப் பட்டியலில் (Red list) சேர்த்துள்ளது.

Satellite Photo Courtesy: Thomas Sayre McChord, Hanumant Singh, Northeastern University, Woods Hole Oceanographic Institution

சென்ற ஆண்டு செயற்கைக்கோள் மூலம் கிழக்கு அண்டார்டிகா பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், 23 லட்சம் பென்குயின்களைக் கொண்ட புதிய காலனி ஒன்றை சுட்டிக் காட்டியுள்ளது. இந்தக் காலனி இத்தனை நாள்கள் யார் கண்ணிலும் படாமல் இருந்தது ஆச்சர்யமே. மறைந்திருந்த காலனியில் இருப்பவை அண்டார்டிகாவில் மட்டுமே காணப்படும் என்டெமிக் பென்குயின் இனமாகும். இப்போது பென்குயின்களைப் பாதுகாப்பது இன்னும் சிக்கலாகிவிட்டது. இவற்றுக்கான உணவு, வாழ்வாதாரம் போன்றவை வரும் காலத்தில் தீர்ந்துவிடாமல் தக்கவைக்க வேண்டியது அவசியமாகிறது.

நம்மை ரசிக்க வைப்பதையும் தாண்டி பென்குயின்கள் சுற்றுச்சூழலுக்குப் பல நன்மைகளைச் செய்கின்றன. அவை கடலிலும், நிலத்திலும் வாழ்வதால் நிலத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துகளை நீரிலிருந்தும், கடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை நிலத்திலிருந்தும் தான் உண்ணும் உணவிலிருந்து சில சத்துகளை மலத்தின் மூலமாகப் பகிர்ந்தளிக்கிறது. நிலத்தில் இனப்பெருக்க காலத்தின்போது அடைகாக்க அவை குழி தோண்டுவதால் நிலத்தின் தன்மை சீரமைக்கிறது. அது மட்டுமின்றி பனிச்சிறுத்தை, நரி மற்றும் சில கடற்பறவைகளுக்கு உணவாக இருக்கும் இவை அழிந்துவிட்டால் உணவுச் சங்கிலியின் தொடர்ச்சி பாதிக்கப்படும்.

Photo Courtesy: Eddie Gault - Australian Antarctic Division 

இத்தனை நன்மைகளைப் புரியும் பென்குயின்கள், தனக்கு இருக்கும் ஆபத்துகளைப் பற்றிய சிந்தனை சிறிதளவும் இல்லாமல் அண்டார்டிகாவில் அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அதற்கு அத்தாட்சி கூறுவதுபோல் அமைந்துள்ளது ஒரு ஜோடி பென்குயின்கள் எடுத்த செல்ஃபி. அண்டார்டிகாவில் அமைந்துள்ள ஆஸ்திரேலியாவிற்குச் சொந்தமான மாவ்ஸன் ஆராய்ச்சிக் கூடத்திற்கு அருகில் எட்டி கால்ட் (Eddie Gualt) என்ற ஆய்வாளர் தனது கேமராவைத் தொலைத்துவிட்டார். அங்கே சுற்றித் திரிந்த பென்குயின்களில் ஒரு ஜோடி, தாங்கள் கண்டெடுத்த கேமராவை ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டிருந்தபோது, அவை இரண்டின் முகமும் அழகான செல்ஃபியாகப் பதிந்துவிட்டது. பின்னர், கால்ட் அந்தக் கேமராவை மீண்டும் எடுக்கச் சென்றிருக்கிறார். மீட்டெடுத்த அந்தக் கேமராவில் அந்தப் புகைப்படத்தையும் கவனித்திருக்கிறார். அந்த அழகுப் பென்குயின்களின் அம்மாஞ்சியான முகத்தைக் கண்டதும், செல்ஃபியின் அழகை மறந்து, அந்தப் பென்குயின் இனத்திற்கே விரைவில் நேரவிருக்கும் சிக்கல்களை நினைத்து அவருக்கு வருத்தமே மேலோங்கி இருக்கிறது.Trending Articles

Sponsored