அழிவின் விளிம்பில் இருக்கும் ஹார்பி கழுகுகள்...அடைக்கலம் கொடுத்து காப்பாற்றும் மருத்துவர்!Sponsoredதென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள வெனிசுலாவில் உள்ள ஓர் அடர்ந்த காடு. அக்காட்டில் இருக்கும் மிக உயரமான மரத்தின் அடியில் நிற்கும் ஒருவர் ராட்சத வில்லில் கல்லை வைத்து மரத்தின் உச்சியை நோக்கி எறிகிறார். அப்போது அம்மரத்திலிருந்து பறவைகளின் சத்தம் கேட்கிறது. அதில் ஒரு பறவையின் சத்தம் மட்டும் வினோதமாகக் கேட்கிறது. எதையோ சாதித்தவராக தனது உடம்பில் ரோப்பை கட்டிக்கொண்டு மரத்தின் மீது ஏறுகிறார். 100 அடிக்கும் மேல் ஏறியவர் பறவையின் சத்தம் வந்த இடத்தை நோக்கி தன் பார்வையைத் திருப்புகிறார். அங்கே இருந்த பறவைக் கூட்டில் அழகிய, கம்பீரமான ஹார்பி கழுகு (Harpy eagle) ஒன்று அமர்ந்திருக்கிறது. அதன் கால்களில் உள்ள நகங்கள் மட்டும் 6 இன்ச் அளவில் இருக்கின்றன. 

Photo - Dallas World Aquarium

Sponsored


மிகுந்த கோபமும், இரக்கமற்ற தன்மையும் கொண்ட ஹார்பி கழுகு அவரைப் பார்த்தவுடன் தனது கோரமான குணத்தைத் தள்ளி வைத்துவிட்டு அவரின் கைக்குள் அடக்கமாகிறது. மரத்திலிருந்து கழுகுடன் இறங்குகிறார், அவர். அதன் பின்னர் சிறகின் நீளம், கழுகின் எடை, உடல் உயரம், அலகின் நீளம் என உடல் நிலை பரிசோதிக்கப்படுகிறது. அதன் பின்னர், மீண்டும் அக்கழுகு அதன் கூட்டில் விடப்படுகிறது. கழுகு ஏதேனும் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக அவற்றுக்குச் சிகிச்சை அளிக்கின்றார். அந்த அளவுக்குக் கழுகிற்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாத்து வருகிறார், அவர். யார் அவர்... ஏன் கழுகிற்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாப்பது வருகிறார்... வாருங்கள் பார்ப்போம். 

Sponsored


அவர் பெயர் அலெக்ஸாண்டர் பிளான்கோ மார்க்வெஸ். இவர் ஒரு கால்நடை மருத்துவர். வெனிசுலாவில் கழுகுகளின் எண்ணிக்கை பெருமளவு குறைவு. உணவுச் சங்கிலியில் கழுகிற்கும் முக்கியமான இடம் உண்டு. இதன் எண்ணிக்கை குறைவாக இருக்கும் காரணத்தால்தான் மருத்துவர் பிளான்கோ கழுகுகளைக் காப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதுதவிர, வெனிசுலாவில் வேட்டையாடுதல் மற்றும் காடுகள் அழிப்பதால் பறவைகள் அழிவினைச் சந்தித்து வருகின்றன. அதில் கழுகுகளின் நிலையோ இன்னும் மோசம். வேட்டையாடுபவர்களின் முக்கியமான குறி கழுகுகள்தான். இதனால்தான் காடுகளில் உள்ள கழுகுகளை கவனித்துக்கொள்ள ஆரம்பித்தார், பிளான்கோ. இதற்காக அவரே மரத்தின் உச்சியில் ஏறிச்சென்று பறவைகளை எடுத்து வந்து மருத்துவப் பரிசோதனை செய்கிறார். தன் வாழ்நாளில் பலமணி நேரங்களை ஹார்பி கழுகுகளின் இனத்தைக் காப்பதற்காக மட்டுமே செலவு செய்துவிடுகிறார். தான் கற்ற மருத்துவத்தை வைத்து பணம் பார்க்காமல், தன் மனதிற்குப் பிடித்த வேலையைச் செய்து மன நிறைவு கொள்கிறார். இதுதவிர மெக்ஸிக்கோ, பனாமா, பிரேசில், ஈக்வடார் ஆகிய பக்கத்து நாடுகளுக்கும் அவர் அறிவுரை வழங்குகிறார். 

வெனிசுலாவில் உள்ள கழுகுகளைப் பாதுகாப்பதற்காக அமைப்பு ஒன்றையும் 1992-ம் ஆண்டிலேயே துவக்கியிருக்கிறார். இதன்மூலம் அக்கழுகுகளை வளர்த்தும் வருகிறார். இதில் இயற்கை சார்ந்த இடங்களில் வாழும் மக்களையும் இணைத்துக் கழுகுகளைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் எடுத்துச் சொல்லி விழிப்புஉணர்வு கொடுத்து வருகிறார். அம்மக்களும் ஹார்பி கழுகுகளின் இனப்பெருக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து பாதுகாத்து வருகிறார்கள். அவ்வப்போது மருத்துவக்குழுக்கள் மூலம் ஹார்பி கழுகுகளுக்குப் பல்வேறு மருத்துவ நடவடிக்கைத் திட்டங்களை மேற்கொள்கிறார், பிளான்கோ. இதுதவிர, பெற்றோர் கழுகுகள், கழுகு குஞ்சுகளின் வளர்ச்சி, உணவுப் பழக்க வழக்கம் ஆகியவற்றையும் தனது அமைப்பிற்குப் பாடம் எடுத்து வருகிறார். இது அவருக்குப் பின்னர் கழுகினைப் பாதுகாக்கும் அமைப்பைத் தொடர்ந்து வழி நடத்த உதவும் என்று அதற்குக் காரணமும் சொல்கிறார். இந்த உலகில் உள்ள பறவை இனங்களில் ஹார்பி கழுகு மிக முக்கிய இடத்தைப் பெற்று விளங்குகிறது என்று சொல்லிவிட்டு அடுத்த காட்டை நோக்கிப் புறப்படத் தயாராகிறார், பிளான்கோ. Trending Articles

Sponsored