நாய் உயரமிருந்த மிருகங்கள், குதிரைகளான கதை... பரிணாம வளர்ச்சியின் மேஜிக்!Sponsoredகுதிரைகளுக்கும் மனிதர்களுக்குமான உறவு மிகவும் தனித்துவமானது, அது இன்று நேற்று தொடங்கியதல்ல. கிட்டதட்ட 6,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே மனிதர்களுக்கு நெருக்கமாகக் குதிரைகள் வாழ்ந்து வருகின்றன என்று உக்ரைன், கசகஸ்தான் பகுதிகளில் கிடைத்த ஆதாரங்களின் மூலம் தெரியவருகிறது. ஆனால், அவை 55 மில்லியன் வருடங்களாக இப்புவியில் வாழ்ந்து வருகின்றன. மனிதர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பல நூற்றாண்டுகளாக வியர்வையைச் சிந்திக்கொண்டிருக்கும் அவை அடைந்த பரிணாம வளர்ச்சியின் வரலாற்றுப் பின்னணியைப் புரிந்துகொள்வது அச்சேவைக்கு மதிப்பளிக்கக் கூடியதாக இருக்கும்.

குதிரைகளின் மூதாதையர்களாக, ஈயோசீன் (Eocene) காலத்திற்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த இயோஹிப்பஸ் (Eohippus) என்று அழைக்கப்படும் உயிரினத்தைக் கூறலாம். இவை மயிர்க்குளம்புக் கால்களை உடைய பாலூட்டி உயிரினமாகும். நாயின் உயரமே இருந்த இது, குதிரையின் மூதாதையராக இருக்குமென்று இதன் படிவம் கிடைத்த தொடக்கத்தில் யாரும் சிந்திக்கவில்லை. அதற்குக் காரணம் இயோஹிப்பஸ், குதிரையோடு ஒப்பிடக்கூடிய உடலமைப்பு கொண்டிருக்கவில்லை. நாய் உயரம் இருந்த இதன் முன் கால்களில் 4 மயிர்க்குளம்புகளும், பின்னங்கால்களில் 3 மயிர்க்குளம்புகளும் இருந்துள்ளன. ஆனால், இன்றைய குதிரைகளில் மயிர்களற்ற உறுதியான ஒற்றைக் குளம்பு மட்டுமே நான்கு கால்களிலும் உள்ளது. இன்றைய குதிரைகளின் முதுகு கழுத்தின் அடிப்புறத்தில் இருந்து பின்பகுதி வரை சமச்சீராக இருக்கும். ஆனால், இதன் முதுகு வளைந்து இருக்கும். அதன் மண்டையோடு மிகச்சிறிய அளவுள்ளதாகவும், இன்றைய குதிரைக்கு இருக்கக்கூடிய வளையத்தக்க சதைப்பகுதிகள் இல்லாமலும்,மிகச் சிறிய மூளைப்பகுதியோடும் இருந்துள்ளது.

Sponsored


ஆனால், இயோஹிப்பஸிற்கு அடுத்ததாக அறியப்பட்ட ஓரோஹிப்பஸ் (Orohippus) மற்றும் எபிஹிப்பஸ் (Epihippus) ஆராய்ச்சியாளர்களிடையே சில கேள்விகளை ஏற்படுத்தியது. வட அமெரிக்காவில் முதலில் தோன்றிய இயோஹிப்பஸின் அளவோடு ஒத்திருந்தன பிந்தைய இரண்டும். உடலமைப்பின் சில பகுதிகள் அதிலிருந்து வளர்ச்சி அடைந்தவைதான் இவை இரண்டும் என்பதைப் புரியவைத்தது. இருந்தாலும் அதன் கடைவாய்ப் பற்களைவிட சிறியதாக இருந்த முன் கடைவாய்ப் பற்கள், தற்போது அளவில் பெரிதாகி இரண்டும் சம அளவில் இருந்தன. இது இன்றைய குதிரைகளுக்கு உரிய பல் அமைப்பாகும். இருந்தாலும் இது குதிரைபோன்ற மேயும் உயிரினங்களின் மூதாதையராக மட்டுமே கருதப்பட்டது.

Sponsored


மேற்குறிப்பிட்ட எபிஹிப்பஸில் இருந்து ஆலிகோசீன் (Oligocene) காலத்தில் பரிணாம வளர்ச்சியடைந்ததால் உருவான மீசோஹிப்பஸ் (Mesohippus) இன்றைய குதிரைகளின் முக்கியமான மூதாதையர்களாகக் கூறப்படுகின்றனர். அதற்குக் காரணம், அவை அளவில் வளர்ச்சியடைந்தது மட்டுமின்றி, இன்றைய குதிரைகளின் முகவாய்போலவே நீண்டிருந்த முகத்தில் மூக்கும், வாயும் சேர்ந்தவாறு அமைந்திருந்தது. அதுமட்டுமின்றி மெல்லிய நீண்ட கால்களோடும் இருந்தன, அதில் முன் கால்களில் இருந்த நான்கு குளம்புகள் மூன்றாகக் குறைந்துவிட்டன.

ஆலிகோசீன் (Oligocene) காலத்தின் பிற்பகுதியில் மீசோஹிப்பஸ் பரிணாம வளர்ச்சியடைந்து மேலும் சிறிது உயரம் வளர்ந்தது. அதன்பிறகு மியோஹிப்பஸ் (Meohippus) என்றழைக்கப்பட்ட இந்தப் புதிய விலங்குதான் பல வகையான இனங்களாக மியோசீன் (Miocene) காலத்தில் பிரிந்து சென்றது. அவற்றில் ஒருவகையான ஆன்ச்சிதெரிஸ்தான் (Anchitheres) முழுமையான வளர்ச்சியடைந்த குதிரைகளாக பிற்காலத்தில் நிறைவுபெற்றன. அதற்கு முன்னால் அவை வட அமெரிக்காவில் இருந்து இன்றைய பெரிங் ஜலசந்தியில் (Bering Strait) அந்தக் காலகட்டத்தில் இருந்ததாகக் கூறப்படும் நிலப்பகுதி வழியாக யூரேசியாவிற்குள் (Eurasia) நுழைந்தன.

மியோஹிப்பஸில் (Miohippus) இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த பாராஹிப்பஸ் (Parahippus) என்ற குதிரை இனத்தில் இருந்து முன் பற்கள் புற்களை உண்ணத் தகுந்தவாறு மாறியமைந்தன. செடிகளைச் சாப்பிடுவதிலிருந்து புற்களை மேயும் வகையில் அவற்றின் உணவுமுறை முற்றிலும் மாற்றமடைந்தது, மெரிச்சிப்பஸாக (Merychippus) பரிணாம வளர்ச்சி அடைந்தபோதுதான். இன்று போனி (Pony) என்றழைக்கப்படும் மட்டக்குதிரையின் உயரத்தில் இருந்த இந்த மெரிச்சிப்பஸின் மண்டையோடு இன்றைய குதிரைகளின் மண்டை ஓட்டோடு பெரிதும் ஒத்துப்போகிறது. இதன் கால்களின் முட்டிக்குக் கீழ் உள்ள எலும்புகள் துரிதமான ஓட்டத்திற்கு ஏற்றவாறு நீளமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூன்று குளம்புகளில் மத்தியில் இருந்தது அளவில் பெரிதாகி குதிரையின் முழு எடையையும் அது தாங்கிக்கொண்டது.

ப்ளியோசீன் (Pliocene) காலத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்து ப்ளியோஹிப்பஸாக (Pliohippus) உருவெடுத்த இந்த விலங்கினம்தான் குதிரை, வரிக்குதிரை, கழுதைகளாக வளர்ச்சியடைந்தன. வட அமெரிக்காவிலிருந்து தென் அமெரிக்காவிற்கும் அன்றைய உலகின் மற்ற பகுதிகளுக்கும் இவை பரவியது. யூரேசியாவிற்கும், அரேபியா பகுதிகளுக்கும் பரவிய குதிரை இனம், அதன் தாயகமான அமெரிக்காவில் 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்துவிட்டது. அதன் மறைவிற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், தெளிவான விடை இன்னும் கிடைக்கவில்லை. மீண்டும் 16-ம் நூற்றாண்டில் ஸ்பானியர்களால் அறிமுகப்படுத்தப்படும் வரை அங்கே குதிரைகள் இல்லை.

மனிதர்களின் நாகரிக வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்த இன்றியமையாத விலங்கு, குதிரைகள். அதன் உடல் மற்றும் அறிவுசார் திறன்கள் மிகவும் தனித்துவமானது. அது ஓடிவரும்போது கேட்கும் குளம்பொலிகள்கூட அழகான இசை போன்றிருக்கும் குதிரைப் பிரியர்களுக்கு. இன்றைய நவீன உலகிலும் குதிரைகள் மீது நீங்காத அன்புகொண்ட பலரும் அவற்றை உற்ற நண்பனாகப் பாவித்து அன்போடு வளர்த்து வருகிறார்கள். இத்தகைய குதிரைகளை ஆதியில் நாயளவில் படைத்த இயற்கையின் விசித்திரத்தை, இன்றைய நவீன உலகில் இயந்திரத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாது.Trending Articles

Sponsored