பாசம்... காதல்... கொலை... ஆவணப்படுத்தப்பட்ட கௌசல்யாவின் வாழ்க்கை #ForbiddenLoveSponsoredஉடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலை, அதையொட்டி இன்று வரை நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் திரையில் பதிவு செய்திருக்கிறார் ஆவணப்பட இயக்குநர் சாதனா சுப்ரமணியம். சங்கர் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில், கௌசல்யாவின் மன ஓட்டத்தை நமக்குக் காட்டத் தொடங்குகிறது `India's Forbidden Love: An Honour Killing on Trial' ஆவணப்படம். வாழத் துடித்த அந்த இளைஞன் வெட்டிக் கொல்லப்பட்ட அந்த சிசிடிவி காட்சிகள், நம் மனதை மறுமுறை சிதைக்கின்றன. 

தீர்ப்பு நாளிலிருந்து பின்னோக்கிய ஆறு மாத நிகழ்வுகளை நமக்குக் காட்சிப்படுத்துகிறார் சாதனா. பேருந்தில் சாதனாவுடன் பயணிக்கும் கௌசல்யா, அதைப் போன்றதொரு கல்லூரிப் பேருந்தில் தொடங்கிய அன்பு, விருட்சமாய் வளர்ந்ததைப் புன்னகையோடு நினைவுகூர்கிறார். சங்கரின் அளவற்ற அன்பு, கூச்சசுபாவம், காதலில் காட்டிய கண்ணியம், உறுதி என விவரித்த கௌசல்யா, ``அவன் செலுத்திய பாசம், அதுக்கப்புறம் யாருகிட்டயும் கிடைக்கலை" எனக் கரைகிறார். `` `என்ன வாழ்க்கை இது?' எனத் தோன்றும் மறுகணமே, என்னைப்போல இன்னொரு கௌசல்யாவோ சங்கரோ இருக்கக் கூடாது எனத் தோன்றும்" என்கிறார் தீர்க்கமாக. கௌசல்யாவின் தம்பி கௌதம், தனது குடும்பப் புகைப்படத்தைக் காட்டி, ``நானு, அப்பா, அம்மா அவ்வளவுதான். மூணு பேருதான் தெரியுறோம்" என்கிறார் கௌசல்யாவின் உருவத்தைக் கைகளால் மறைத்தபடி. 

     

Sponsored


கௌசல்யாவின் பாட்டியோ, ``உலகம் பூரா போய்ப் பேசிட்டிருக்கா. எங்களுக்கெல்லாம் கேவலமா இருக்கு. பூரா விஷம் குடிச்சுச் செத்துபோவோம் நாங்க. இப்படியெல்லாம் பேசலாமா. பேசக் கூடாது... சோடனையா சோடிச்சு பூரா பொய் கேஸு போட்டுட்டாங்க. காலேஜு போயி சுயபுத்தி எழந்துட்டா. இதோட நிறுத்தினாத்தான் அவளுக்கு மரியாதி... அவளா வந்தாள்னா பாத்துக்கிருவோம். வராட்டி நாம என்னா செய்யப்போறோம்?" என்றவரை இடைநிறுத்தி, ``ஒன்னய ஒரு வெட்டு, வரவ அவளுக்கு ஒரு வெட்டு. இரண்டு கொல பண்ணிட்டுப் போனா போயிட்டுபோறேன்" என்கிறார் கௌதம். ``பேசாம இரு நீயி" என்கிறார் பாட்டி.

Sponsored


சங்கர் படுகொலை வழக்கில், கடைசி வாதத்துக்குப் பிறகு, குற்றவாளிகள் தரப்பு வழக்குரைஞர் ஏ.பி.ஜெயச்சந்திரன், ``உசிலம்பட்டில பிரமலைக்கள்ளர் சமூகத்துல பொம்பளபுள்ளயலாம் பிறந்தன்னிக்கே கொன்னுருவாங்க. அப்படிப் பண்ணியிருந்தா பிரச்னையே வந்திருக்காது. எங்க ஆளுங்க அப்படிலாம் பண்ணலை. அந்தப் பொண்ணு மென்டல் மெச்சூரிட்டி இல்லாம, கண்டிப்பா வளர்த்ததைத் தப்பா எடுத்துக்கிட்டு சிக்கவெச்சுருச்சுன்னு சொன்னேன்" என்கிறார்.

தீர்ப்பு எப்படியானதாக இருக்கும் என்ற தவிப்பில் இருந்த கௌசல்யா பேசிய வார்த்தைகள் இவை... ``இந்த கௌசல்யாவைப் பார்க்கிறதுக்கே பாவமா இருக்கு. ரொம்ப பாவமா, எதுவுமே தெரியாத பொண்ணாயிருக்கு" என வேறு யாரையோ பற்றிப் பேசுவதைப்போல குறிப்பிட்டவர், ``காலைலேர்ந்து சாயங்காலம் வரைக்கும் விளையாடி, சந்தோஷமா இருந்துட்டு நைட் ஜெயிலுக்குள்ள அடையுற கைதி போலத்தான் இருக்கு என் நிலைமையும்" என்று வெறுமையை விவரிக்கிறார் அவர். தீர்ப்புக்குப் பிறகு, `தாய் விடுதலை' என்கிற பிரேக்கிங் செய்தியைப் பார்த்ததும், ``தாய்... வாவ்! அன்னலட்சுமினு பேர போடச் சொல்லுங்க'' என்கிறார் இயல்பாக.                                                                              

விடுதலையான கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி பேசுகையில், ``நான்தான் கல்யாணம் வேண்டாம்னேன். `பொண்ணு படிச்சு வேலை வாங்கட்டும். பெறகு பாத்துக்கலாம்'னு நான்தான் சொன்னேன். `லவ் பண்ணலை'னு சத்தியம் பண்ணா. `அப்படிச் செஞ்சா உன்னை கொலை பண்ணிருவேன்'னு சொன்னேன். சொந்தக்காரங்க, `இன்னும் ஏன் இரண்டு பேரும் வெக்கமில்லாம உசிர வெச்சுக்கிட்டு இருக்கீங்க'னு கேட்டாங்க. இவ ஒருத்தியால சாதி ஒழிஞ்சுருமா. எவ்வளவோ பேரு முயற்சி பண்ணியும் தீராத ஒண்ணு, இவ முயற்சி பண்ணி விடிஞ்சிருமா. மாத்திட முடியுமா... நாமதான் மாறிக்கணும்" என்கிறார்.

``இருக்கிறதுலேயே பெருசா நினைக்கிறது சாதி ஒழிப்புக்கான என் பயணம்தான். வெற்றியடைஞ்சுட்டேன்னு நினைக்கலை. ஆனா, அதுக்கான அடிக்கல்தான் இது. அடுத்த நடவடிக்கைகளை நோக்கி நகர வேண்டியதுதான். சாதி ஒழிப்புதான் லட்சியம்" எனப் புன்னகைக்கிறார் கௌசல்யா குலையாத உறுதியோடு.

`கௌசல்யா தற்போது போலீஸ் பாதுகாப்புடன் வாழ்கிறார்' என்னும் செய்தியுடன் முடிகிறது ஆவணப்படம்.

``80, 90-களில் இருந்ததைவிட நவீன இந்தியா பலவிதங்களில் மாற்றங்களைக் கண்டிருக்கிறது. எனது பாதி வாழ்க்கையை லண்டனில் கழித்திருந்தாலும், நவீன இந்தியாவுக்கும் பழைமைவாத இந்தியாவுக்கும் இடையே நடக்கும் போர் ஆச்சர்யத்தைத் தருகிறது. இந்த முரணை, படமாக்க வேண்டும் என நினைத்திருந்தேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, சங்கர் படுகொலை செய்யப்பட்ட அந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்தேன். கவனமாகவும் பொறுப்பாகவும் இந்த விஷயத்தைக் கையாண்டால், ஆழ வேர்விட்டிருக்கும் சாதி அமைப்பையும் நவீன இளைஞர்களின் கனவையும் ஒருசேர பிரதிபலிக்கும் ஆவணமாக இருக்கும் என நம்பினேன். பொதுவாக, இத்தகைய சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிடுகிறார்கள். பாதிக்கப்பட்டவரோடு தொடர்புடையவர்கள், பயத்தின் காரணமாகப் பேச மாட்டார்கள். குற்றம் செய்தவர்கள், பேச விரும்பாத நிலையில் இருப்பார்கள். ஆனாலும், எட்டு மாதங்கள் தொடர்ச்சியான முயற்சிக்குப் பிறகு, கௌசல்யா மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பை, அவர்களின் அனுமதியுடன் அவர்களின் வாழ்க்கையை 12 மாதங்களாகப் படமாக்கினோம். காலம் செல்லச் செல்ல, நவீனமயத்தை உள்வாங்கும் இந்தியா, சாதியைப் போன்ற பழைமைவாதக் கூறுகளை அப்படியே வைத்திருப்பதைப் புரிந்துகொண்டேன். மேலும், குற்றம்சாட்டப்பட்ட கௌசல்யாவின் பெற்றோரும் சாதி அமைப்புக்குப் பலியானவர்கள்தான் என்பதும் புரிந்தது. இந்தக் கொலையில் நியாயப்படுத்த எதுவுமில்லை. ஆனால், அந்தக் குடும்பத்தின் மீதான இந்தச் சமூக அழுத்தம் அவர்களை எப்படி மாற்றியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

சமூக அழுத்தங்களைப் புரிந்துகொள்ளாமல், இத்தகைய வன்முறைகளைத் தடுக்க முடியாது. சாதிரீதியான வன்முறையை சமூகப் பண்பாட்டு பிரச்னையாகப் பார்க்காமல், வெறும் சட்டம்-ஒழுங்குப் பிரச்னையாக மட்டுமே அணுகுவது பலன் தராது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். ஆணவக்கொலை மற்றும் சாதிப் பாகுபாட்டைக் குறித்து, இந்த ஆவணப்படம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன். இத்தகைய ஆவணப்படுத்துதல் செயல்பாடு, இந்தப் பிரச்னைகளை விவாதிக்கவும் புரிந்துகொள்ளவும் தீர்ப்பதற்கான வழி தேடவும் உதவும் என நம்புகிறேன்" - ஆவணப்பட இயக்குநர் சாதனா சுப்ரமணியத்தின் பார்வையாக அல்ஜசீரா இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தி இது.Trending Articles

Sponsored