முக்கால் ஏக்கர் நிலத்தில் 30 வகை காய்கறிகள்... இயற்கை விவசாயத்தில் அசத்தும் கல்லூரிப் பேராசிரியர்!



ன்றைய தேதியில் விஷமில்லா காய்கறிகளின் நுகர்வு அதிகரித்துவருகிறது என்பது வெளிப்படையான உண்மை. அதேசமயம் இயற்கை அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் எல்லாம் இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்டதா என்கிற ஐயப்பாடும் சிலருக்கு எழாமல் இல்லை. விற்பனையாளர்கள் சொல்லும் நம்பிக்கை வார்த்தைகள் மட்டும்தான் அங்கே சான்றிதழாகக் கருதப்படுகிறது. இயற்கை விவசாயிகளே களமிறங்கி நேரடியா விற்பனை செய்யும் பொழுது நுகர்வோருக்கு 100 சதவிகிதம் நம்பிக்கை ஏற்படுகிறது. அதற்கான வாய்ப்பு எல்லா இயற்கை விவசாயிகளுக்கும் அமைந்துவிடுவதில்லை. என்னதான் மாங்கு மாங்கு என்று இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தி காய்கறிகள் உற்பத்தி செய்தாலும், அதை மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் சிக்கல்கள் சில இருக்கத்தான் செய்கின்றன. தொலைதூர கிராமத்தில் இருப்பவர்கள் இயற்கை விவசாயக் காய்கறிகளை வழக்கம் போல தினசரி மார்க்கெட், உழவர் சந்தைகள் ஆகிய இடங்களுக்குக் கொண்டுபோய்தான் விற்பனை செய்ய வேண்டியுள்ளது. இயற்கை விவசாய விளைப்பொருள்களுக்கு என்று அங்கு தனி அங்காடிகள் ஒதுக்கப்படவில்லை என்பது முக்கியமான காரணம். அதையும் தாண்டி இயற்கை விவசாயிகள் பலர் நுகர்வோருக்குத் தங்கள் விளைபொருள்களை நேரடியாக விற்பனை செய்து அசத்தி வருகிறார்கள்.

கோயம்புத்தூரை ஒட்டியுள்ள சின்னத்தடாகம் கிராம விவசாய தம்பதியர் சி.ஆர்.ஜெயபிரகாஷ், எஸ்.ஆர்.கீதாப்ரியா ஆகியோர் அந்த அசத்தல் விவசாயிகளில் குறிப்பிடத்தக்கவர்கள். கோவை தனியார் கல்லூரி ஒன்றில் இணைப்பேராசிரியராக வேலைபார்க்கும் ஜெயபிரகாஷ், முக்கால் ஏக்கர் நிலத்தில் முப்பது வகை விளைபொருள்களை இயற்கை முறையில் உற்பத்தி செய்து வீட்டில் வைத்து விற்பனை செய்துவருகிறார்.

Sponsored


Sponsored



ஊரெல்லாம் செங்கல் சூளை... இடையில் ஒரு பசுமைச் சோலை!

Sponsored


கோயம்புத்தூரிலிருந்து வடமேற்கு திசையில் 16 கி.மீ.பயணித்தால் வருகிறது சின்னத்தடாகம் கிராமம். குதிரை லாடம் வடிவில் மேற்குத்தொடர்ச்சி மலை அரணாக நிற்கும் இந்த ஊரைச் சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள்; எதிரும் புதிருமாக `சர்சர்' என்று மண் சாரலை தூவிச்செல்லும் சூளை லாரிகள்; வானம் தொடும் புகை போக்கிகள்; அது ஓயாமல் கக்கும் கரும்புகை மேகங்கள்; இப்படியான சுற்றுச்சூழலைக் காவு வாங்கிகொண்டிருக்கும் இந்த ஊரில் விவசாயம் செய்ய சாத்தியமே இல்லை என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. ஆனால், இங்கே இயற்கை விவசாயம் செய்து அந்த எண்ணத்தை பொய்யாக்கியிருக்கின்றனர் ஜெயபிரகாஷ் தம்பதியினர். காய்கறி வயலில் வேலையாக இருந்தவர்களைச் சந்தித்தோம்.

”பறிச்ச காய்கறிகளை வீடு கொண்டு வந்து சேர்ப்பது மட்டும்தான் நம்ம வேலைங்க. மத்தபடி காய்கறி விற்பனை சமாசாரம் எல்லாம் எங்க வீட்டு அம்மணி பொறுப்புங்க.''  மனைவியை நோக்கி கைகாட்டிப் பேசுகிறார் ஜெயபிரகாஷ். ஆமாங்க... சனிக்கிழமை ஒரு நாள் மட்டும்தான் எங்க காய்கறி விற்பனை நடக்கும். அன்னிக்கு சாயங்காலம் 5 மணி தொடங்கி 7 மணிவரை அடுக்கி வெச்சிருக்கும் காய்கறிகளை வாடிக்கையாளருங்க வந்து அள்ளிட்டு போயிடுவாங்க. அதுக்குள்ள 30 வகை கீரை, காய்கறிகளையும் பறிச்சு, தரம் பிரிச்சு, கட்டுக் கட்டி தயார் பண்ணுவேங்க." என்ற கீதாப்ரியா பரபர எனக் காய்பறிப்பை தொடங்க... மறுபடியும் நம்மிடம் பேசினார் ஜெயபிரகாஷ்.

எனக்குச் சொந்த ஊரே இந்தச் சின்னதடாகம் கிராமம்தான். பரம்பரை விவசாயக்குடும்பம்தான். அப்பா விவசாயத்தோடு செங்கல் சூளை ஒன்னையும் வெச்சு நடத்தி வந்தார். நான் படிச்சு முடிச்சு கொஞ்ச வருஷம் நாளிதழ் ஒன்றில் நிருபரா வேலை பார்த்தேன். அப்புறமா அதை விட்டு கல்லூரி ஆசிரியர் வேலைக்கு மாறிட்டேன். சுற்றுச்சூழல், வன உயிரினங்கள் சம்பந்தமான புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம். விடுமுறை நாள்களில் கேமராவை தூக்கிட்டு மலை காடுகள்னு சுத்தப்போயிடுவேன். இயற்கை மீது தீராத காதல் எனக்கு. அந்தத் தேடல்தான் என்னை `பசுமை விகடன்‘ வாசகரா மாத்திச்சு. 

அப்பா ஊரில் விவசாயத்தையும் செங்கல் சூளையையும் பாத்துகிட்டார். இயற்கை விவசாயம் செய்யணும்கிற என்னோட ஆசைக்குச் சூடான வெப்பக்காத்தை கக்குற சூளை சூழல் ஏற்றதா இல்லை. அதனால, ஓய்வு நாள்களில் சுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மைனு நடக்கிற கூட்டங்களுக்குத் தவறாமல் போய்வந்து என்னோட இயற்கை ஆர்வம் அணையாமல் பார்த்துக்கொண்டேன்.

இந்தச் சமயத்துலதான் என்னோட அப்பா திடீர்னு ஒருநாள் காலமாயிட்டார். கிராமத்திலிருந்த நிலம் என்னோட பொறுப்பில் வந்திச்சு. கல்லூரி ஆசிரியர் வேலையுடன் சேர்த்து விவசாயத்தையும் பார்ப்பதுனு முடிவு செஞ்சேன். மனைவியிடம் சொன்னேன். கண்டிப்பா செய்யலாம் எனது முழு ஆதரவு உங்களுக்கு உண்டு என்று பச்சைக்கொடி காட்டினாங்க. அப்புறம் என்ன? இயற்கை விவசாயம் செய்வதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கினேன். ஆனால், அது உடனே சாத்தியப்படல. என்னோட பண்ணையில் இருந்த செங்கல் சூளை அதற்கு இடைஞ்சலா இருந்திச்சு. அதை தரைமட்டம் பண்ணி, சமன்படுத்தி விவசாயம் செய்வது என்பதாக முடிவு செஞ்சு சூளை இடிப்பு வேலையில் இறங்கினேன்.

‘‘அட... லட்சக்கணக்கில வருமானம் கொடுக்கிற பொன்முட்டையிடும் வாத்து இந்தச் செங்கல் சூளை, அதைப்போய் இடிக்கலாமா? நடத்த முடியலைனா, யாருக்காச்சும் குத்தகைக்கு விட்டாக்கூட, ஆயிரக்கணக்கில் வாடகை வருமே... ராசாமாதிரி வாழலாமே!" என்று பலரும் ஆதங்கமுடன் புத்திமதி சொன்னார்கள். ஆனால், நான் அதையெல்லாம் புறம்தள்ளிவிட்டு, செங்கல் சூளை இடித்து நிலத்தை சமன் பண்ணத்தொடங்கினேன். ஆனால், அது லேசுப்பட்ட காரியமாக இல்லை எனக்கு. பல வருஷங்களாக செங்கல் சூளை சூடுபட்ட நிலம்; மண் இறுகிக்கிடந்தது, அடிமண்ணின் ஈரம் காய்ந்த கருவடாகிப் போயிருந்தது, மண்புழு உள்ளிட்ட எந்த உயிரினங்களும் அற்ற மலட்டு மண்ணாகி இருந்தது என்னோட தோட்டம். அதை பழைய நிலைக்குக் கொண்டுவர, பணச்செலவும் பயங்கர உழைப்பும் செலவானது.  அதையெல்லாம் ஈடுசெய்து பழைய மண்ணில் பலமுறை உழவு செய்து, லோடுக் கணக்கில் மேல் மண்ணாக புதுமண் கொண்டுவந்து கொட்டி இரைத்து ஒரு வழியாக நிலத்தை உயிர்ப்பித்தேன்.

சுப்பையன் சொன்ன பாடம்;

இயற்கை விவசாயம் என்று முடிவுசெய்து அதற்கான வழிமுறைகளைத் தேடத்தொடங்கினேன். அப்பொழுது 2010-ல் கோவை கொடீசியா வேளாண்மைக் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த பசுமை விகடன் ஸ்டாலில் முன்னோடி இயற்கை விவசாயி சுப்பையன் என்பவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கொடுத்த ஆலோசனைப்படி எனது தோட்டத்தில் 10 சென்ட் அளவில் கீரை மற்றும் கத்தரி, தக்காளி, சின்ன வெங்காயம் ஆகிய மூன்றையும் நடவு செய்தேன். ஏற்கெனவே தோட்டத்திலிருந்த நாட்டுரக தென்னைமரங்களையும் இயற்கை முறையில் பராமரித்தேன். பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், மூலிகைப் பூச்சி விரட்டி உள்ளிட்ட இடுபொருள்களை எப்படித் தயாரிப்பது என்பதை சுப்பையன் தனது வயலில் வைத்து எனக்குக் கற்றுத்தந்தார். வேலையின் காரணமாக அவற்றைத் தயாரிக்க முடியாத போது அவரே தந்தும் உதவினார்.

செங்கல் சூளையின் தண்ணீர் தேவைக்காக வட்ட வடிவிலான சிமென்ட் தொட்டிகள் ரெண்டு இருந்திச்சு. அதை இடிக்கப்போவதாகப்  பேச்சுவாக்கில் சுப்பையனிடன் சொன்னபோது, அதை இடித்து அப்புறப்படுத்த வேண்டாம், அந்தத் தொட்டிகளில் சாணம் உள்ளிட்ட மட்கும் தன்மைகொண்ட விவசாயக்கழிவுகளை இட்டு நிரப்பி மண்புழு உர தயாரிப்பு கிட்டங்கியாக வைத்துகொள்ளலாம் என்று ஆலோசனை சொன்னார். அதன் படி இடிக்கப்படாத இரண்டு தண்ணீர் தொட்டிகளில் மண்புழு உர தயாரிப்பு நடக்கிறது.
 

'வீட்டுக்காய்கறி வியாபாரமாச்சு'

நிலத்தை சமன்படுத்தியதும் எங்க வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை இயற்கை முறையில உற்பத்தி பண்ணனும்ன்கிற எண்ணத்துல தோட்டத்துக்கு வந்து போயிட்டிருந்தோம். கல்லூரி ஆசிரியரான எனக்கு அதற்கான நேரமும் இல்லை. அதே சமயம் தோட்டத்துல விளைஞ்ச இயற்கை காய்கறிகளை பறிச்சு கொடுத்திட்டு என்னோட வேலைய பார்க்க போயிடுவேன்" என்று பேசிய ஜெயபிரகாஷை தொடர்ந்து, "அப்புறம் நடந்ததை நானே சொல்றேன்" என்றபடி பேசினார் அவரது மனைவி கீதாப்ரியா

”கீரை, காய்கறினு எங்க தோட்டத்துல வெளைஞ்சதை நாங்க சமைச்சது போக நிறைய மீதமாச்சு. அதை வீணாக்க மனசில்லை. அதனால பக்கத்து வீட்டில வசிக்கிற குடும்பத்தலைவிகள் சிலருக்கு அதை கொடுத்தேன். அவங்களும் சமைச்சுப்பார்த்திட்டு நல்லா இருக்கு. மார்க்கெட் காய்கறிகளைப் போல சீக்கிரத்துல வாடிப்போகாமல் ரெண்டு மூணுநாள் கூட கெட்டுப்போகாமல் இருக்குனு சொன்னாங்க. தொடர்ந்து எங்க தோட்டத்திலிருந்து கணவர் பறிச்சு கொண்டுவந்து கொடுக்கிற காய்கறிகளை அவங்களுக்கு இலவசமா கொடுத்து வந்தேன். அதனோட, சுவையப் பார்த்த அவங்களும், ஒருநாள் ரெண்டு நாள்னா இலவசமா கொடுக்கலாம், இனி ரெகுலராக இந்தக் காய்கறிகள் எங்களுக்கு வேணும், அதனால, இலவசமா எங்களுக்குக் கொடுக்க வேண்டாம், விலைக்கே கொடுங்கணு அன்புக்கோரிக்கை வெச்சாங்க. அதன் படி, எங்க தோட்டத்து கீரை, காய்கறிகளை பக்கத்து வீட்டுக்காரங்களுக்குக் காசுக்கு விற்க ஆரம்பிச்சேன். இயற்கை விவசாயத்துல வெளைஞ்ச காய்கறினு பக்கத்து வீட்டுக்காரங்க மூலம் தெரிஞ்சு கொண்ட இன்னும் சில குடும்பத்தலைவிங்க எங்களுக்கும் உங்க தோட்டத்து காய்கறிகள் வேணும்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.

இதை கல்லூரிக்குப் போயிட்டு வந்த என்னோட கணவரிடம் சொன்னேன். சரி, விற்பதற்கு நீ தயார்னு சொல்லு 10 சென்ட் காய்கறி தோட்டதை 20 சென்ட் அளவுக்கு அதிகப்படுத்துறேன் என்றார். சரி, விற்பனையை நான் பார்த்துகிறேன் விவசாயத்தை நீங்க பாருங்கனு சொன்னேன், அதன்படி கல்லூரி விட்ட மாலை நேரங்கள், விடுமுறை நாள்கள்னு பண்ணைக்குப் போயி இயற்கை விவசாயத்தில் காய்கறி உற்பத்தி செய்ய ஆரம்பிச்சார். 2 பேரா இருந்த என்னோட வாடிக்கையாளர்கள் 10 பேராகி இப்ப 30 பேராகிட்டாங்க. அதே மாதிரி 10 சென்ட்ல தொடங்கப்பட்ட எங்க இயற்கை விவசாயம் இப்ப 75 சென்ட்ல வந்து நிக்குது.

முக்கால் ஏக்கர் முப்பது வகை காய்கறி;

75 சென்டில் ஜெயபிரகாஷ் தம்பதியர் பயிர் செய்யும் 30 வகை காய்கறி மற்றும் கீரைகள்:

1) வெண்டை  2) தக்காளி  3) கத்தரி  4) பூசணி  5 ) அவரை  6) சுரை  7) சுண்டக்காய் 

8) தட்டை  9) முள்ளங்கி  10) கோவைக்காய்  12)  பாகல்  13) பீர்க்கன்  14) சேனை 

15) சின்ன வெங்காயம்  16) பச்சை மிளகாய்  17) காலிஃபிளவர்  18) முட்டைகோஸ் 

19) சாம்பார் பூசணி  20) பீட்ரூட்  21) கேப்பன் கிழங்கு  22) கொத்தமல்லி தழை 

23) பொன்னாங்கண்ணி  24) தண்டுக்கீரை  25) அகத்தி  26) புதினா  27) கறிவேப்பிலை 

28) முருங்கை  29) தேங்காய்  30) நெல்லி 

ஆகிய இவற்றுடன் சீதா, நாவல், கொய்யா, எலுமிச்சை, திராட்சை, சப்போட்டா ஆகிய பழமரங்களையும்,
மகோகனி, குமிழ், நீர்மருது, வேங்கை, செம்மரம், ஈட்டி, சந்தனம், நோனி உள்ளிட்ட நீண்டகாலம் பலன் தரக்கூடிய மரப்பயிர் மற்றும் பழப்பயிர் ரகங்களையும் நடவு செய்து பராமரித்து வருகிறார்கள்

அதேபோல் விற்பனை நோக்கம் இல்லாமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக புன்னை, நாகலிங்கம், மகிழம், பொறசு, மருது ஆகிய மரங்களுடன் சேர்த்து, அரளி, நந்தியாவட்டை செண்பகம், செம்பருத்தி ஆகிய மலர்செடிகளும் இவரது பண்ணையை அலங்கரிக்கின்றன. 
வேர்புழுவை கட்டுபடுத்தும் விதமாக வயலில் பல இடங்களில் பரவலாக செண்டு மல்லி பூச்செடிகளை வளர்த்து வருகிறார்.

இடுபொருள்கள் பயன்பாடு:

தனது 70 சென்ட் நிலத்தில் பயிர்செய்யப்பட்டுள்ள காய்கறிசெடிகளுக்கான பாராமரிப்பு குறித்து விளக்கினார் ஜெயப்பிரகாஷ்

பஞ்சகவ்யா: 

தயாரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை, அதனால, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செயல்படும் வளம்குன்றா வேளாண்மை துறையிலிருந்து மாதம் 5 லிட்டர் பஞ்சகவ்யா கரைசலை விலைக்கு வாங்கி வந்து பயன்படுத்துகிறேன். 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி அளவுல கலந்து செடிகள் பூக்கும் பருவத்திற்கு முன்பும், பிஞ்சு பிடிக்கும் சமயத்திலும், காய் பருவத்தில் என்றும் தலா ஒரு முறை தெளித்து வருகிறேன்.

 மூலிகைப்பூச்சி விரட்டி:

பக்கத்து ஊரான குருடம்பாளையம் பேரூராட்சி சார்பில் இயற்கை உரம் மற்றும் மூலிகைப் பூச்சிவிரட்டி ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள், அங்கு சென்று லிட்டர் 75 ரூபாய் என்கிற விலையில் மூலிகை பூச்சி விரட்டி வாங்கி வந்து, அஸ்வினி, காய்ப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகளை அண்ட விடாமல் தடுக்கும் விதமாக மாதம் இருமுறை 1 லிட்டருக்கு 50 மில்லி வீதம் கலந்து தெளிக்கிறேன்.

அமுதக்கரைசல்:

இதைப் பொறுத்தவரை தயாரிப்பு முறை சுலபமாக உள்ளதால் நாங்களே சுயமாக தயாரித்து (பசும் சாணம், கோமியம், நாட்டு சர்க்கரை, தண்ணீர்) 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் என்கிற அளவில் பாசன நீரில் கலந்து பயிர்களுக்குக் கொடுத்து வருகிறோம்.

மீன் அமிலோ அமிலம்:

பக்கத்து வீட்டு மாடித்தோட்ட விவசாயி ஜெயராமன் என்பவரிடம் வாங்கி பயன்படுத்துகிறோம். லிட்டர் விலை 100 ரூபாய். 1 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்கிற அளவில் கலந்து செடிகளுக்கு நேரடியாக ஊற்றி வருகிறோம். இது ஒரு நல்ல வளர்ச்சி ஊக்கி.

சனிக்கிழமை சம்பாத்தியம் குறித்து பட்டியலிட்டார் கீதாப்ரியா:

பொன்னாங்கண்னி - 5 கட்டு, தண்டுக்கீரை - 10 கட்டு, கொத்தமல்லி தழை - 20 கட்டு, புதினா - 4 கட்டு, அகத்தி - 5 கட்டு,

 பீட்ரூட், முள்ளங்கி, கத்தரி - தலா 5 கிலோ, தக்காளி -10 கிலோ, சுண்டக்காய் - 3 கிலோ, 

காலிஃபிளவர், முட்டைக்கோஸ் தலா - 2 கிலோ, கேப்பன் கிழங்கு 3 கிலோ, சேனை 5 கிலோ (துண்டாக்கி விற்பனை)

பூசணி, சாம்பார் பூசணி தலா ஒன்று ( துண்டாக்கி விற்பனை), சப்போட்ட - 5 கிலோ, நெல்லி 1 கிலோ, கறிவேப்பிலை 1 கிலோ,

முருங்கை - 20 காய், அவரை, தட்டை, தலா 5 கிலோ, வெங்காயம் 10 கிலோ, மிளகாய் 2 கிலோ, கத்தரி 5 கிலோ, பீர்க்கன் 15 கிலோ

பாகல் 10 கிலோ, புடலை 10 கிலோ, கோவைக்காய் 5 கிலோ, வெண்டை 7 கிலோ

ஆகிய 30 வகை காய்கறிகள் மூலம் வாரம் 80 கிலோ வரை காய்கறி / கீரை விற்பனை செய்து வருகிறோம். சராசரியான விலை வைத்து விற்றாலும் எல்லாச் செலவும் போக வாரம் 2,000 ரூபாய் லாபம் கிடைகிறது. ஆட்டு எரு, தொழு உரம், உழவு, பஞ்சகவ்யா, பூச்சி விரட்டி, விதை, களை, நடவு, பறிப்பு, வாகனச்செலவு என்று உற்பத்தி செலவு அதிகம் பிடிக்கிறது. அதேபோல் ஆரம்பகால நிலச்சீரமைப்புச் செலவும் கூடுதலாகிவிட்டது. அதையெல்லாம் நாங்கள் வைத்துள்ள பழமரங்கள் பலனுக்கு வரும் பொழுது ஈடுகட்டிவிடும்; அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும். அதுவரை நஞ்சில்லா உணவு சமைக்க உறுதுணை புரிகிறோம் என்கிற திருப்தி மன நிம்மதி கொடுக்கிறது. எங்களின் இயற்கை விவசாய ஆர்வத்தைப்பார்த்து மாடித்தோட்ட இயற்கை விவசாயிகள் சிலர் அவர்கள் வீட்டில் விளையும் காய்கறிகளில் சிலவற்றை கொண்டுவந்து விற்பனை செய்யக்கொடுக்கிறார்கள். அதையும் மகிழ்வோடு செய்து கொடுக்கிறோம்.
என்றார் கீதாப்ரியா.
 



Trending Articles

Sponsored