கேரள என்கவுன்டரில் இருந்து தப்பி தமிழகத்திற்குள் நுழைந்த மக்னா! - ஒரு கும்கி உருவாகும் கதை - அத்தியாயம் 1



மேற்கு வங்க மாநிலத்தில் குட்டி யானையின் வாலில் தீ வைத்த வீடியோ ஒன்றைப் பார்க்க நேரிட்டது. குட்டி யானையோடு சேர்ந்து இருக்கிற தாய் யானையை நோக்கி தீப்பந்தங்களை வீசுகிறார்கள். அவ்வளவு பெரிய உயிரினம்; காட்டில் ராஜாவாக வலம் வருகிற யானைக்குத் தீ வைப்பதெல்லாம் எவ்வளவு பெரிய வன்மம்? தமிழகத்தில் கூடலூர் பக்கத்தில் காட்டு மக்னா யானையொன்று  குப்பை தொட்டியில் உணவு தேடுகிற  புகைப்படத்தை அவ்வளவு எளிதாகக் கடந்து போக முடியவில்லை. தினம் தினம் யானைகள் அட்டகாசம், யானை பலி, யானை குட்டி மீட்பு, யானைக் கூட்டம் கும்கிகள் உதவியுடன் காட்டுக்குள் விரட்டியடிப்பு என யானைகள் குறித்த செய்திகள் இல்லாத தினசரிகள் இல்லை. உணவு தேடியும், பாதை மாறியும் ஊருக்குள் தோட்டத்துக்குள் செல்கிற யானைகளைப் பட்டாசு வெடித்து விரட்டும் பொழுதுதான் யானைக்கும் மனிதனுக்குமான மோதல் ஆரம்பிக்கிறது. பட்டாசு சத்தத்தில் மிரண்டு போகிற யானைகள் பயிர்களை நாசம் செய்ய ஆரம்பிக்கிறது. அதிகமான உயிர் சேதங்களும், பயிர் சேதங்களையும் விளைவிக்கிற யானைகள் வனத்துறையால் குறிவைக்கப்படுகின்றன. குறிவைக்கப்படுகிற காட்டு யானைகள் வனத்துறையால் பிடிக்கப்படுகின்றன. அதுவரைக்கும் காட்டில் வலம்வந்து கொண்டிருந்த அந்த யானைக்கு அன்றுமுதல் ஒரு பெயர் வைக்கப்படுகிறது; யானை என்பதற்குள்ளாகவே இன்னொரு இனம் கிடைக்கிறது. அந்தப் புதிய இனத்தின் பெயர் 'கும்கி'.

Sponsored


Sponsored


காட்டில் இருக்கிற யானையை வேரோடு பிடுங்கிக் கொண்டுவந்து அதன் குணநலன்களை முற்றிலும் மாற்றி கும்கி எனப் பெயரிட்டு இன்னொரு உலகத்திற்குள் நடமாட வைப்பது சாதாரண செயல் அல்ல. காட்டு யானையைக் கும்கியாக மாற்றுவதற்குப் பின்னால் பல பேருடைய உழைப்பு இருக்கிறது. வெறுமனே உழைப்பு என்று கடந்துவிட முடியாத அளவிற்கு அதில் அர்ப்பணிப்புகளிருக்கிறது. யானையைக் கும்கியாக மாற்றுவதில் முக்கியமானவர் மாவூத். யானைப் பாகன் என்று சொல்வார்களே அதேதான். கும்கி யானைகளுக்கும் அதன் மாவூத்துகளுக்கும் ஒரு பிணைப்பு இருக்கிறது. சிரிப்பும், அழுகையும், கொண்டாட்டமும்  நிறைந்த மாவூத்களின் கதைகள் இது வரை பெரிதாக சொல்லப்படாதவை. மாவூத்துக்களுக்கு உதவியாக இருப்பவர்கள் காவடிகள். குளிப்பாட்டுவது, உணவு கொடுப்பது எல்லாம் காவடிகள் பணி. மாவூத்துகளைக் கடந்து யானைகள் நிலத்தில் “யானை டாக்டர்” என்ற ஒருவர் இருக்கிறார். கும்கி யானைகள் என்றில்லாமல் காட்டு யானைகள் வரை நோய்வாய்ப்பட்ட, காயம்பட்ட அனைத்து யானைகளுக்கும் சிகிச்சையளிக்கிறவர். நள்ளிரவு நேரத்தில் நட்ட நடுக் காட்டுக்குள் மருந்துகளை எடுத்துக் கொண்டு காட்டுக்குள் போகிற யானை டாக்டர்களின் கதைகளெல்லாம் நம் நினைவுகளை நமக்கே தெரியாமல் காடு கடத்துபவை. 

Sponsored


காடுகளிலிருந்து பிடிக்கப்பட்டு முதுமலையில் கும்கியாக இருக்கிற ஒவ்வொரு யானைக்குப் பின்னாலும் ஒரு ஆக்ரோஷமான வரலாறு இருக்கிறது. அப்படியொரு வரலாற்றைக் கொண்ட யானை 'மக்னா'. மக்னா என்பது தந்தம் இல்லாத ஆண் யானை. தந்தங்கள் இல்லாத இந்த யானையின் பலம் முழுவதும் அதன் தும்பிக்கையில் இருக்கிறது. இயற்கையில் இவை பலம் கொண்ட யானைகள். அப்படியான யானையை அவ்வளவு எளிதில் பிடிக்கவும் முடியாது; பழக்கவும் முடியாது. அப்படிப் பிடிக்கப்பட்ட ஒரு மக்னா யானையின் கதைதான் இது.


 

1997 - 98-ம் ஆண்டுகளில் கேரளாவைப் பதட்டத்தில் வைத்திருந்த ஒரு யானை மக்னா. கண்ணில் தென்பட்ட மனிதர்களிலிருந்து பொருட்கள் வரை அனைத்தையும் அடித்து நொறுக்கி அட்டூழியம் செய்து வந்தது. கேரளாவில் மட்டும் 15 மனிதர்களுக்கு மேலாக மக்னா யானையால் கொல்லப்பட்டனர். போகிற வழியெல்லாம் மக்னா கிடைத்ததை நாசப்படுத்தியிருந்தது. பல நேரங்களில் குண்டடி பட்டுத் தப்பித்திருக்கிறது. கேரளாவில் சுமார் 15 குண்டுகள் வரை மக்னா யானையைப் பதம்பார்த்திருக்கிறது. துப்பாக்கி குண்டுகளை சர்வசாதாரணமாகக் கடந்து சென்றது. ஆனாலும் மக்னாவை பிடிக்க முடியவில்லை. மக்னா யானையின் அச்சுறுத்தலுக்குப் பயந்த கேரளா அரசு மக்னா யானையை சுட்டுக் கொல்லும்படி உத்தரவு பிறப்பித்தது. கேரளா வனத்துறையினர் மக்னா யானையை கேரளா வனப்பகுதிக்குள்  வலைவீசித் தேடி கொண்டிருந்தனர். ஆனால் யானை எங்கிருக்கிறது என்கிற எந்தத் தகவலுமில்லை. 1998-ம் வருடம் கூடலூர் சுற்றிய பகுதிகளான மண்வயல், பாட்டவயல் பகுதிகளில் யானை தாக்கி மனிதர்கள் இறப்பது தொடர்ந்து நடைபெற்றது. தமிழக வனத்துறையின் மீது கூடலூர் மக்கள் பெரும் கோபத்தில் இருந்தார்கள். தீவிர விசாரணையில் மக்களைத் தாக்குவது மக்னா யானை எனக் கண்டறிகிறார்கள். கேரள மக்னா யானை தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்தது தெரியவந்தது.

கூடலூர் சுற்றிய பகுதிகளில் சுமார் ஐந்து பேரை அடித்துக் கொன்றது. ஐந்து பேர் கொல்லப்படும் வரை மக்னா யானையைப் பிடிப்பதற்கான எந்த ஆணையும் தமிழக அரசு சார்பாக பிறப்பிக்கவில்லை. அப்போது முதுமலை வன உயிரின சரணாலயமாக இருந்தது. அப்போதிருந்த வன அதிகாரிகள் முதுமலையில் இருந்த சிறந்த கும்கி யானைகளான முதுமலை மற்றும் சுப்பிரமணி ஆகிய இரண்டு யானைகளையும் மண்வயல் வனப்பகுதிக்கு கொண்டு கொண்டு வருகிறார்கள். சுப்பிரமணி யானையின் மாவூத் (பாகன்) கிருமாறன். முதுமலை யானையின் மாவூத் மாறன். இரண்டு கும்கி யானைகளும் மண்வயல் பகுதியில் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறது. ஆனால் கும்கி யானைகள் வனப்பகுதிக்குள் செல்லவில்லை. அடுத்த இரு தினங்களில் ஒரு மாணவனை மக்னா யானை தாக்கி கொன்று விடுகிறது. அதில் கோபமடைந்த பொது மக்கள் கூடலூர் வன அதிகாரி உலகநாதன் என்பவரை  சிறைப்பிடிக்கிறார்கள். கும்கி யானைகளைப் பயன்படுத்தி உடனடியாக மக்னா யானையைப் பிடிக்க வேண்டுமென வேண்டுகோள் வைக்கிறார்கள். உயிருடன் பிடிக்க வேண்டுமென வனத்துறை முயற்சி மேற்கொள்கிறது.

முதுமலை மற்றும் சுப்பிரமணி இரண்டு கும்கி யானைகளும் மக்னாவைத் தேடி காடுகளுக்குள் செல்கின்றன. பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு மக்னா இருக்கிற இடத்தைத் தமிழக வனத்துறை கண்டறிந்தது. தொடர்ச்சியாக  மக்னா யானையின் செயல்பாடுகளை இரண்டு மாவூத்துகளும் கண்காணிக்கிறார்கள்.  உடன் மருத்துவக்குழுவும் வனத்துறை அதிகாரிகளும் இருக்கிறார்கள். நினைத்தவுடன் மக்னாவை பிடித்துவிட முடியாது. குண்டடி பட்டிருப்பதால் மக்னா யானை மூர்க்கமாக இருந்தது. இறுதியில் மண்வயல் பக்கத்தில் மயக்க ஊசியைத் துப்பாக்கி மூலம் செலுத்துகிறார்கள். யானை மிரண்டு பக்கத்திலிருந்த தேயிலை தோட்டத்திற்குள் நுழைகிறது. ஒரு கட்டத்தில்  மக்னா மயக்கமடைந்து கீழே விழுகிறது. அதன் தும்பிக்கையில் கத்தியால் வெட்டப்பட்ட காயம் இருப்பதைப் பார்க்கிற யானை டாக்டர் மக்னாவிற்கு சிகிச்சையளிக்கிறார். விசாரணையில் மக்னா தாக்குதலிலிருந்து தப்பிக்க விவசாயி ஒருவர் வெட்டிய தகவல் கிடைக்கிறது. மக்னாவின் கால்களை இரும்பு சங்கிலியால் கட்டுகிறார்கள். அப்போதெல்லாம் யானைகள் பயணிக்கும்படியான லாரிகள் இல்லையென்பதால் மயக்கம் தெளிந்து எழுந்த யானையை, முன் பின் கும்கி யானைகளின் உதவியுடன் மண்வயல் பகுதியிலிருந்து முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு நடக்க வைத்தே கொண்டு வருகிறார்கள்.

முதுமலை யானை முகாமிற்குக் கொண்டு வருகிற மக்னா யானையை கரோலில் அடைக்கிறார்கள். கரோல் என்பது நூறு தேக்கு மரங்களால் செய்யப்பட்ட யானை கூண்டு.  அதன் கால்கள் மற்றும் உடல்களில் காயங்கள் இருந்ததால் மக்னா யானைக்கு முழு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 20 பேரைக்கொன்ற யானையைக் கும்கியாக மாற்றுவது என முடிவாகிறது. ஆக்ரோஷமான மக்னா யானையை அவ்வளவு எளிதில் கும்கியாக மாற்றிவிட முடியாது என்பதை மாவூதிகளும், மருத்துவர்களும் வன அதிகாரிகளும் நன்கு அறிந்திருந்தார்கள். பின் எப்படி மக்னா  'மூர்த்தி'யானது? யார் அந்த மூர்த்தி?

- தொடரும் 
 



Trending Articles

Sponsored