சூடானோடு முடிந்துவிட்டதா வெள்ளை காண்டாமிருகங்களின் கதை? #NorthernWhiteRhinosமூன்று அடிக்கு அதிகமான நீளம் வரை வளரும் அந்தக் கொம்பு சொல்லும், அவற்றின் பலம் பற்றி. ஒருவரது பலமே அவரது பலவீனம் என்பது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, ஆப்பிரிக்காவின் வடக்கு வெள்ளை காண்டாமிருகங்களுக்கு நன்றாகவே பொருந்தியது. அதிலும், உலகளவில் ஆப்பிரிக்காவின் வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள்தான் இருப்பதிலேயே பெரிய உருவத்தைக் கொண்டவை. கொண்டவை என்பது கொண்டிருந்தவை என்று கடந்த காலமாக மாறும் நிலை வெகுதொலைவில் இல்லை. அவற்றின் இந்த நிலைக்குக் காரணம் மனித இனம்தான் என்று நினைக்கையில் மனதில் சுருக்கென்று வலிக்கிறது.

Sponsored


ஓர் இனத்திடம் இருக்கும் மதிப்பிட முடியாத செல்வத்தின் மீது வேற்றினத்தார் கொள்ளும் பொறாமை அல்லது அந்தச் செல்வத்தை அபகரிக்கத் துடிக்கும் பேராசை, இந்த இரண்டு காரணங்கள்தான் பெருமளவில் அந்த இனத்தின் அழிவிற்கு வழிவகுக்கும் என்பது வரலாறு கற்றுத்தந்த பாடம். அது காண்டாமிருகங்களின் வரலாற்றிலும் நிகழ்ந்துவிட்டது. சுமார் மூன்றரை அடி வரை வளரக்கூடிய வடக்கு வெள்ளை காண்டாமிருகங்களின் கொம்புகளுக்காகப் பல ஆண்டுகளாக அவை வேட்டையாடப்பட்டன. அதன் கொம்புகள் மிகவும் மதிப்பு வாய்ந்தது. வேட்டையினால் அழிந்துகொண்டிருந்த அவற்றின் எண்ணிக்கை 1960-களில் இரண்டாயிரமாகக் குறைந்தது. வரிந்து கட்டிக்கொண்டு வந்த வேட்டைக்காரர்கள் சவால் விட்டு சற்றும் இரக்கமின்றி வேட்டையாடியதில் அடுத்த பதினான்கே ஆண்டுகளில் வெறும் 15 ஆகக் குறைந்தது. காட்டில் வாழ்ந்துகொண்டிருந்த அனைத்தையும் வேட்டையாடி விட்டார்கள். எஞ்சியிருந்த பதினைந்தும் காங்கோவின் கரம்பா தேசியப் பூங்காவில் இருந்தன. அதிர்ச்சியடைந்தது ஆப்பிரிக்கா.

Sponsored


அடுத்த 7 ஆண்டுகளுக்குள் அவற்றைப் பராமரித்து இனப்பெருக்கம் செய்ய வைத்தனர். 1993-ல் அவற்றின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. அந்தச் சமயத்தில், ஆப்பிரிக்காவின் காங்கோ காடுகளில் 20 இருப்பதாகக் கூறப்பட்டது. ஒரே இடத்தில் இருந்தால் வேட்டையில் மொத்தமும் அழிந்துவிடும்; எனவே, வெவ்வேறு இடங்களுக்குப் பிரித்துவிடலாம் என்று கேட்டபோது அந்த நாடு மறுத்துவிட்டது. ஆனால், பிற்காலத்தில் சொன்னதுபோலவே நடந்தது. அந்த இருபதும் மொத்தமாக வேட்டையாடப்பட்டது. காப்பிடத்தில் இருந்த முப்பதும் 2004-ம் ஆண்டு 22 ஆகக் குறைந்தது. ஏழே ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்த எண்ணிக்கை, அடுத்த 11 ஆண்டுகளில் அதன் பராமரிப்பு முறையாக இருந்திருந்தபோதும் குறைந்தது ஏன் என்ற கேள்விக்கு இன்றுவரை விடையில்லை. காலம் கடந்த பிறகுதான் அவற்றை வெவ்வேறு இடங்களில் பிரித்துப் பாதுகாக்க முனைந்தார்கள் என்பது கவலைக்குரியது. காண்டாமிருகங்களின் துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்த இரண்டே ஆண்டுகளில் அவற்றின் எண்ணிக்கை மேலும் குறைந்தது. காப்பிடத்தில் வைத்திருப்பதைவிட காட்டில் அதன் இயல்பான வாழ்க்கைச் சூழலில் விட்டால் அவை விரைவாக இனப்பெருக்கம் செய்ய இயலும் என்ற கண்ணோட்டத்தில் நான்கு காண்டாமிருகங்களை ஆப்பிரிக்க காடுகளில் விட்டார்கள். அரக்கர்கள் அதையும் விட்டுவைக்கவில்லை. ஒன்றையும் விடாமல் வேட்டையாடினார்கள்.

Sponsored


1975-ம் ஆண்டு சிப்பர்ஃபீல்டு சர்க்கஸ் நிறுவனத்துக்காக சூடானின் (இன்றைய தெற்கு சூடான்) ஷாம்பி காட்டிலிருந்து பிடிக்கப்பட்டதுதான் சூடான் என்ற வடக்கு வெள்ளை காண்டாமிருகம். சூடான் உட்பட அதே இனத்தைச் சேர்ந்த 6 காண்டாமிருகங்கள் ஒப்படைக்கப்பட்டன. அப்போது அதற்கு 2 வயதே நிரம்பியிருந்தது. அங்கிருந்து செக் குடியரசின் துவர் க்ரலோவ் மிருகக்காட்சி சாலையால் மீட்கப்பட்டது. அங்கே வாழ்ந்த காலத்தில் சூடான், நஸீமா என்ற இணையோடு இனப்பெருக்கம் செய்ததில் நபீர் என்ற குட்டி 1983-லும், நஜின் என்ற குட்டி 1989-லும் பிறந்தது. இதில் நபீர் 2015-ம் ஆண்டு துவர் க்ரலோவிலேயே உயிரிழந்தது. நஜின், சூடானோடு கென்யாவின் ஒல் பெஜட்டா பூங்காவிற்கு 2009-ம் ஆண்டு இயற்கையான சூழலில் வாழ்வதற்காக இடம் மாற்றப்பட்டது. அங்கே சுனி என்ற இணையோடு சேர்ந்து நஜின், ஃபாட்டு என்ற பெண் குட்டியை ஈன்றது. ஆனால் 2014-ம் ஆண்டு 34 வயதில் சுனி இறந்துவிட உலகில் எஞ்சியிருப்பது மூன்றே வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள்தான் என்ற நிலை ஏற்பட்டது.

இப்போது சூடானுக்கு சுமை இன்னும் அதிகமானது. வம்சத்தைத் தழைக்க வைக்க இருக்கும் ஒரே ஆண் சூடான்தான். ஆனால், அவன் இணைசேரும் தகுதியை இழந்துவிட்டான் என்று முயற்சியின்போது தெரிந்தது. இனப்பெருக்க முயற்சி தோல்வியடைந்தது. அதே நேரம் இருக்கும் கடைசி ஆண் காண்டாமிருகத்தையும் வேட்டையாடப் போவதாக வேட்டைக்குழுக்களிடம் இருந்து அச்சுறுத்தல்கள் வரவே, 24 மணி நேரமும் சூடானைத் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் சூழத் தொடங்கினர். இருப்பினும் கடந்த மாத இறுதியில் பின்னங்காலில் ஏற்பட்ட காயத்தால் மிகவும் பலவீனமடைந்த சூடான், நாளுக்கு நாள் தனது உடல் வலு முழுவதையும் இழந்து எழுந்து நிற்கவே முடியாத நிலைக்கு ஆளானது. மனித ஆயுளில் 90 வயது என்று சொல்லும் அளவிற்கு வாழ்ந்துவிட்ட சூடானின் முதிர்ச்சி காரணமாக அந்தக் காயம் அதன் எலும்புச் சிதைவுக்கு இட்டுச் சென்றுவிட்டது. இதனால் வாழ்வதற்கு மிகவும் சிரமப்பட்ட சூடானை ஊசியின் மூலம் கருணைக்கொலை செய்துவிட அந்தப் பூங்காவின் மருத்துவர்கள் வேதனையோடு முடிவுசெய்தனர்.

"சூடான் மிகவும் அமைதியானவன். அவனருகில் நின்று யாராவது பேசிக்கொண்டிருந்தால், தடவிக் கொடுக்குமாறு கேட்டு எங்களை உரசி, எங்களோடு பேச்சில் கலந்துகொள்வான். அவனது உடல்நிலை மோசமாகி கருணைக்கொலை செய்ய வேண்டிய சூழல் வந்துவிட்டது. இந்த துக்கத்தை எங்களால் தாங்க முடியவில்லை" என்கிறார்கள் சூடானைப் பாதுகாத்து பராமரித்த பாதுகாவலர்கள்.

அதிர்ஷடவசமாக சூடானின் விந்தணுக்கள், அது ஆரோக்கியமாக இருந்த சமயத்திலேயே சேகரித்து பாதுகாத்து வைத்துள்ளனர். நஜின் மற்றும் ஃபாட்டுவின் கருமுட்டையில் சூடானின் விந்தணுக்களைச் செலுத்தி செயற்கையாக கருவுறச் செய்து அந்தக் கருவை தெற்கு வெள்ளை காண்டாமிருகத்தைச் சுமக்கச் செய்து இனப்பெருக்கம் செய்ய ஆராய்ச்சியாளர்கள் முயன்றுகொண்டிருக்கிறார்கள். செயற்கைக் கருத்தரிப்பு மூலம் வடக்கு வெள்ளை காண்டாமிருகங்களை இனப்பெருக்கம் செய்ய இருக்கும் வாய்ப்பு வெற்றிகரமாக நிறைவேற வேண்டும். இந்த ஆராய்ச்சிக்காக உலகம் முழுவதும் இருந்து பல நிதியுதவிகள் வந்துகொண்டிருக்கின்றன.

ஒருவர் கொடூரமாக நடந்துகொண்டால் மிருகத்தனமாக என்று உவமை கூறுவோம். உணவுக்காக மட்டுமே வேட்டையாடும் மிருகங்களை, பேராசைக்காக வேட்டையாடுபவர்களோடு உவமை சொல்வது தவறு. அவர்கள் உலகிலேயே ஆபத்தானவர்கள். சூடானின் இறப்பு, மனித இனத்தின் பேராசையால் நிகழ்ந்த ஒரு பேரழிவின் நினைவுச் சின்னம்.Trending Articles

Sponsored